சென்னையில் மேலும் பத்தாயிரம் ஆட்டோ ரிக்ஷாக்கள் ஓட அனுமதிக்கலாம் என்று தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. இப்போது 52 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன.
இதைவிட சிறிய பெரு நகரங்களான பெங்களூரில் 78 ஆயிரம், ஹைதராபாதில் 64 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடும்போது சென்னையின் ஜனத்தொகைக்கு இன்னும் அதிகமான ஆட்டோக்களை அனுமதிக்கலாம் என சட்டப் பேரவையில் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்த கருத்தை மறுப்பதற்கில்லை.
மெரினா கடற்கரை, கூவம் நதி ஆகியவற்றுக்கு நிகராக சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக உலகப் புகழ் பெற்றது ஆட்டோ ரிக்ஷா. ஒருமுறை பயணித்தால் போதும், வாழ்வில் என்றும் மறக்க முடியாத அனுபவமாக மாற்றும் ஆற்றல் மிகுந்தவர்கள் நமது ஆட்டோ டிரைவர்கள். லட்சக்கணக்கான நடுத்தர மக்களை பைக் அல்லது கார் வாங்க தூண்டியதில் இவர்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிட முடியாது. அழைக்கும் இடத்துக்கு வருவதிலும், கட்டணம் கேட்பதிலும், விதிகளை மதிப்பதிலும் சென்னை டிரைவர்கள் அனுபவிக்கும் வானளாவிய சுதந்திரம் ஏனைய பெருநகரங்களில் இதே தொழிலில் ஈடுபட்டுள்ள உழைப்பாளிகளை பொறாமையில் புகைவிட வைக்கிறது.
மற்ற பிரிவினரை போல இவர்களையும் கட்டுக்குள் கொண்டுவர அரசுகள் எடுத்த முயற்சிகள் பலனளிக்காத சூழலில், புதிய ஆட்டோக்கள் குறித்த அறிவிப்பு வந்திருக்கிறது. தேவைக்கு ஏற்ப அல்லது அதிகமாக சப்ளை இருந்தால் விலை குறையும் என்பது பொருளாதாரம். ஆட்டோ தொழிலில் போட்டி அதிகமானால் அதிக கட்டணம் கேட்க மாட்டார்கள் என்று அமைச்சர் நம்புகிறார். அது சாத்தியமே.
அரசின் முடிவு, நெரிசலான சென்னை சாலைகளில் பயணிகள் நிலைமையை இன்னும் பரிதாபமாக்கிவிடும் என்று சிலர் விமர்சிக்கின்றனர். கார், பைக், பஸ், லாரிகள் எல்லாம் போக்குவரத்து விதிகளை மதித்து இயங்குவது போலவும், ஆட்டோ டிரைவர்கள் மட்டுமே அடாவடியாக ஓட்டி பிரச்னை ஏற்படுத்துவது போலவும் பேசுவதில் உண்மை இல்லை. வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் பிடியிலிருந்து ஆட்டோ பெர்மிட்டை விடுவித்து, தகுதியுள்ள இளைஞர்கள் தேர்வு செய்யக்கூடிய தொழிலாக இது மாறுமானால் சென்னையின் சாலைகளில் இதுவரை கண்டிராத ஒழுங்கு நிலைபெற வழி பிறக்கும். நகரின் பெருமையை மீட்டெடுக்கும்.

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget