இந்தியாவின் வட மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ள அழகான சுற்றுலாத் தலம்தான் மணாலியாகும். இது சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாகத் திகழ்கிறது.
இமயமலையின் அடிவாரத்தில் கடல் மட்டத்திலிருந்து 2 ஆயிரம் மீட்டர் உயரத்தில் மணாலி அமைந்துள்ளது. பீஸ் நதிக்கரையில் இந்த சிறிய புகழ்பெற்ற சுற்றுலாத் தலம் அமைந்திருப்பது இன்னுமொரு சிறப்பாகும்.
மணாலியைச் சுற்றி அடர்ந்த பைன், செஸ்ட்நட், டியோடர் மரக் காடுகள் அழகுக்கு அழகு சேர்க்கின்றன. இதில் மற்றுமொரு விஷயமும் இருக்கிறது. அதாவது 6,600 மீட்டருக்கு மேல் உயர்ந்த, பனி படர்ந்த சிகரங்களும் அமைந்திருப்பது கண்ணிற்கும் விருந்தாகிறது.
மணாலி, குலு மாவட்டத்தின் ஒரு பகுதியாகும், இதன் மக்கள்தொகை சுமார் 30,000. சப்தரிஷிகள் அல்லது ஏழு துறவிகளின் தாயகமாக மணாலி கூறப்படுவதால், மணாலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி இந்திய கலாச்சாரம் மற்றும் பண்பாட்டில் மிக உயர்ந்த முக்கியத்துவம் பெற்றதாகும்.
மணாலி அமைந்துள்ள குலு பள்ளத்தாக்குப் பகுதியின் எல்லா இடங்களையும் போல இங்கும் ஆப்பிள் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. சாலையோரங்களில் கூட ஆப்பிள் மரங்கள் காட்சியளிக்கின்றன.
சாதாரணமாக சுற்றிப்பார்க்கும் சுற்றுலாப் பயணிகளை விட, இயற்கையை அதிகம் நேசிப்பவர்களுக்கும், சாகசம் புரிய ஆவல் இருப்பவர்களுக்கும் மணாலி ஒரு சொர்க்கபுரியாகும்.
குறிப்பாக இப்பகுதிக்கு வர வேண்டும் என்றால் நல்ல உடல் ஆரோக்கியம் இருப்பது மிகவும் அவசியம். ஏனெனில் இங்கு அடர்ந்த காட்டுக்குள் நடைப் பயணமாக சென்று காட்டினை ரசிக்கும் வசதியும் உண்டு. மலை ஏறலாம், மலைப் பாதையில் வாகனம் ஓட்டலாம், பனிச்சறுக்கு, பாராகிளைடிங், நதியில் படகு செலுத்துவது போன்ற சாகசங்கள் புரிய ஏற்ற இடமாக மணாலி இருக்கிறது.
மலை ஏற்றம் குறித்து பயிற்சி பெற விரும்பினாலும், இங்குள்ள மலையேற்றக் கல்வி நிறுவனத்தின் மூலமாக பயிற்சி பெறலாம்.
இந்த மணாலி நகரத்திற்கு பெயர் காரணம் கூறப்படுகிறது. பிராமண சாஸ்திர உருவாக்குனரான மனுவின் பேரில் மணாலி என்ற பெயர் இடப்பட்டிருக்கிறது. மணாலி என்னும் வார்த்தையின் பொருள் “மனுவின் இருப்பிடம்” என்பதாகும். உலகத்தை பெருவெள்ளம் மூழ்கடித்த போது மனித வாழ்க்கையை மீண்டும் படைப்பதற்காக மணாலியில் தனது படகில் இருந்து துறவியான மனு இறங்கி வந்ததாக புராணக் கதை கூறுகிறது. மணாலி "கடவுள்களின் பள்ளத்தாக்கு" என்றும் அழைக்கப்படுகிறது.அவரது நினைவாக மணாலியின் பழைய நகர்ப்பகுதியில் ஓடிக் கொண்டிருக்கும் மனால்சு நதிக்கரையில் மனுவுக்கு ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது.