உலகின் அதிகாரமிக்க 100 பேருக்கான இந்த ஆண்டின் டைம்ஸ் பத்திரிகையின் பட்டியலில் பிரதமர் மன்மோகன், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இடம்பெற்றுள்ளனர்.
அமெரிக்காவை சேர்ந்த டைம்ஸ் பத்திரிகை, ஆண்டுதோறும் அதிகாரமிக்க உலக பிரபலங்கள் பட்டியலை வெளியிடுகிறது. இந்த ஆண்டின் பட்டியலை அது நேற்று வெளியிட்டது. அதில் பிரதமர் மன்மோகன் சிங், சச்சின் டெண்டுல்கர், தமிழ்நாட்டை சேர்ந்த நம்பெருமாள்சாமி உட்பட 9 இந்தியர்கள் இடம்பிடித்துள்ளனர்.
இந்த ஆண்டின் சிறந்த அரசியல் தலைவர்கள் வரிசையில் பிரேசில் அதிபர் லூயிஸ் இனசியோ லுலா 1397904493 சில்வா முதலிடத்தில் உள்ளார். அமெரிக்க அதிபர் பரக் ஒபாமாவுக்கு 4வது இடம் கிடைத்தது. பிரதமர் மன்மோகன் சிங், 19வது இடத்தில் உள்ளார்.
அவரைப் பற்றி பெப்சி நிறுவன தலைவரும், இந்தியருமான இந்திரா நூயி கூறுகையில், “1991 முதல் 1996 வரை நிதி அமைச்சராக இருந்த மன்மோகன், இந்திய மக்கள் பயன்பெறத் தேவையான நாட்டின் வளங்களை அடையாளம் கண்டார். பிரதமராக இப்போது நாட்டை வழிநடத்திச் செல்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
டாப் 25 வீரர்கள் வரிசையில் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்கு 13வது இடம் கிடைத்தது. வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு நிதி திரட்டி வரும் அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டனும் அந்த வரிசையில் உள்ளார்.
டெண்டுல்கர் பற்றி குறிப்பிடுகையில், “சர்வதேச ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த சச்சினுக்கு இந்தியாவில் பல கோடி ரசிகர்களும், உலகில் கணக்கிலடங்கா எண்ணிக்கையில் ரசிகர்களும் உள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.
டைம்ஸ் வெளியிட்ட முந்தைய பிரபலங்கள் பட்டியலில் இடம்பிடித்து இப்போதும் ஜொலித்து வருவோர் வரிசையில் பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் இடம்பெற்றுள்ளார்.
1976 முதல் இதுவரை சுமார் 36 லட்சம் பேருக்கு கண் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்து வரும் தமிழரான அரவிந்த் கண் மருத்துவ மனை டாக்டர் பெருமாள்சாமி நம்பெருமாள்சாமி, பெண் தொழிலதிபர் கிரண் மஜும்தார், டொரான்டோவை சேர்ந்த டாக்டர் ராகுல் சிங் உட்பட மொத்தம் 9 இந்தியர்கள் இந்த ஆண்டு பிரபலங்கள் பட்டியலில் உள்ளனர்.