பெட்ரோல் மற்றும் டீஸல் விலை உயர்வு வரும்.. ஆனால் வராது.. என்று பல மாதங்களாக எதிர்பார்த்து கொண்டிருந்த புலி வந்துவிட்டது. பெட்ரோலிய பொருட்களின் விலைகளை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு மூன்றரை ரூபாய் அதிகரிக்கிறது.
‘பைக் வைத்திருப்பவருக்கு மாதம் 35 ரூபாயும், கார் என்றால் 150 ரூபாயும் கூடுதலாக செலவாகும்; அவ்வளவுதான்’ என்று பெட்ரோலிய துறை செயலாளர் அப்பாவி பாவனையுடன் விளக்கியது சுவாரசியம். டூவீலர் என்றால் 10 லிட்டர், காரில் செல்வோர் 40 லிட்டரில் மாதத்தை ஓட்டுகின்றனர் என்பது அவர் கணக்கு. அது உண்மையாக இருக்குமானால் யாரும் கலங்கப் போவதில்லை. விலையில் பாதி வரிகள் என்ற நியதி மாறாதவரை, நடப்பதற்கு தரும் ஊக்கத்தொகைதான் விலை உயர்வு.
டீசல் 2 ரூபாய் அதிகரிப்பது நிச்சயம் பாதிக்கும். பஸ், லாரி போக்குவரத்து டீசலை நம்பி இருப்பதால் கட்டணங்கள் உயர்ந்து அதனால் பொருட்களின் விலையும் உயரும். அடக்க விலையை விட ரூ.3.80 குறைத்து டீசல் விற்கப்பட்டது. நேற்றைய உயர்வால் நஷ்டம் 1.80 ஆக குறையும். சீக்கிரமே இதையும் பெட்ரோல் போல சந்தை விலையுடன் இணைத்துவிட அரசு முடிவு செய்திருக்கிறது. அதாவது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஏறினால் இதுவும் ஏறும்; அங்கே குறைந்தால் இங்கும் அதே.
அரசே விலை நிர்ணயிப்பதால் எண்ணெய் கம்பெனிகளுக்கு ஏற்படும் இழப்பை சரிக்கட்ட ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி மானியமாக கொடுக்கிறது. ஒரு லிட்டர் கெரசினுக்கு ரூ.18.12, ஒரு சிலிண்டர் எல்.பி.ஜி.க்கு ரூ.261.90 மானியம். இரண்டும் நடுத்தர, ஏழை மக்கள் பயன்படுத்துவது என்பதால் இவற்றின் விலையை இப்போதைக்கு சந்தையுடன் இணைக்கும் உத்தேசம் கிடையாதாம். எட்டு வருடமாக கெரசின் விலை மாறவில்லை. முறையே ரூ.3, ரூ.35 கூடுவதால் அரசின் இழப்பு கணிசமாக குறைந்துவிடாது. இலக்கை நோக்கிய முதல் அடி இது.
ஏழைகளை பாதுகாக்க திட்டமிட்டு அறிமுகம் செய்த மானியங்கள் மற்றவர்களுக்கு பயன்படுவதே அதிகம். டீசல் கார்களும், ஜெனரேட்டர்களும் சாட்சி. நிர்வாக சீர்திருத்தத்திலும் கவனம் செலுத்த அரசு தீர்மானித்தால், இந்த நடவடிக்கையால் நல்ல பலன்கள் கிடைக்கும்.