இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான யுவராஜ் சிங் 3வது ஐ.பி.எல். தொடரில் சோபிக்கவில்லை. அவர் இடம் பெற்றிருந்த பஞ்சாப் அணி படுதோல்வி அடைந்து கடைசி இடம் பிடித்தது. 14 ஆட்டத்தில் யுவராஜ்சிங் வெறும் 255 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்நிலையில் வெஸ்ட் இண்டீசில் வரும் 30&ம்தேதி துவங்கும் உலககோப்பை 20&20 தொடரில் அசத்துவேன் என்று யுவராஜ்சிங் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
ஐபிஎல் தொடரில் சோபிக்காதது வருத்தமளிக்கிறது. மணிக்கட்டு காயத்திலிருந்து மீண்ட நான் உடனடியாக ஐ.பி.எல். தொடரில் பங்கேற்றது நெருக்கடியாக அமைந்தது. இதனால் நூறு சதவீத ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. தற்போது எனது கவனம் முழுவதும் 20&20 உலக கோப்பை தொடர் மீது திரும்பியுள்ளது.
பீல்டிங் முக்கிய பங்குவகிக்கும் என்பதால் சிறப்பு பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை தொடரில் இந்திய அணி பெரிதளவில் சாதிக்கவில்லை.
இம்முறை பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சிறந்த வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதால், கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. சேவாக் இல்லாதது பின்னடைவுதான். இருப்பினும் மாற்றுவீரராக தேர்வு செய்யப்பட்டுள்ள முரளி விஜய் நம்பிக்கை அளிப்பார்.