உலகின் மிக அழகான நடிகைகள் பட்டியலில் ஹாலிவுட் நடிகை ஜூலியா ராபர்ட்ஸ் முதலிடம் பிடித்தார். அழகு
சர்வதேச பிரபல பத்திரிகையான ‘பீப்பிள்’, ஆண்டுதோறும் சிறப்பு இதழை வெளியிடுகிறது. அதில் உலகின் அழகான நடிகைகள் குறித்து விரிவான ஆய்வு நடத்தி முடிவை அறிவிக்கிறது. முதலிடம் பிடிப்பவரை அட்டைப் படத்தில் இடம்பெறச் செய்து கட்டுரையையும் வெளியிடுகிறது. இந்த ஆண்டின் சிறப்பிதழ் வெளியாகியுள்ளது. அதில் உலகின் மிக அழகான நடிகையாக ஜூலியா ராபர்ட்ஸ் முதலிடம் பிடித்துள்ளார். பீப்பிள் பத்திரிகையின் ஆண்டு சிறப்பிதழில் ஜூலியா இடம் பிடிப்பது இது 12வது முறையாகும். இப்போது 42 வயதாகும் ஜூலியாவுக்கு 5 வயதில் இரட்டைக் குழந்தைகளும், 2 வயது மகனும் உள்ளனர்.
இந்த ஆண்டின் அழகிய நடிகை பட்டியலில் 2வது இடத்தை ஹேலே பெரியும், 3வது இடத்தை ஏஞ்சலினா ஜூலியும் பிடித்தனர். ஜெனீபர் லோபசுக்கு 4வது இடம் கிடைத்தது. இயக்குனர் கேரி மார்ஷலின் ‘ப்ரெட்டி உமன்’ என்ற படம்தான் ஜூலியாவுக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. அவரைப் பற்றி கேரி கூறுகையில், “எனது படத் தலைப்புக்கு ஏற்ப ஜூலியா ஒரு பேரழகி. இப்போது ஒரு தாயாக அமைதியான, பதட்டமில்லாத வாழ்க்கையை கொண்டுள்ளார்” என்றார்.
‘எரின் ப்ரோக்கோவிச்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்ததற்காக ஜூலியா ராபர்ட்ஸ் 2001ல் ஆஸ்கர் விருது பெற்றார். ‘ஈட், ப்ரே, லவ்’ என்ற படத்தில் இப்போது நடித்து வருகிறார். ஆகஸ்ட் மாதத்தில் அந்தப் படம் வெளியாகிறது. அழகிய நடிகைகள் பட்டியலில் ஜெனீபர் அனிஸ்டன், பியான்ஸ் நோலஸ், பிராட்லி கூப்பர், பேட்ரிக் டெம்சேவும் இடம்பெற்றுள்ளனர்.