உள்நாட்டு தொழில்நுட்பத்தில் கட்டிய ஐ.என்.எஸ். ஷிவாலிக் கடற்படையில் சேர்ப்பு
எதிரிகளின் ரேடார்களில் சிக்காமல் ஊடுருவி தாக்குதல் நடத்தக்கூடிய இந்தியாவின் முதல் அதிநவீன போர் கப்பலான ‘ஐ.என்.எஸ். ஷிவாலிக்’, கடற்படையில் சேர்க்கப்பட்டது.
இந்திய கடற்படை நவீனப்படுத்தப்பட்டு, போர் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து போர் கப்பல்கள் வாங்கப்பட்ட நிலைமை மாறி, இப்போது உள்நாட்டு தொழில்நுட்பத்தில் அதிநவீன போர் கப்பல்களை கட்டும் திறனை இந்தியா பெற்றுள்ளது.
எதிரிகளின் ரேடார்கள் மற்றும் கண்காணிப்பு கருவிகளின் கண்ணில் சிக்காமல், மாயாவி போல் ஊடுருவித் தாக்குதல் நடத்தக் கூடிய அதிநவீன போர் கப்பல்களை (ஸ்டீல்த் பிரிகேட்ஸ்) உள்நாட்டு தொழில்நுட்பத்தில் கட்டும் திறனை அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், சீனா, ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகள் மட்டுமே இப்போது பெற்றுள்ளன.
இதுபோன்ற கப்பலை உள்நாட்டு தொழில்நுட்பத்தில் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, மும்பையில் உள்ள மஜ்காவ் கப்பல் கட்டும் தளத்தில் 3 கப்பல்களை கட்டும் பணி தொடங்கியது. அதில், ‘ஐ.என்.எஸ். ஷிவாலிக்’ என்ற போர் கப்பல் ரூ.2,300 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது.
பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி தலைமையில் மும்பையில் நேற்று நடைபெற்ற விழாவில் இந்த போர் கப்பல் கடற்படையில் சேர்க்கப்பட்டது.
இதன் மூலம், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் ‘ஸ்டீல்த்’ ரக போர் கப்பல் என்ற பெருமையை இது பெற்றுள்ளது. இந்த கப்பல் 6,100 டன் எடையும், 142.50 மீட்டர் நீளமும் 16.9 மீட்டர் அகலமும் கொண்டது. விமானங்களையும், நீர்மூழ்கிக் கப்பல்களையும் தாக்கி அழிக்கும் அதிநவீன ஏவுகணைகளை வீசும் வசதியை பெற்றது. ஹெலிகாப்டரையும் தாங்கிச் செல்லக் கூடியது. இந்த கப்பலில் 35 அதிகாரிகள் உட்பட 257 பேர் பணியில் இருப்பார்கள்.
ஷிவாலிக்கை தொடர் ந்து இதே ரகத்தில் ஐ.என்.எஸ். சத்புரா, ஐ.என்.எஸ். சயாத்ரி ஆகிய போர் கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. இவை இந்த ஆண்டிலும், அடுத்த ஆண்டிலும் கடற்படையில் சேர்க்கப்பட உள்ளன.
ஏ.கே.அந்தோணி பேச்சு
கடல் பகுதி பாதுகாப்பு
சவாலாக மாறிவிட்டது
மும்பை கடற்படை தளத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் ஏ.கே. அந்தோணி பேசியதாவது:
நாட்டின் கடற்பகுதி கடந்த காலத்தில் அச்சுறுத்தல்களை சந்தித்துள்ளது. மும்பை தீவிரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு, இந்திய பெருங்கடல் மற்றும் அதற்கு அப்பால் நம்மை சுற்றியுள்ள கடற்பகுதி பாதுகாப்பு சூழ்நிலை பதற்றமானதாக உள்ளது. கடற்கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. நாட்டின் வர்த்தக கப்பல் போக்குவரத்தையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு எந்த ஒரு சூழ்நிலையையும் சந்திக்க இந்திய கடற்படை தயாராக இருக்க வேண்டும். கடல் பகுதி பாதுகாப்பு சவாலாக மாறி விட்டது.
இவ்வாறு அந்தோனி பேசினார்.

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget