உலக கோப்பை டி20 தொடரில், இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் இன்று மோதுகிறது.

மூன்றாவது உலக கோப்பை டி20 தொடர் வெஸ்ட் இண்டீசில் நடக்கிறது. இதில் 12 அணிகள் பங்கேற்கின்றன. சி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் இன்று மோதுகிறது. செயின்ட் லூசியா, பியூசெஜோர் ஸ்டேடியத்தில் நடக்கும் இப்போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
இந்திய அணியில் விஜய், கம்பீர், ரெய்னா, யுவராஜ், யூசுப் பதான், டோனி, ரவீந்திர ஜடேஜா ஆகிய அதிரடி பேட்ஸ்மேன்கள் இருப்பதால் உற்சாகமாகக் களமிறங்குகிறது. ஜாகீர், பிரவீன், நெஹ்ரா வேகத்துடன் ஹர்பஜனின் அனுபவ சுழலும் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கும். இவர்களுடன் யுவராஜ், ரெய்னா, பதான், ஜடேஜா ஆகியோரும் சுழற்பந்து வீச்சில் கை கொடுக்கலாம்.
இந்திய வீரர்கள் பலரும், ஐபிஎல் தொடரில் விளையாடி நல்ல பார்மில் இருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும், கற்றுக் குட்டி அணியான ஆப்கானிஸ்தானை அலட்சியமாக நினைத்தால் இந்திய அணிக்கு ஆபத்துதான். கொஞ்சம் சறுக்கினாலும் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேற வேண்டியிருக்கும்.
2007ல் நடந்த முதலாவது உலக கோப்பை டி20 தொடரில், பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணி ஜிம்பாப்வேயிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. நவ்ராஸ் மங்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி எந்தவித எதிர்பார்ப்பும், நெருக்கடியும் இல்லாமல் களமிறங்குகிறது.
அந்த அணியின் பயிற்சியாளர் கபிர் கான் கூறுகையில், ‘எங்கள் அணி வீரர்கள் பற்றி யாருக்கும் அதிகம் தெரியாது. அதுவே சாதகமான அம்சம்தான். ஆனால், இந்திய அணி வீரர்களின் ஆட்ட முறையை நன்றாக அறிந்து வைத்திருக்கிறோம். ஐபிஎல் தொடரில் அவர்கள் விளையாடியதை கவனித்து, அதற்கேற்ப வியூகங்கள் வகுத்துள்ளோம். வெற்றிக்காகப் போராடுவோம்’ என்றார்.
தொடக்க வீரர் கரிம் சாதிக், அதிரடி பேட்ஸ்மேன் நூர் அலி ஸர்டான் இருவரும் இந்திய பந்துவீச்சை சிதறடிக்க காத்திருக்கின்றனர். நூர் அலி முதல் தர அறிமுக போட்டியின் 2 இன்னிங்சிலும் சதம் விளாசியுள்ளார். ஹமித் ஹசன், ஷபூர் ஸத்ரான் வேகப்பந்துவீச்சு இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும்.
முன்னாள் சாம்பியனும், அறிமுக அணியும் மோதும் இப்போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தான்
நவ்ராஸ் மங்கள் (கேப்டன்),
அஸ்கர் ஸ்டானிக்ஸாய், தவ்லத் அகமத்ஸாய், ஹமித் ஹஸன், கரிம் சாதிக், மிர்வாய்ஸ் அஷ்ரப், முகமது நபி, முகமது ஷாஷத், நஸ்ரதுல்லா, நூர் அலி, ரயீஸ் அகமதுஸாய், சமியுல்லா ஷென்வாரி, ஷபீர் நூரி, ஷபிகுல்லா, ஷபூர் ஸத்ரான்.
இந்தியா
டோனி (கேப்டன்),
கம்பீர், விஜய், ரெய்னா, யுவராஜ், யூசுப் பதான், ரோகித் ஷர்மா, ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், ஹர்பஜன், பியுஷ் சாவ்லா, ஜாகீர் கான், பிரவீன் குமார், ஆசிஷ் நெஹ்ரா, வினய் குமார்.

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget