நிராயுதபாணியை மறைந்திருந்து கொல்வதை போன்ற கோழைத்தனம் வேறேதுமில்லை. துப்பாக்கிகள், கண்ணிவெடிகளுடன் திரியும் பயங்கரவாத இயக்கங்கள் எல்லாமே அதை செய்திருக்கின்றன. மாவோயிஸ்ட் என்ற பெயர் சூட்டிக் கொண்டு அலையும் இந்திய நக்சலைட்களும் தங்கள் கோழைத்தனத்தை அதே பாணியில் உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டுகிறார்கள்.
மேற்கு வங்கத்தில் தண்டவாளத்துக்கு குண்டு வைத்து பயணிகள் ரயிலை கவிழ்த்து அதன் மீது சரக்கு ரயில் மோதி 75 நிராயுதபாணி அப்பாவிகளை மிகக் கொடூரமாக கொன்றிருக்கிறார்கள். எந்த இடத்தில் தண்டவாளம் எப்படி வளைந்தால் ரயில் பெட்டிகள் அடுத்த தண்டவாளத்தில் கவிழும் என்பதை துல்லியமாக கணக்கிட்டு நாசவேலையை கச்சிதமாக நடத்தி முடித்திருக்கிறார்கள் கொலைகாரர்கள். உழைத்து சம்பாதித்த பணத்தில் ஒரு மாதம் முன்பே டிக்கட் பதிவு செய்து தொலைதூரத்தில் வசிக்கும் உறவுகளை சந்தித்து விடுமுறையை கழிக்க குடும்பம் குடும்பமாக புறப்பட்ட சாதாரண மக்களுக்கு மாவோயிஸ்டுகளோடு என்ன பிணக்கு? கண் மூடித் தூங்கி கனவுகளில் மிதந்த ஆண், பெண், குழந்தைகளை அடையாளம் காணமுடியாத அளவுக்கு சிதைத்ததால் மாவோயிஸ்டுகளின் இலக்கு நெருங்கிவிட்டதா?
மது பணம் புகழ் அதிகாரம் போன்றவை சுவைக்க சுவைக்க போதையேறி இன்னும் இன்னும் என்று ஏங்க வைப்பது போல ரத்த தாகமும் இறுதிவரை தணியாது. நாட்டில் 90 மாவட்டங்களில் மாவோயிஸ்ட் வன்முறை தொடர்ச்சியாக நடக்கிறது. ஆறு ஆண்டுகளுக்கு முன் 9 மாநிலங்களில் 55 மாவட்டங்களில் இந்த நக்சலைட் நடமாட்டம் இருப்பதாக ஆய்வு மூலம் தெரியவந்தது. இன்றைய நிலவரப்படி அது 20 மாநிலங்கள், 223 மாவட்டங்கள் என பெருகியிருக்கிறது. சென்ற ஆண்டு ரயில்வே சொத்துக்கள் மீது 32 முறை மாவோயிஸ்ட் தாக்குதல் நடந்தது. இந்த ஆண்டு தாக்குதல் எண்ணிக்கையை குறைத்து உயிர் பலியை அதிகரித்துள்ளனர். தண்டேவாடாவில் இரண்டு அட்டாக்கில் சதம் தாண்டிவிட்டனர்.
ஆதிவாசி நலன் காக்க என்று சொல்லி கொடி தூக்கியவர்களின் கொலைவெறி உச்சத்துக்கு செல்வதை சமீபத்திய சம்பவங்கள் பிரதிபலிக்கின்றன. இந்த நிலையிலாவது மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைந்து தெளிவான திட்டத்துடன் களமிறங்க வேண்டும். இனியும் தாமதமானால், மக்களின் நம்பிக்கை காளஹஸ்தி கோபுரம் போல முற்றிலுமாக தகர்ந்துவிடும்.