மங்களூரில் 158 பேரின் உயிரை குடித்த விமான விபத்துக்கு உண்மையான காரணம் என்ன என்பதற்கான ஆய்வு தொடங்கியுள்ளது.

இதற்காக உருவாக்கப்பட்டுள்ள விசாரணைக்குழுவினர் மங்களூரில் முகாமிட்டு விபத்து நடந்த இடம் மற்றும் ஓடு தள பகுதிகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.
விபத்து ஏற்பட்டதற்கு விமானி செய்த தவறு காரணமா அல்லது விமானம் தரை இறங்கும்போது தொழில் நுட்ப கோளாறு ஏதேனும் ஏற்பட்டதா? என்பதற்கு இன்னமும் உறுதியான முடிவு கிடைக்கவில்லை. விமான கருப்புப்பெட்டிகளில் ஆய்வு செய்தால்தான் விபத்துக்கான உண்மையான காரணத்தை கண்டுபிடிக்க முடியும் என்ற நிலை நிலவுகிறது.
விபத்துக்குள்ளான போயிங் 737 ரக விமானத்தில் சிவிஆர் என்றழைக்கப்படும் விமானியின் உரையாடல் பதிவு கருவி, டிஎப்டிஆர் என்றழைக்கப்படும் விமான இயக்கத்தை பதிவு செய்யும் தொழில்நுட்ப கருவி ஆகிய 2 கருவிகள் உண்டு. இந்த 2 கருவிகளும் கருப்புப்பெட்டிகள் என்றழைக்கப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த கருப்புப்பெட்டிகளை தேடும் பணி தொடங்கியது. அன்று சிவிஆர் கருப்புப்பெட்டி சிக்கியது. இதில் விமானியின் கடைசி நிமிட உரையாடல்கள், விமான அறையில் எழுந்த சத்தங்கள் அனைத்தும் பதிவாகி இருக்கும்.
டிஎப்டிஆர் கருப்புப்பெட்டி மட்டும் கிடைக்காமல் இருந்தது. டெல்லியில் இருந்து வந்த விமான இயக்குனரக அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தை சல்லடை போட்டுத்தேடினார்கள். 4-வது நாளாக இன்று காலை 9 மணிக்கு கருப்புப்பெட்டியை தேடினார்கள்.
காலை 9.55 மணிக்கு டிஎப்டிஆர் கருப்புப்பெட்டியை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். 72 மணி நேர தேடுதலுக்குப்பிறகு இந்த கருப்புப்பெட்டி கிடைத்துள்ளது. விபத்து நடந்த பகுதியில், இடம் மாறி விமான சிதைவுகளுக்குள் போய் சிக்கியதால், இந்த கருப்புப்பெட்டி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் கூறினார்கள்.
டிஎப்டிஆர் கருப்புப் பெட்டிதான் மிக, மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் இந்த கருவியில்தான் விமானம் எவ்வளவு வேகத்தில் வந்தது? எந்த கோணத்தில் இருந்து தரை இறங்கியது? விமானத்தில் எவ்வளவு எரிபொருட்கள் இருந்தது? காற்றின் வேகம், நீர்ப்பதம் எவ்வளவு இருந்தது? என்பன போன்றவை பதிவாகி இருக்கும்.
இவை தவிர விமான என்ஜின்கள் எப்படி செயல் பட்டன? மற்ற கருவிகள் எத்தகைய நிலையில் இயங்கின? ஆகியவையும் இந்த கருப்புப் பெட்டியில்தான் பதிவாகும்.
விமானம் ஏன் தறி கெட்டு ஓடியது? மீண்டும் உயரே கிளம்பியதா? ஆகிய கேள்வி களுக்கு இந்த கருப்புப்பெட்டியில்தான் விடை உள்ளது. விமானி விமானத்தை 1,500 அடி தூரத்தில் தரை இறக்குவதற்கு பதில் 3 ஆயிரம் அடியை கடந்து சென்று தரை இறக்கி விட்டதாக ஒரு குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கும் டிஎப்டி ஆர் கருப்புப்பெட்டியில் விடை கிடைக்கும்.
இந்த கருப்புப்பெட்டி இன்று உடனடியாக டெல்லிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு விமான இயக்கு னரக அதிகாரிகள் ஆய்வு நடத்துவார்கள். 15 நாட்களில் இந்த ஆய்வு முடிவு தெரியவரும்.
அந்த ஆய்வறிக்கை பின்னர் அமெரிக்காவில் உள்ள போயிங் விமான தயாரிப்பு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்படும். அவர்களும் இதுபற்றி ஆராய்ச்சி செய்வார்கள். இந்த ஆய்வு முடிவுகள் தெரிய சுமார் 6 மாதம் கூட ஆகலாம் என்று தெரிகிறது.
இன்று கண்டெடுக்கப்பட்ட கருப்புப்பெட்டி முழுமையாக சேதம் அடையாமல் கிடைத்துள்ளது. எனவே ஆய்வு முடிவில் எல்லா தகவல்களும் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget