இந்தியாவின் "தங்க மங்கை", "ஓட்டப்பந்தய ராணி" என்று வர்ணிக்கப்பட்டவர் பி.டி.உஷா, தனது அதிவேக ஓட்டத்தின் மூலம் "அத்லெடிக்" (தடகள) அரங்கில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தார்.பி.டி.உஷாவை அறியாத விளையாட்டு ஆர்வலர்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு பிரபலமாக விளங்கியவர், உஷா. அது மட்டுமல்ல. விளையாட்டு உலகில் 20 ஆண்டுகள் தனது திறமைகளை வெளிப்படுத்தி பல சாதனைகள் படைத்து பிரகாசித்தவர், பி.டி.உஷா.
பி.டி.உஷாவின் சொந்த ஊர் கேரள மாநிலம் கோழிக்கோடு அருகில் உள்ள பையோலி. 1964_ம் ஆண்டு ஜுன் 27_ந்தேதி பிறந்தார். பிலவுல்லகண்டி தெக்கிபரம்பில் உஷா என்பதே அவரது முழுப்பெயராகும்.சிறு வயது முதலே விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்த உஷா, 1979_ல் தடகளம் போட்டிகளில் பங்கேற்க தொடங்கி னார். 1980_ல் சர்வதேச அரங்கில் நுழைந்தார்.
1982_ல் டெல்லியில் 9_வது ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டப்பந்தயங் களில் பி.டி.உஷா தங்கப்பதக்கம் வெல்வார் என்று ஆவலோடு எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உஷா அந்த 2 பந்தயங்களிலும் இரண்டாவது இடத்தில் வந்து வெள்ளிப் பதக்கங்களை பெற்றுக் கொடுத்தார்.
தங்கம் வெல்லும் ஆசை தகர்ந்ததால் பி.டி.உஷா கண்ணீர் வடித்தார். "30 மீட்டர் தூரம் இருக்கும் வரை நானே முதலாவதாக வந்தேன். திடீர் என்று கால்களில் கடுமையான வலி ஏற்பட்டது. நான் தோற்கப்போகிறேன் என்பதை உணர்ந்துவிட்டேன்" என்று உஷா குரல் தழுதழுக்க கூறினார்.
இருப்பினும் ஓட்டப் பந்தயத்தில் அவரே இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்தார்.
அடுத்து 1984_ல் அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. இதில் உஷா 400 மீட்டர் தடை ஓட்ட பந்தய அரை இறுதியில் வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இதன் மூலம் ஒலிம்பிக் போட்டியில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார்.
ஆனால் இறுதிப்போட்டியில் வெற்றி கை நழுவிப்போனது. மயிரிழையில் வெண்கலப் பதக்கம் கிடைக்காமல் போனது. ஒரு நொடியில் நூற்றில் ஒரு பங்கு பின் தங்கியதால் 4_வது இடத்துக்கு போய்விட்டார்.
என்றாலும் மனம் தளராத பி.டி.உஷா, தனது ஆசிய போட்டி சாதனையை இதன் மூலம் முறியடித்து விட்டதை சொல்லி ஆறுதல் அடைந்தார்.
பிறகு சர்வதேச போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்ற அவர் 1986_ல் சியோல் நகரில் நடைபெற்ற ஆசிய விளை யாட்டுப் போட்டியில் ஓட்டப்பந்தயத்தில் முழு ஆதிக்கம் செலுத்தி வெற்றி வாகை சூடினார். 200 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் தடை ஓட்டம், 4ல400 தொடர் ஓட்டம் ஆகியவற்றில் தங்கம் வென்றார்.
ஒரு வெள்ளிப் பதக்கமும் பெற்றார். இதனை பாராட்டி பி.டி.உஷாவுக்கு மத்திய அரசு ரூ.5 லட்சம் பரிசு வழங்கியது. இதனை மத்திய மந்திரி நரசிம்மராவ் வழங்கினார்.
இந்த நிலையில் பி.டி. உஷாவுக்கு 25_4_1991_ல் திருமணம் நடந்தது. மணமகன் பெயர் சீனிவாசன். மலப்புரம் மாவட்டம் பொன்னானி என்ற இடத்தைச் சேர்ந்தவர். மத்திய தொழில் பாதுகாப்பு படையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.
பி.டி.உஷா _ சீனிவாசன் திருமணம் கோழிக்கோட்டில் உள்ள அடிக்கோடி தேவி மண்டபத்தில் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு உஷா விளையாட்டில் இருந்து 3 ஆண்டுகள் ஓய்வு பெற்றிருந்தார். கணவர் அளித்த ஊக்கத்தின் காரணமாக மீண்டும் 1994_ல் அத்லெடிக் அரங்கில் நுழைந்தார்.
தனது வலிமையை நிரூபித்து பல பதக்கங்கள் வென்றார். ஆசிய போட்டிகளில் மட்டும் 30 பதக்கங்களை பெற்றார். காலில் அவருக்கு தொடர்ந்து வலி ஏற்பட்டதால் ஜகர்த்தாவில் நடந்த ஆசியப் போட்டி மற்றும் சிட்னியில் நடந்த ஒலிம்பிக் போட்டி ஆகியவற்றில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஓய்வு எடுத்துக்கொள்ள முடிவு செய்தார்.
25_7_2000 அன்று தனது 36_வது வயதில் பி.டி.உஷா சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். இதுபற்றி டெல்லியில் அவர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:-
"சர்வதேச போட்டிகளில் இருந்து நான் ஓய்வு பெறுகிறேன். கடந்த 20 ஆண்டுகளாக தடகள போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். இது நீண்ட காலம் ஆகும். உடல் சோர்வு காரணமாக விலகவில்லை. இந்த முடிவு எனக்கு வருத்தம் அளிக்கிறது.
10 ஆண்டுகளுக்கு முன்பு இதே போல அறிவித்து திரும்ப வந்தேன்.ஆனால் இப்போது ஓய்வு பெறுவதே சரியான தருணம் ஆகும். ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லவேண்டும் என்ற என் கனவு கை கூடாமல் போனது, எனக்கு ஏமாற்றம்தான்."
என்று கூறினார் தங்க மங்கை.