புதிய மொபைல் போன் வாங்கப்போறீங்களா? கண்டிப்பாக உஷாராக பார்த்து வாங்குங்க; ‘சீல்’ செய்யப்பட்டு தானே இருக்கிறது என்று நம்பி விட வேண்டாம். நன்றாக சோதித்து வாங்குங்க. இல்லாவிட்டால், பழைய போனை புதிய போனுக்குரிய விலை கொடுத்த ஏமாந்து வீடுவீங்க.
ஆம், மும்பையில் பெண் தொழிலதிபர் ஒருவர் இப்படித்தான் ஏமாந்து இப்போது, இந்த விவகாரம் போலீஸ் வரை போய் விட்டது. மொபைல் போனை விற்ற கடைக்காரர், உண்மையில் அங்கீகாரம் பெறாத சட்டவிரோத டீலர் என்பது தெரியவந்து, கம்பெனியும் நடவடிக்கை எடுக்க உள்ளது.
மும்பை அந்தேரி பகுதியை சேர்ந்தவர் ஜோதி தாகுல்தார்; இவர் கணவர் சுப்ரஜித்துடன் சேர்ந்து ஆன்லைன் பைனான்ஸ் பிசினஸ் செய்து வருகிறார். ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெற்று கடன் பெற்றுத்தரும் தொழில் செய்யும் இந்த பெண் தொழிலதிபர் சமீபத்தில், இர்லா என்ற பகுதியில் உள்ள பிரபல நோக்கியா மொபைல் போன் டீலர் கடையில் புதிய நோக்கியா போன் வாங்கினார்.
‘சீல்’ உடைத்து போனை காட்டி அதை பரிசோதித்து தந்தார் வியாபாரி. ப்ளூடூத் உட்பட பல வசதிகளை கொண்ட இந்த போனை வாங்கி வீட்டுக்கு வந்த ஜோதி, அதை திறந்து பார்த்தார்.
போனில் சில எஸ்.எம்.எஸ்.கள் இருப்பது கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். பழைய போனை கொடுத்து வியாபாரி ஏமாற்றி விட்டாரே என்று ஆத்திரம் வந்தது. பழைய போன் என்பதற்கு இன்னும் ஆதாரங்களை சேகரிக்க திட்டமிட்ட அவர், போனை முழுமையாக ஆராய்ந்தார்.
மொபைல் போன் ப்ளூடூத் ‘யூசர் நேம்’ வேறு ஒருவர் பெயரில் இருந்தது. மொத்தம் 20 எஸ்.எம்.எஸ்.கள் இருந்ததை கண்டுபிடித்தார். இந்த விஷயத்தை தன் கணவரிடம் சொன்னார்.
உடனே கடை உரிமையாளரை தொடர்பு கொண்டு இது பற்றி விவரம் தெரிவித்தார். ஆனால், கடைக்காரர் அதை ஒப்புக் கொள்ளவில்லை. ‘நான் பல ஆண்டாக இந்த கடையை நடத்தி வருகிறேன். ஆயிரக்கணக்கான பேர் என்னிடம் வாடிக்கையாளர்கள்; நீங்கள் வேண்டுமென்றே என் மீது பழி போடுகிறீர்கள்’ என்று பதிலுக்கு குற்றம் சாட்டினார்.
ஆனால், இந்த விஷயத்தை ஜோதி விடுவதாக இல்லை. போனை எடுத்துக் கொண்டு கடைக்கே சென்று விட்டார். ‘இதோ பாருங்கள். நான் திறக்கவே இல்லை. டப்பாவில் சீல் வைக்கப்பட்டு உள்ளது. அப்படியிருக்க, எப்படி எஸ்.எம்.எஸ்.கள் இருக்கும். ப்ளூ டூத் ‘யூசர் நேம்’ எப்படி வேறு பெயரில் இருக்கும்’ என்று கேட்டார்.
‘சாரி மேடம், உங்கள் பக்கத்தில் இருந்த இன்னொரு வாடிக்கையாளர் இந்த போனை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தார். அவர் தான் இப்படி தவறு செய்திருக்க வேண்டும்’ என்று பல்டி அடித்தார். கம்பெனியில் கேட்டு, புது போன் வாங்கித் தருவதாகவும் உறுதி அளித்தார். ஆனால், ஜோதி திருப்தி அடையவில்லை.
வீடு திரும்பிய ஜோதி, நோக்கியா வெப்சைட்டில் அதன் தலைமையகத்தை தொடர்பு கொண்டு இது தொடர்பாக புகார் செய்தார். அடுத்த சில நிமிடங்களில் அவருக்கு இ மெயிலில் பதில் வந்தது.‘எங்களுக்கு இர்லா பகுதியில் டீலராக இருந்த மன்னு ஜெஸ்வானி என்பவர் டீலர்ஷிப்பை ரத்து செய்ய கடிதம் எழுதி விட்டார். அவர் இப்போது எங்கள் டீலர் அல்ல. நீங்கள் தவறான வியாபாரியிடம் போன் வாங்கியிருக்கிறீர்கள்’ என்று அதில் கூறப்பட்டிருந்தது.
ஜோதிக்கு இன்னும் கோபம் அதிகமானது. மீண்டும் கடைக்கு போனார். விஷயத்தை சொன்னதும், மன்னு எகிறி குதித்தார். ‘என்ன மேடம், என்னை நம்ப மாட்டேங்கறீங்க. நான் தான் டீலர்; நீங்க எங்கே போயும் புகார் செய்யுங்க’ என்று பதிலுக்கு கத்தினார்.
டென்ஷனான ஜோதி, தன் கணவரை அழைத்துக் கொண்டு ஜுஹு பகுதி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். ‘போன் வியாபாரி என்னை ஏமாற்றி விட்டார். அவர் சட்டவிரோதமாக நோக்கியா போன் விற்று வருகிறார்’ என்று கூறியிருந்தார். இப்போது வியாபாரி மீது வழக்கு போடப்பட்டுள்ளது.
போதாக்குறைக்கு, நோக்கியா நிறுவனமும் அவர் மீது நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது. ‘எங்கள் டீலர்ஷிப்பை ரத்து செய்து கொண்ட ஒருவர் சட்டவிரோதமாக எங்கள் நிறுவன மொபைல் போன்களை விற்பது அதிர்ச்சியாக உள்ளது. அதுவும், பழைய போன்களை புதிய போன் போல விற்பதற்கு உரிய நடவடிக்கை எடுப்போம்’ என்று கூறியுள்ளது.

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget