மேற்கு வங்க மாநிலம் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் ரயில் பாதையை மாவோயிஸ்ட் நக்சலைட்கள் குண்டு வைத்து தகர்த்தனர். இதனால் தடம் புரண்ட மும்பை பயணிகள் ரயில் மீது, சரக்கு ரயில் மோதியதில் 65 பேர் உடல் சிதறி இறந்தனர். 150 பேர் படுகாயம் அடைந்தனர். 
பீகார், மேற்கு வங்கம், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சமீபகாலமாக பயங்கர தாக்குதல் நடத்தி வருகின்றனர். பல இடங்களில் நக்சல்களின் கண்ணிவெடியில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் படை போலீசார் பலியாகி உள்ளனர். இந்நிலையில், மேற்கு வங்கத்தில் தண்டவாளத்தை நக்சல்கள் குண்டு வைத்து தகர்த்ததால் ஏற்பட்ட பயங்கர விபத்தில் 65 பேர் பலியாகி உள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து மும்பைக்கு லோக்மான்ய திலக் ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றிரவு புறப்பட்டது. கொல்கத்தாவில் இருந்து 150 கி.மீ தொலைவில் உள்ள கெமாசோலி மற்றும் சர்தியா ரயில் நிலையங்களுக்கு இடையே மும்பை ரயில் நள்ளிரவு 1.30 மணியளவில் சென்று கொண்டிருந்தது. அப்போது, தண்டவாளத்தில் திடீரென வெடிச்சத்தம் கேட்டது. வேகமாக வந்த ரயில் தடம் புரண்டதில் 13 பெட்டிகள், அருகில் உள்ள ரயில் பாதையில் கவிழ்ந்தன.
அதே நேரத்தில் பக்கத்து தண்டவாளத்தில் சரக்கு ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. தண்டவாளத்தில் பயணிகள் ரயில் கவிழ்ந்து கிடப்பதை பார்த்த சரக்கு ரயிலின் இன்ஜின் டிரைவர், பிரேக் போட்டு ரயிலை நிறுத்த முயன்றார். ஆனால், அதற்குள் கவிழ்ந்து கிடந்த பெட்டிகள் மீது சரக்கு ரயில் மோதியது.
எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த பயணிகள் அலறியடித்து எழுந்தனர். என்ன நடந்தது என்று தெரியாமல் அவர்கள் சுதாரிப்பதற்குள் சரக்கு ரயில் மோதியதில் பெட்டிகளில் இருந்த பல பயணிகள் தூக்கி வீசப்பட்டனர். படுக்கை வசதிகளுடன் கூடிய ஒரு பெட்டி, முன்பதிவு செய்யப்பாடாத ஒரு பெட்டி, பேன்ட்ரி வேன் ஆகியவை பலத்த சேதமடைந்தன. அவற்றில் இருந்த 65 பேர் உடல் நசுங்கி பலியாயினர். 150 பேர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.
 மும்பை ரயிலின் 11 பெட்டிகள் சேதமடையாமல் இருந்தன. கவிழ்ந்த பெட்டிக்குள் சிக்கி காயமடைந்த பயணிகளை மீட்டு காரக்பூர் கொண்டு சென்றனர். அங்கு தயாராக இருந்த மருத்துவக் குழுவினர் அவர்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
விபத்து நடந்த இடத்தில் இருந்து 25 கி.மீ தொலைவில் கலைகுண்டா விமானப்படை தளம் உள்ளது. இங்கிருந்து இரு ஹெலிகாப்டர்களில் விமானப்படையினர் விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டனர். காயம் அடைந்த பயணிகள் 45 பேர் விமானப்படை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். சிலர் காரக்பூர் ஐஐடி ஆஸ்பத்திரி மற்றும் அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்தின் பின்னணியில நக்சல்கள் சதித்திட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. எக்ஸ்பிரஸ் ரயில் வந்த தண்டவாளத்தை நக்சல்கள் குண்டு வைத்து தகர்த்துள்ளனர். அதனால்தான் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது.
 பலியான பயணிகளுக்கு ரயில்வே சார்பில் தலா ரூ.5 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும் வழங்கப்படும். மேலும் விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்.
விபத்துக்குள்ளான ரயில் பயணிகள் பற்றி விவரங்கள் அறிய காரக்பூர் மற்றும் ஹவுராவில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காரக்பூர் உதவி மையத்தை 0322 255751 என்ற எண்ணிலும், ஹவுரா உதவி மையத்தை 033 -26382217 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget