கையில் லட்ச ரூபாய் வைத்திருந்தால் பஸ்ஸில் போவீர்களா? பாக்கெட்டில் சம்பள பணம் இருந்தாலே ஆட்டோ பிடித்து பத்திரமாக வீட்டுக்கு போவோம்.
பாங்க் ஊழியர்கள் இரண்டு பேர் ஒரு கோடி ரூபாய் பணத்தை டிரங்க் பெட்டியில் அடுக்கி டாக்சியில் ஏறியிருக்கிறார்கள். புதுச்சேரி கிளையில் இருந்து சென்னையில் உள்ள மண்டல தலைமை அலுவலகத்துக்கு வழக்கமாக இப்படித்தான் பணம் கொண்டு வருவார்களாம். வழியில் கார் ரிப்பேரான மாதிரி நின்றிருக்கிறது. ஒருவர் இறங்கி தள்ளச் சொல்லியிருக்கிறார் டிரைவர். ஸ்டார்ட் ஆகி திரும்பவும் ஆஃப் ஆனது. இன்னொருத்தர் சேர்ந்து தள்ளினால் ஸ்டார்ட் ஆகிவிடும் என்று டிரைவர் சொன்னதும் அடுத்தவரும் இறங்கியிருக்கிறார். உடனே கார் பறந்துவிட்டது. விவரமான டிரைவர். சற்று தொலைவில் நிறுத்தி, டிக்கியை திறந்து, பெட்டியின் பூட்டை உடைத்து, 20 லட்சம் மட்டும் எடுத்துக் கொண்டு ஆட்டோவில் தப்பிவிட்டார். இந்த அளவுக்கு பணம் எடுத்து செல்லும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறை என்று பாங்க் நிச்சயமாக சில விதிகளை வகுத்திருக்கும். அதற்கு மாறாக இப்படி நடக்க அனுமதித்த அதிகாரியிடம் 20 லட்சத்தை வசூலிப்பது தவறாக இருக்காது.
தஞ்சை பாபனாசத்தில் துப்பாக்கி ஏந்திய காவலாளியுடன் ஏடிஎம்முக்கு பணம் எடுத்து சென்றிருக்கிறது பிரிங்க்ஸ் ஆர்யா நிறுவன வேன். உலக அளவில் பல விதிகளுக்கு உட்பட்டு அது இந்த வேலையை செய்கிறது. ஆனால், சண்டைக்கு வந்த கடைக்காரர்களை காவலாளி சுட்டது அத்து மீறல். அவரிடம் இருந்து துப்பாக்கியை கைப்பற்றிய போலீஸ் அதிகாரி, உடனே மீதி தோட்டாக்களை அல்லது மேகசினை அப்புறப்படுத்தியிருக்க வேண்டும். இந்த விதியை சம்பந்தப்பட்ட அதிகாரி பின்பற்றியிருந்தால் சப் இன்ஸ்பெக்டர் இன்று உயிருடன் இருந்திருப்பார்.
சட்டீஸ்கரில் 76 சி.ஆர்.பி.எஃப் ஜவான்கள் அநியாயத்துக்கு நக்சலைட்களின் தாக்குதலில் செத்து விழுந்ததற்கும் விதிகளை மதிக்காததே காரணம். இந்த நாட்டில் மிகச் சிறப்பான முறையில் சட்டங்கள் இயற்றப்பட்டு, விதிகள் வகுக்கப்படுகின்றன. பின்பற்றுவதற்கு எவருமில்லை. அடுத்தடுத்து சம்பவங்கள் இந்த பரிதாப நிலையை படம்பிடித்து காட்டினாலும் யாரும் திருந்துவதாக தெரியவில்லை. இந்தியாவை பொறுத்தவரை விதிகளை பின்பற்றினால் தான் ஆச்சர்யம்.நாம் தினந்தோறும் சாலையில் வாகனங்களை ஓட்டும் போது தோடங்கி,நமது ஒவ்வொரு
செயலிலும் சுயஒழுக்கம் இல்லாமல் தான் செயல்படுகிறோம்.ஒருநாட்டின் வளர்ச்சி அதிகாரத்தில் இருப்பவர்களிடம் மட்டும் இல்லை.அந்த நாட்டின் குடிமக்களிடமும்தான்இருக்கிறது.நம்மிடம்என்றைக்குசுயஒழுக்கமும்,
சுயகட்டுப்பாடும் ஏற்படுகிறதோ அன்றைக்கு தான் நமக்கு வல்லரசு ஆகும் தகுதி உண்டாகும்.அதுவரை இதுமாதிரி நிகழ்வுகள் இந்தியாவில் சாதாரணம்.