சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி போட்டியில், நேற்று நடந்த பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா 4&3 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
மலேசியாவின் ஈபோ நகரில் 19வது சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி போட்டி நடந்து வருகிறது. நடப்பு சாம்பியனான இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் சீனாவுடன் டிரா (1&1) செய்தது. அடுத்து பரம எதிரியான பாகிஸ்தானை 4&2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
மூன்றாவது லீக் ஆட்டத்தில் தென் கொரியாவை 3&2 என்ற கோல் கணக்கில் வென்று புள்ளிப் பட்டியலில் முன்னிலை பெற்றது. இந்நிலையில், பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுடன் நேற்று இந்தியா மோதியது. தொடக்கம் முதலே ஆஸி. கோல் பகுதியை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்திய இந்திய வீரர்கள் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினர்.
துஷார் காண்டேகர் (19வது மற்றும் 33வது நிமிடம்), கேப்டன் ராஜ்பால் சிங் (22வது நிமிடம்) அபாரமாக கோல் அடிக்க, இடைவேளையின்போது இந்தியா 3&0 என முன்னிலை வகித்தது. இரண்டாவது பாதியில் சுதாரித்துக் கொண்ட ஆஸ்திரேலியா டிரென்ட் மில்டன் (38), கிறிஸ்டோபர் (40) கோல் அடிக்க பதிலடி கொடுத்தது. இந்திய வீரர் ஷிவேந்திரா 61வது நிமிடம் கோல் அடிக்க 4&2 என முன்னிலை ஏற்பட்டது. கடைசி நிமிடத்தில் மார்க் பேட்டர்சன் ஆஸ்திரேலியாவுக்கு ஆறுதல் கோல் அடித்தார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில் இந்தியா 4&3 என்ற கோல் கணக்கில் வென்றது.