கிரீஸ் கடன் நெருக்கடிக்கு அவசர நிதி உதவியாக ரூ.45 லட்சம் கோடி அளிக்க ஐரோப்பிய யூனியன், ஐஎம்எப் ஒப்புக் கொண்டதால், சென்செக்ஸ் நேற்று முன்னேற்றப் பாதைக்கு திரும்பியது. நேற்று ஒரே நாளில் 561 புள்ளிகள் உயர்ந்தது.
கடந்த வாரத்தின் 5 வர்த்தக நாட்களில் மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் 788 புள்ளிகள் சரிந்தது. 17,000 புள்ளிகளுக்கு கீழே சென்றது. அதனால், முதலீட்டாளர்களுக்கு ரூ.2.5 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது. சென்செக்ஸ் பட்டியலில் முதல் 10 இடங்களில் உள்ள கம்பெனிகளில் 9 நிறுவனங்கள் அதிக நஷ்டம் அடைந்தன. அவற்றின் மொத்த பங்கு மதிப்பு ரூ.40,000 கோடி சரிந்தது. கிரீஸ் நாட்டின் கடன் சுமை அதிகரித்து நிதி நெருக்கடி ஏற்பட்டதால், அது ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது.
பொதுவாக, அமெரிக்க, ஐரோப்பிய பங்குச் சந்தை களைப் பின்தொடரும் ஆசிய சந்தைகளும் கடந்த ஒரு வாரமாக சரிவை சந்தித்தன. இந்நிலையில், கிரீஸ் நிதி நெருக்கடிக்கு ரூ.45 லட்சம் கோடியை அவசர நிதி உதவியாக அளிக்க ஐரோப்பிய யூனியனும், சர்வதேச நிதி அமைப்பும் (ஐஎம்எப்) நேற்று ஒப்புதல் அளித்தன.