மெக்சிகோ கடல் பகுதியில் எண்ணெய் கிணறு இடிந்து மூழ்கியதால் நீரில் பரவிய எண்ணெயை உறிஞ்சி அகற்ற அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் முடி தானம் செய்கின்றனர் மக்கள்.
கல்ப் ஆப் மெக்சிகோ பகுதியில் உள்ள எண்ணெய் கிணறு இடிந்து கடலில் மூழ்கியது. அதனால், அமெரிக்கா, மெக்சிகோ கடல் பகுதிகளில் எண்ணெய் பரவி வருகிறது. கடல் நீர் மாசுபட்டு அரிய உயிரினங்கள் இறக்கின்றன. கடலில் கலந்த எண்ணெயை அகற்ற அமெரிக்க, மெக்சிகோ படையினர் முழுவீச்சில் பணியாற்றி வருகின்றனர்.
இதற்கிடையே, கடலில் பரவிய எண்ணெய் இப்போது அமெரிக்காவின் லூசியானா கடற்கரையை நெருங்கியுள்ளது. அவற்றை அகற்ற ஏராளமான பிரஷ்கள், உறிஞ்சும் பொருட்கள் தேவைப்படுகின்றன. அவற்றை சேகரித்து அரசுக்கு உதவுவதில் மேட்டர் ஆப் டிரஸ்ட் என்ற அறக்கட்டளை தீவிரம் காட்டி வருகிறது.
எண்ணெயை அதிகளவில் உறிஞ்சுவதற்கு பிரமாண்ட குஷன்கள் தயாரிக்க சலூன்களில் சேரும் தலைமுடியை அந்த அறக்கட்டளை சேகரிக்கிறது. இதுபற்றி அறக்கட்டளையின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பிரான்ஸ், இங்கிலாந்து, பிரேசில், ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்காவில் இருந்து தங்கள் தலைமுடியை அளிக்க ஏராளமான மக்களும், சலூன்களும் விருப்பம் தெரிவித்துள்ளன. செல்லப் பிராணிகளின் ரோமமும் சேகரிக்கிறோம். இதுவரை 3.7 லட்சம் சலூன்கள், 1 லட்சம் செல்லப் பிராணி நிலையங்களிடம் இருந்து ரோமங்கள் அனுப்பப்பட்டுள்ளன என்றார்.
அமெரிக்காவின் செல்லப் பிராணிகள் நிறுவனமான பெட்கோவும் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளது.
அதன் செய்தித் தொடர்பாளர் ப்ரூக் சைமன் கூறுகையில், “எங்களது 1,000 கடைகளில் உள்ள பிராணிகளிடம் இருந்து தினமும் 1 டன் ரோமங்களை அனுப்ப முடியும். இதுவரை மேட்டர் ஆப் டிரஸ்ட் அமைப்பும் 2.04 லட்சம் கிலோ தலைமுடி சேர்ந்துள்ளது. எண்ணெயை பத்திரமாக அகற்றி, சுற்றுச்சூழலை பாதுகாக்க தலைமுடியைத் தர நிமிடத்துக்கு 50 பேர் முன்வருகின்றனர்” என்றார்.
மக்களின் பொதுநலன் எண்ணத்தை என்னவென்று சொல்வது?