தோல்வி யாருக்கும் பிடிக்காது. தோற்றவனையும் பிடிக்காது. டோனிக்கு இன்று அந்த நிலை. வெற்றிகளை குவித்தபோது அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய அதே கூட்டம் இப்போது ரத்தம் குடிக்க கூச்சலிடுகிறது.
எப்போதும் ஜெயித்துக் கொண்டே இருக்க முடியாது. இருந்தால் ஆட்டத்தில் ஏதோ கோளாறு என்று அர்த்தம். சறுக்கல், வீழ்ச்சி, அடிகள் அடுத்து வரக்கூடிய வெற்றிக்கு சுவை கூட்டும். முழு திறமை காட்டி போராடியும் வெற்றி கைநழுவினால், எதிராளியை கைகுலுக்கி பாராட்டி களத்தை விட்டு வெளியேறுவதே நாகரிகம். ஆனால், இந்திய அணி தோல்வியை தவிர்க்க போராடவில்லை. மந்திரித்துவிட்ட ஆடுகள் போல செயலிழந்து தடுமாறினார்கள்.
ஐ.பி.எல் போட்டிகளில் அபாரமாக ஆடியவர்கள் பூனையை கண்ட எலியாக பவுன்சர் பந்துவீச்சுக்கு சரண் அடைந்தனர். பவுலர்கள் ரன் வழங்கும் வள்ளல்களாக அவதாரம் எடுத்தனர். ஓவருக்கு 6 ரன்னுக்கு மேல் கொடுத்து அதில் முதலிடம் பிடித்தார் ஹர்பஜன். களத்தில் நின்ற சகாக்கள் துணையின்றி அவர் சாதிக்கவில்லை என்பது வேறு விஷயம். எவரிடமும் வேகம் இல்லை. தலைமைப் பண்புக்கு உதாரணமாக பேசப்பட்ட கேப்டன் டோனி அடுத்தடுத்து தப்பான முடிவுகள் எடுத்தார். விளைவு, சர்வதேச போட்டிகளில் டோனி இதுவரை எதிர்கொள்ளாத பெரும் தோல்வி.
விளையாட்டில் வெற்றியும் தோல்வியும் சகஜம் என்று கூறி தப்பவில்லை அவர். ஐ.பி.எல் போட்டிகள் முடிந்த பிறகு நடக்கும் இரவு விருந்துகளால் வீரர்கள் சோர்ந்து விட்டார்கள் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார். உண்மை பேசினால் ஊர் சும்மா விடுமா? டோனியை முட்டாள் என்றும் அவர் சொன்ன காரணம் அபத்தம் என்றும் முன்னாள் வீரர்கள் பாய்ந்திருக்கிறார்கள். பேரழகிகளோடு கேளிக்கை விருந்தில் பங்கேற்றால் எத்தனை மணிக்கு எந்த நிலையில் தூக்கம் பிடிக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். மட்டை பிடித்தும் பந்து போட்டும் 20 ஓவரில் இழந்ததை காட்டிலும் அதிகமான சக்தி அதில் வீணாகும். பார்ட்டி பக்கமே தலைகாட்டாத ஆஸ்திரேலிய வீரர்களை கேட்டால் புள்ளி விவரத்தோடு விளக்குவார்கள். மனைவியுடன் தங்கவே அவர்களுக்கு அனுமதியில்லை. கிரிக்கெட் போர்டு கவனிக்க வேண்டும். இந்த விளையாட்டுடன் உறவை துண்டித்தால் கிரிக்கெட் பிழைக்க வழியிருக்கிறது.

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget