லிபிய விமானம் விழுந்து நொறுங்கி 151 பேர் பலியான விபத்தில் ஒரு சிறுவன் மட்டும் உயிர் பிழைத்தான். ஆந்திராவில் வீடு இடிந்து குடும்பமே புதைந்தபோது ஒரு சிறுமி மட்டும் காயமின்றி தப்பினாள். தினந்தோறும் நடக்கும் சாலை விபத்துகளில் அம்மா, அப்பா இறந்து ‘அதிர்ஷ்டவசமாக’ உயிர் பிழைத்த குழந்தைகள் பற்றி செய்தி படிக்கிறோம். கலவரம், உள்நாட்டு போர், இயற்கை பேரழிவு போன்றவற்றிலும் இவ்வாறு நடக்கிறது. இந்த குழந்தைகள் எல்லாரும் உண்மையில் அதிர்ஷ்டசாலிகளா?
உயிர் பிழைத்த பிறகு இவர்களின் வாழ்க்கை எப்படி போகிறது என்பது யாருக்கும் தெரியாது. ஆதரவற்ற இக்குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதில் அரசின் சமூக நல துறையும் தொண்டு நிறுவனங்களும் பெரும் பங்கு வகிக்கின்றன. யுனிசெப் நிறுவனம் அதற்கு வழிகாட்டுகிறது. ஆனால், அரசு இதற்காக செலவிடும் தொகை குறைவு. ஒரு வேளை நன்றாக சாப்பிட மட்டுமே போதுமானது. ஏனைய செலவுகள்? வளரும் நாடுகளில் இது பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது.
அசுர வேகத்தில் பணக்கார நாடாக மாறிவரும் சீனா, அந்த வளர்ச்சியின் பலன்கள் எல்லா தரப்பு மக்களையும் எட்ட வேண்டும் என்பதில் இப்போது அக்கறை காட்ட தொடங்கியுள்ளது. மூன்று சதவீத மக்களிடம் செல்வம் குவிவதும், அதன் பலன்கள் 17 சதவீத மக்களுக்கு மட்டுமே கிடைப்பதும் ஆரோக்கியமான வளர்ச்சி அல்ல என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி மேலிடம் முதல் முறையாக ஒப்புக் கொண்டுள்ளது. அதன் பேரில் வளமையை பரவலாக்க திட்டங்கள் தயாரிக்க வல்லுனர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த பின்னணியில், ஆதரவற்ற குழந்தைகளுக்கு மாத உதவி 50 யுவான், இந்திய மதிப்பில் 340 ரூபாய் என்பதை 600 யுவானாக உயர்த்தியுள்ளது.
‘குழந்தை’ என்பது 18 வயது வரை. அப்படி அங்கே 32 கோடி இருக்கின்றன. அதில் ஒரு கோடி வறுமையில். பெண்ணாக பிறந்ததாலும், பெற்றோர் பிரிவதாலும், ஊனமாவதாலும் ஆண்டுக்கு லட்சம் குழந்தைகள் தெருவில் விடப்படுகின்றன. பிழைப்புக்காக நகரங்களுக்கு வந்த 3 கோடி குழந்தைகளும், நகருக்கு குடிபெயர்ந்த பெற்றோரால் கிராமங்களில் விடப்பட்ட 6 கோடி குழந்தைகளும் லிஸ்டில் சேர்கின்றன.
குழந்தைகள் நலனுக்கு செலவிடுவதை காட்டிலும் ஒரு அரசுக்கு சிறந்த முதலீடு வேறெதுவும் கிடையாது
நல்ல தகவல்கள்
பதிவு அருமை