அடுத்த ரயில்வே அமைச்சர் யார் என்ற விவாதம் தொடங்கிவிட்டது. மம்தா பேனர்ஜி அடுத்த ஆண்டு மேற்கு வங்க முதலமைச்சராக பதவி ஏற்பார் என்ற நம்பிக்கை அம்மாநில மக்களிடம் வலுவடைந்துள்ளது.
அங்கே 34 வருடமாக நகரங்களில் வேரூன்றி திளைத்த கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வாக்காளர்கள் டாட்டா சொல்லிவிட்டார்கள். 81 நகராட்சிகளில் இடதுசாரி முன்னணி 17ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. சென்ற முறை ஜெயித்த 37 இடங்களை இழந்துள்ளது. முக்கியமானது கொல்கத்தா மாநகராட்சி. அங்குள்ள 141 வார்டுகளில், ஆளும் கூட்டணி கைப்பற்ற முடிந்தது 33 மட்டும். 27 வார்டுகள் அதன் கைவிட்டு நழுவின. திருணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் வெற்றி கிடைத்திருக்கிறது.
படித்தவர்கள், தொழிலாளர்கள் நிறைந்த நகர்ப்புறங்களில் மார்க்சிஸ்ட் தலைமையிலான கட்சிகளையே மக்கள் என்றும் ஆதரிப்பார்கள் என்ற மெத்தனமான கோஷத்துக்கு பலத்த அடி விழுந்திருக்கிறது. 2008ல் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சரிவு தொடங்கிவிட்டது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும் தோல்வி தொடர்ந்தது.
‘மக்களை விட்டு மார்க்சிஸ்டுகள் விலகிப் போகிறார்கள்; அதன் விளைவை அனுபவிப்பார்கள்’ என்று முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி சொன்னது உண்மையாகிவிட்டது. இன்று கூட்டணி கட்சிகள் அதே கருத்தை சொல்ல தைரியம் பெற்றுள்ளன. ‘இடது முன்னணி தொண்டர்களின் ஆணவத்துக்கு மக்கள் தண்டனை கொடுத்துவிட்டனர்’ என்று ஒரு தலைவரும், ‘ஊழல் பெருகியதால் மக்கள் கோபம் அடைந்துள்ளனர்’ என்று இன்னொருவரும் பேட்டி கொடுக்கின்றனர். இதில் எந்த காரணமும் இல்லாமல், ‘போரடித்துவிட்டது, போதும் உங்கள் ஆட்சி’ என்ற எண்ணத்தில்கூட மேற்கு வங்க மக்கள் வாக்களித்திருக்கக் கூடும்.
கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்திய அரசியலில் நீடிப்பது குறித்த கேள்விக்குறி விசுவரூபம் எடுத்து நிற்கிறது. கால மாற்றத்துக்கு ஏற்ப தங்களை புதுப்பித்துக் கொள்ளுமா என்பதை பொருத்திருந்து பார்க்க வேண்டும். அதே சமயம், காங்கிரஸ் துணை இல்லாமல் மம்தா ஆட்சியை பிடிப்பது சிரமம். 25 நகராட்சிகளில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காதது அதை உணர்த்துகிறது. நாடாளும் தேசிய கட்சி என்பதை காட்டி மம்தாவிடம் பேரம் பேசுவது கடினம் என்பதை காங்கிரசும் புரிந்து கொண்டிருக்கும்.

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget