மன அழுத்தத்தை ஏற்படுத்தும் காரணிகளில் புதிதாக மொபைல் போன்களும் இணைந்துள்ளன. மொபைல் போன்களால் ஏற்படும் மன அழுத்தத்திற்கு நோமொபோபியா என பெயரிட்டுள்ளனர்.
இது 24/7 காலம். 24 மணி நேரமும் போதாது என்று பதை பதைப்போரும் உள்ளனர். அந்த அளவுக்கு சுறுசுறுப்பாகவும், விறுவிறுப்பாகவும் செயல்பட வேண்டிய காலகட்டத்தில் இன்றைய தலைமுறையினர் உள்ளனர். இப்படிப்பட்டவர்களுக்கு பல்வேறு வகைகளில் மன அழுத்தம் ஏற்படுவது சாதாரணமானதுதான். இப்போது புதிதாக ஒரு காரணியும் இந்த மன அழுத்தப் பட்டியலில் இணைந்துள்ளது. அதுதான் நோமொபோபியா.
கை, கால்கள் இல்லாமல் கூட இன்றைய மனிதர்களால் உயிர் வாழ்ந்து விட முடியும். ஆனால் மொபைல் போன்கள் இல்லாமல் உயிர் வாழவே முடியாது என்ற நிலையில் இருப்பவர்கள் பல்கிப் பெருகி விட்டனர். இப்படிப்பட்டவர்களுக்கு வருவதுதான் இந்த நோமொபோபியா.
நோ மொபைல் போபியா என்பதன் சுருக்கம்தான் நோமொபோபியா. மொபைல் போன் வைத்திருப்பவர்களுக்கு மட்டும்தான் இது வரும். மொபைல் போன்களை பயன்படுத்துவோரில் 53 சதவீதம் பேருக்கு இந்த மன வியாதி இருக்கிறதாம்.
மொபைல் போன்களோடு ஒட்டி உறவாடி வருவோருக்கு மட்டுமே இது வருகிறது. இப்படிப்பட்டவர்களுக்கு, மொபைல் போனில் சார்ஜ் தீர்ந்து விட்டாலோ அல்லது பேசும் நேரம் ஸ்டாக் இல்லாவிட்டாலோ அல்லது சாதனம் செயலிழந்து விட்டாலோ பெரும் மன அழுத்தம் ஏற்படுமாம். அதைத்தான் நோமொபோபியா என்கிறார்கள்.
மொபைல் போன் இல்லாமல் இவர்களால் ஒரு நிமிடம் கூட இருக்க முடியாதாம். ஏற்கனவே உள்ள பல்வேறு வகையான மன அழுத்தங்களை விட இந்த நோமொபோபியா பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து லண்டனைச் சேர்ந்த ஸ்டூவர்ட் பாக்ஸ் மில்ஸ் என்பவர் தலைமையில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. இதில் பல்வேறு ஆண், பெண்களிடம் (அனைவரும் மொபைல் போன் பயன்படுத்துபவர்கள்) கருத்தாய்வு நடத்தப்பட்டது.
இதில் கலந்து கொண்ட ஆண்களில் 58 சதவீதம் பேரும், பெண்களில் 48 சதவீதம் பேரும் போனில்சார்ஜ் தீர்ந்து விட்டாலோ, சாதனம் செயல்படாமல் இருந்தாலோ அல்லது பேசும் நேரம் (டாக் டைம்) குறைவாக இருந்தாலோ பெரும் மன உளைச்சலுக்கு ஆளானதாக தெரிவித்துள்ளனர். என்ன செய்வது என்று தெரியாமல் தாங்கள் தவித்துப் போய் விடுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கருத்தாய்வில் கலந்து கொண்டவர்ளில் மூன்றில் இரண்டு மடங்கு பேர், எப்போதும் மொபைல் போனில் பேசியபடியே இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதாவது காதும், போனுமாகவே இருப்பவர்கள் இவர்கள்.
இத்தகைய பதட்டத்தைக் குறைக்க, மன அழுத்தம் ஏற்படாமல் தடுக்க, மன உளைச்சலைப் போக்க ஒரே வழி சாதனங்களை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும், எப்போதும் சார்ஜில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். டாக் டைம் அதிகம் இருக்கும்படி அதை சார்ஜ் செய்து வைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் மில்ஸ்.
nice!!!!!!!