உலக கோப்பை டி20 தொடரின் சூப்பர் 8 சுற்றில், இந்தியா & ஆஸ்திரேலிய அணிகள் இன்று மோதுகின்றன. இப்போட்டி, பிரிட்ஜ்டவுன் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

உலக கோப்பை டி20 தொடர் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. தொடக்க லீக் சுற்றில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. நான்கு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடித்த அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றன. இ பிரிவில் பாகிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து அணிகளும், எப் பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகளும் இடம் பிடித்தன.
எப் பிரிவில் இன்று நடக்கும் சூப்பர் 8 லீக் ஆட்டத்தில் டோனி தலைமையிலான இந்திய அணி, மைக்கேல் கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. வயிற்றுக் கோளாறு காரணமாக தென் ஆப்ரிக்க அணியுடனான லீக் ஆட்டத்தில் விளையாடாத கவுதம் கம்பீர், இப்போட்டியில் களமிறங்குகிறார்.
விஜய், ரெய்னா, யுவராஜ், யூசுப் பதான், டோனி, ஜடேஜா ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். குறிப்பாக ரெய்னாவின் அதிரடி ஆட்டம், ஆஸி. பந்துவீச்சாளர்களுக்கு சவாலாக இருக்கும். ஹர்பஜன், பிரவீன், ஜாகீர் ஆகியோரும் அதிரடியாக ரன் குவிக்கக் கூடியவர்கள் என்பதால், இந்திய அணியின் பேட்டிங் வரிசை மிக வலுவாக அமைந்துள்ளது. ஜாகீர், பிரவீன், நெஹ்ரா வேகத்துடன் அனுபவ வீரர் ஹர்பஜனின் சுழலும் ஆஸி. வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்கும்.
யுவராஜ், பதான், ஜடேஜா, ரெய்னா ஆகியோரும் பந்துவீச்சில் கைகொடுக்க முடியும் என்பது இந்திய அணிக்கு சாதகமான அம்சம். டி20 உலக கோப்பையில் இதுவரை பெரிதாக சாதிக்க முடியாத ஆஸ்திரேலிய அணி, இம்முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்ற உறுதியுடன் உள்ளது. அந்த அணியின் வேகப்பந்து வீச்சு மிக வலுவாக அமைந்துள்ளது.
பார்படாஸ் களம் வேகத்துக்கு சாதகமாக இருக்கும் என்பதால் நேன்னஸ், வாட்சன், ஹாரிஸ், டெய்ட் ஆகியோரை சமாளிப்பது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சிரமமாகவே இருக்கும். இந்திய அணியுடனான போட்டி குறித்து ஆஸி. கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறுகையில், ‘இந்திய அணி மிக வலுவாக உள்ளது. ஐந்து சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பது டோனிக்கு சாதகமாக இருக்கும். எனினும், சுழற்பந்து வீச்சை கண்டு பயப்படமாட்டோம். அதை சமாளிக்கக் கூடிய திறமையான வீரர்கள் ஆஸ்திரேலிய அணியில் உள்ளனர்.
காயம் அடைந்துள்ள ஜான்சன் விளையாடுவது பற்றி போட்டி தொடங்கும் முன்பே முடிவு செய்வோம். அவர் விளையாட முடியாவிட்டால், அவருக்கு பதிலாக ஹாரிஸ் சேர்க்கப்படுவார்’ என்றார்.
அரை இறுதிக்கு முன்னேற, சூப்பர் 8 சுற்றில் குறைந்தபட்சம் 2 வெற்றியாவது தேவை என்பதால் இரு அணிகளுமே முனைப்புடன் களமிறங்குகின்றன. சம பலம் வாய்ந்த அணிகள் மோதும் இப்போட்டி, மிகவும் விறுவிறுப்பாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Blog Archive

Sample Widget