பத்து ஆண்டுகளுக்குப் பிறகு முகேஷ் மற்றும் அனில் சகோதரர்கள் ஒரே நேரத்தில் ஒன்றாக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுலா சென்று திரும்பியுள்ளனர்.
ரிலையன்ஸ் குழுமத்தை நிறுவிய திருபாய் அம்பானி கடந்த 2002ம் ஆண்டு இறந்தார். அதன் பிறகு சொத்து பிரச்னையால் முகேஷ் மற்றும் அனில் சகோதரர்களிடையே விரிசல் ஏற்பட்டது. பின்னர் 2005ம் ஆண்டு குடும்ப ஒப்பந்தம் மூலம் சொத்துக்களை பிரித்துக் கொண்டனர். எனினும், கடந்த 8 ஆண்டுகளாக இருவரும் பிரிந்தே இருந்தனர். ஒரு இடத்துக்கு ஒரே நேரத்தில் செல்வதைக்கூட இருவரும் தவிர்த்து வந்தனர்.
குடும்ப ஒப்பந்தப்படி, தனது நிறுவனத்துக்கு காஸ் தர மறுப்பதாக முகேஷ் மீது அனில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் கடந்த மாதம் தீர்ப்பு வெளியானது. அதில், குடும்ப ஒப்பந்தத்தின்படி காஸ் வழங்க முகேஷுக்கு உத்தரவிட முடியாது என்றும், ஒப்பந்தத்தை திருத்திக் கொள்ளுமாறும் உத்தரவிட்டது.
இதையடுத்து, பிரச்னைகளை சுமூகமாக தீர்த்துக் கொள்ளப் போவதாக அறிவித்தனர். இருவரிடையே சமரசம் ஏற்பட்டதையடுத்து, கடந்த மாதம் 30ம் தேதி திருப்பதிக்கு சென்ற அனில் அம்பானி, தனது அண்ணனுக்கு சொந்தமான விருந்தினர் இல்லத்தில் தங்கினார்.
இதற்கிடையே, உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் துவக்க விழாவைக் காண இருவரது குடும்பத்தினரும் தென்னாப்பிரிக்கா சென்றிருந்தனர். இவர்கள் அனைவரும் ஒரே ஓட்டலில் தங்கியிருந்தனர்.
அங்கு தங்கியிருந்தபோது தொலைத்தொடர்பு மற்றும் நிதித்துறையில் ஒருங்கி ணைந்து செயல்படுவது குறித்து முகேஷின் நெருங்கிய நண்பர் ஆனந்த் ஜெயின் முன்னிலையில் முக்கிய பேச்சு வார்த்தை நடை பெற்றதாக கூறப்படுகிறது. 3 நாட்கள் சுற்றுலாவை முடித்துக் கொண்டு நேற்று மும்பை திரும்பினர்.
இதற்கு முன்பு கடந்த 2000ம் ஆண்டு தந்தை திருபாய் அம்பானி, தாய் கோகிலாபென் உட்பட அம்பானி சகோதரர்கள் ஒன்றாக சுற்றுலா சென்றனர். 10 ஆண்டுகளுக்குப் பிறகு அம்பானி குடும்பத்தினர் மீண்டும் ஒன்றாக இணைந்து சுற்றுலா சென்று வந்துள்ளனர்.