நமது கலாசார மரபில் திருமணம் புனித உறவு. எனினும் மண வாழ்க்கையில் தீர்க்க முடியாத பிணக்கும் கொடுமையும் தொடரும்போது புனிதத்தை காரணம்காட்டி அதிலேயே நீடிக்க முடியாது. விடுபட்டு வாழ்வதே சிறந்தது. மூத்தோர் வாக்கும் முது நெல்லிக் கனியும் முன் கசந்து பின் இனிக்கும் என்பார்கள். வாஸ்தவம்தான். ஆனால் பல பழமொழிகள் மூத்தோர் சொன்னது அல்ல. இடைச்செருகல். அதிலொன்றுதான் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்ற ‘மணிமொழி’. கல், புல் என்று சொல்லி, கொடுமைகளை தாங்கிக்கொண்டு வாழ முடியாது; வாழவும் கூடாது. இப்படிப்பட்ட சிக்கலில் மாட்டியவர்கள் திருமண பந்தத்தில் இருந்து சட்டரீதியாக விலகுவது கடினமாக இருந்தது. இதற்கு ஒரு விடிவு வந்திருக்கிறது. விவாகரத்து பெறுவதை எளிதாக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.
அற்ப காரணங்களுக்காக அற்புதமான திருமண பந்தத்தை உதறுவதை ஏற்க முடியாது. இந்த வகை தம்பதியர் யோசித்து மனப்பக்குவம் அடைவதற்கு போதிய கால அவகாசம் அளிப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான். ஆனால் மீண்டும் ஒன்றுசேர முடியாத அளவுக்கு திருமண உறவில் முறிவு ஏற்பட்டால் அவர்களுக்கு விரைவில் மண விலக்கு கொடுப்பதே உரிய நீதியாக இருக்கும். ஆனால் சட்டபூர்வ விவாகரத்து கிடைப்பதற்கு பல்வேறு சிக்கல்களை இவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. விவாகரத்து கிடைக்காமல் காலம் கடந்துகொண்டே போகும்போது, மண வாழ்க்கையில் அவர்களுக்கு ஏற்பட்ட உளைச்சலுக்கு நிகரான வேதனையை அடைய வேண்டி இருக்கிறது.
விவாகரத்து வழக்குகளை விரைவில் முடிக்க வகைசெய்வதற்காக இந்து திருமண சட்டம் மற்றும் விசேஷ திருமண சட்டத்தில் திருத்தம் செய்து, ‘திருமண சட்ட (திருத்த) மசோதா 2010’ என்ற புதிய மசோதா கொண்டுவர இப்போது ஒப்புதல் பெறப்பட்டிருக்கிறது. இதன்படி, கணவன்&மனைவி இருவரும் மீண்டும் ஒன்று சேர முடியாத அளவுக்கு திருமண உறவில் முறிவு ஏற்பட்டால் அதை விவாகரத்துக்கான காரணமாக கருத வகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக பிரிந்து வாழ்பவர்கள் விவாகரத்து பெற வழி பிறக்கும். மேலும் ஒரு தரப்பு கோர்ட்டுக்கு வராமல் வழக்கை இழுத்தடிக்கும் நிலையையும் மாற்றி, உடனடி விவாகரத்துக்கு இந்த மசோதா வகை செய்திருக்கிறது.
இதுபோன்ற சட்டதிருத்தம் தேவை என்பது சட்ட கமிஷன் அறிக்கையிலும் உச்சநீதிமன்றத்தின் சில வழக்குகளிலும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு முற்போக்கானது, பாராட்டத்தக்கது.