அமெரிக்காவில் ஒரு கைதியை சுட்டு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளனர். அந்த நாட்டில் வழக்கமாக இப்படி செய்வதில்லை. தூக்கில் தொங்கவிடுவது, ஊசி மூலம் ரத்தக் குழாயில் விஷம் செலுத்துவது, நாற்காலியில் கட்டி மின்சாரம் பாய்ச்சுவது, அறைக்குள் பூட்டி விஷ வாயு செலுத்துவது போன்ற முறைகளை கையாள்வார்கள்.
தீர்ப்பு சொன்ன பிறகு 30 வருடமாக அந்த ஆள் ஜெயிலில் இருந்திருக்கிறான். கொடூரமான கொலைகாரன். சிறு வயதில் பெற்றோரை இழந்தவன்; வளர்த்தவர்களின் சித்திரவதையால் அவன் மனம் கல்லாகிவிட்டது என்று ஒரு காரணம் சொல்லி தண்டனையை நிறுத்த கடைசி நிமிடத்திலும் முயற்சி நடந்தது. பலனில்லை.
மரண தண்டனைக்கு எதிராக போராடும் அமைப்புகளுக்கு இந்த நிகழ்ச்சி கைகொடுக்கும். ஏற்கனவே அங்கு 14 மாநிலங்களில் அதை ஒழித்துவிட்டனர். மீதி 36ல் சென்ற வருடம் 52 பேருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. கொலை குற்றத்துக்கு 58 நாடுகளில் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. 95 நாடுகள் அதை கைவிட்டுள்ளன. அரிதாக கொல்பவை ஏனைய நாடுகள். இந்தியாவை அதில் சேர்க்கலாம். சென்ற 15 ஆண்டுகளில் ஒருவர்தான் தூக்கில் போடப்பட்டார். சீனாவில் ஆண்டுக்கு ஆயிரம் பேருக்கு குறைவில்லை. பெரும்பாலும் சுட்டுத் தள்ளுவதுதான்.
ஒரு காலத்தில் தெரு கம்பத்தில் கட்டி வைத்து அரை மணிக்கு ஒரு துண்டு வீதம் கொஞ்சம் கொஞ்சமாக கத்தியால் சீவுவார்கள். கழுமரம் ஏற்றுவது, சக்கரத்தில் கட்டி உடலை கிழிப்பது, சிலுவையில் அறைவது, பானையில் போட்டு வேக வைப்பது, ஓடவிட்டு கல்லால் அடிப்பது, வெடி மருந்தை உடலில் பூசி கொளுத்துவது.. இன்னும் பல வகையான வழிகளில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கி திருப்தி அடைந்திருக்கிறது மனித சமூகம். சமீப சரித்திரத்தில் ராணுவத்தை விட்டு ஓடிப்போன ஒன்றரை லட்சம் பேருக்கு மரண தண்டனையை துப்பாக்கிகளால் நிறைவேற்றியது சோவியத் யூனியன்.
கொடிய குற்றங்கள் குறைய இந்த தண்டனை இருந்தாக வேண்டும் என நம்புபவர்கள் அதிகம். சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளும் விதிவிலக்கல்ல. இன்றைய தேதியில் உலகெங்கும் 17,000+ கைதிகள் மரணத்தை எதிர்நோக்கி ஒவ்வொரு நிமிடத்தையும் உளைச்சலுடன் கடக்கின்றனர். அதைவிட பெரிய தண்டனை வேறில்லை.