போலி டாக்டர்கள் வரிசையாக போலீஸ் பிடியில் சிக்குகிறார்கள். வேட்டை என்று சொல்வது பொருத்தமில்லை. திருடர்கள், மாவோயிஸ்டுகள் மாதிரி தப்பு செய்துவிட்டு தலைமறைவாக திரியவில்லை இவர்கள். பல வண்ண ஃப்ளெக்ஸ் போர்டு செய்து வீட்டு வாசலில் மாட்டியிருந்தவர்கள்.
எட்டாவது ஃபெயிலானவர், எழுதப் படிக்க தெரியாமல் மளிகை கடையில் எடுபிடி வேலை பார்த்தவர், தாசில்தார் ஆபீஸ் வாசலில் மனு எழுதி பிழைத்தவர் என்று இவர்களின் பூர்வாசிரமம் வெளியாவதை பார்த்து காதுவழி புகை விடுவோர் அநேகம். 35 ஆயிரம் போலிகள் தொழில் செய்வதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது. மருத்துவ கவுன்சிலின் தமிழக பிரிவு அதில் இரண்டாயிரம் பேரின் பெயர், முகவரி சேகரித்து அரசிடம் கொடுத்திருக்கிறதாம். போலீஸ் நடவடிக்கை அதன் அடிப்படையில் தொடர்வதாக தெரிகிறது.
எம்.பி.பி.எஸ் படிக்காமல் டாக்டர் தொழில் செய்பவர்கள், சித்தா ஆயுர்வேதா போன்ற மாற்று மருத்துவம் படித்து விட்டு எம்.பி.பி.எஸ் படித்தவர்கள் போல அலோபதி ‘இங்கிலீஸ் மெடிசின்’ மருத்துவம் பார்ப்பவர்கள். இப்படி போலிகளை இரு பிரிவாக போலீஸ் கணக்கெடுக்கிறது. மருந்துகளை கேப்சூல் வடிவத்தில் பேக்கேஜ் செய்வது, சில மருந்து கலவைகளை ஊசி மூலம் செலுத்த ஏதுவாக திரவமாக தயாரிப்பது எல்லாம் மாற்று மருத்துவத்திலும் வழக்கத்துக்கு வந்து ஆண்டுகள் ஆகிறது. இதை சுட்டிக் காட்டி இந்திய முறை மருத்துவர்கள் முறையிடுகின்றனர்.
ஜுரம், தலைவலி, பேதி போன்ற தொல்லைகளுக்கு விளம்பரங்களில் உபாதை  டாக்டர் சீட்டு இல்லாமலே கடைகளில் மருந்து மாத்திரை விற்கப்படுகிறது. அதை எழுதிக் கொடுப்பது குற்றமா என்றும் இவர்கள் கேட்கிறார்கள். அப்படி பார்த்தால் இலவச ஐடியா தரும் நண்பர்களை, பார்க்கில் வாக் போகிறவர்களையும் போலி டாக்டர் லிஸ்டில் சேர்க்கலாம். அலகாபாத்தில் ஒரு கம்பெனி வைத்ய ரத்னா, வைத்ய விஷாரத் போன்ற பட்டங்கள் விற்கிறது. அது இருந்தால் டாக்டர் தொழில் பார்க்கலாம் என்று ராஜஸ்தானில் சட்டம் இருக்கிறது.
கார்பைடு மூலம் பழுக்க வைப்பது தெரிந்ததும் மாம்பழம் சாப்பிடுவதையே பாதிப்பேர் விட்டு விட்டார்கள். அது மாதிரி, போலி டாக்டர்கள் செய்திகள் அணிவகுப்பதை தொடர்ந்து அசல் டாக்டர்களிடம் கூட்டம் குறைந்து விட்டதாம். நல்லதுதானே.

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Sample Widget