விழிப்புணர்வுக்கும் சுத்தத்துக்கும் பெயர்பெற்றவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கேரள மக்கள். ஆனால் அங்குதான் கொடிய நோய்கள் அணிவகுக்கின்றன. இப்போது பன்றிக் காய்ச்சல் மிரட்டிக்கொண்டு இருக்கிறது. இதைத்தவிர டெங்கு, மலேரியா, நிமோனியா, எலிக்காய்ச்சல் என்று வகைவகையான நோய்கள் முளைத்துள்ளன. ஈரமும் குளிர்ச்சியும் பரவிக் கிடக்கும் பருவமழைக் காலத்தில் நோய் பெருக்கம் சாதாரணமானதுதான் என சொல்லி மாநில நிர்வாகம் இதன் தீவிரத்தை நீர்த்துப்போக செய்கிறது. சுகாதாரத் துறை அமைச்சர் ஸ்ரீமதி டீச்சர் இன்னும் ஒருபடி மேலே போய், ‘20 பேருக்கு லேசாக காய்ச்சல், பத்திரிகைகள்தான் இதை பெரிதுபடுத்துகின்றன’ என்று கூறியிருந்தார். ஆனால் பன்றிக்காய்ச்சலுக்கு அங்கு இதுவரை 18 பேர் பலியாகி உள்ளனர். இதில் 6 பேர் கர்ப்பிணிகள். அரசு, தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. இந்த நேரத்தில் அரசு மருத்துவமனை டாக்டர்கள் பணிமாற்றம் செய்யப்பட்ட பிரச்னையால், ஆஸ்பத்திரிகளில் போதுமான டாக்டர்கள் இல்லை. நோயாளிகள் படும் அவதிக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.
நிலைமை கட்டுமீறி போவதை அறிந்த கேரள அரசு பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசின் உதவியை நாடியது. மத்திய சுகாதாரத் துறை அதிகாரிகள் கேரளா வந்து ஆய்வு நடத்தினர். பன்றிக் காய்ச்சல் வைரஸ் கேரளத்தில் இப்போதும் அதிகமாக உள்ளது. தீவிர நடவடிக்கைகள் மூலம் இது கட்டுப்படுத்தப்படும் என்று கூறியுள்ளனர்.
மிக நெருக்கத்தில் உள்ள மாநிலம் என்பதால் தமிழகத்துக்கும் பன்றிக்காய்ச்சல் வைரஸ் பரவும் அபாயம் இருக்கிறது. ஆனால் தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதகதியில் எடுத்து வருகிறது. கேரள&தமிழக எல்லை மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல் பரிசோதனை மையங்கள் அமைக்க அரசு உத்தரவிட்டிருக்கிறது. மேற்கு கடற்கரையில் இப்போது மீன்பிடி தடை காலம். எனவே கேரள பகுதியில் முகாமிட்டிருந்த குமரி மாவட்ட மீனவர்கள் ஊருக்கு திரும்பி வருகின்றனர். இவர்கள் மூலம் நோய் தொற்று பரவாமல் இருக்க கிராமம் கிராமமாக சென்று அதிகாரிகள் அவர்களிடம் ரத்தப்பரிசோதனை நடத்தி வருகின்றனர். மேலும் கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் வாகனங்களை சோதனையிட்டு, பயணிகள் யாருக்காவது பன்றிக்காய்ச்சல் அறிகுறி இருக்கிறதா என மருத்துவ பரிசோதனை நடத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த வேகமான நடவடிக்கை பாராட்டத்தக்கது. வருமுன் காப்பதுதான் அனைத்து விஷயங்களுக்கும் நல்ல தீர்வு.