கம்யூனிச நாடான கடந்த வாரம் கோடீஸ்வரர்கள் மட்டுமே பங்கேற்ற மில்லியனர்ஸ் ஃபேர் நடந்துள்ளது. வைரம் பதித்த செல்போன், தங்க முலாம் பூசப்பட்ட ஸ்விஸ் வாட்ச் என எந்தப் பொருளை எடுத்தாலும் 20 லட்சம் டாலருக்கு குறையாது. ஆனாலும் கூட்டம் அலைமோதியுள்ளது. பல நூறு கோடி டாலருக்கு விற்பனை நடந்துள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
சீனாவில் மட்டும் 2.5 லட்சம் கோடீஸ்வரர்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. உலக அளவில் ஆறாவது இடத்தில் உள்ளது. ஆண்டுதோறும் 600 கோடி டாலருக்கு மேல் சொகுசு படகு, ஜெட் விமானம், வைரம் பதித்த செல்போன் போன்ற பொருட்கள் விற்பனையாகிறதாம். இது 2004ம் ஆண்டு புள்ளி விவரம். சீனக் கோடீஸ்வரர்களில் 99 சதவீதம் பேர், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகளின் வாரிசுகள்தான். அவர்களிடம்தான் கோடி கோடியாய் குவிந்து கிடக்கிறது.
அரசுத் திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்துவது இந்த வாரிசுகள்தான். உலகிலேயே மிகப்பெரிய த்ரீ கார்ஜஸ் அணையைக் கட்டி அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல் படுத்தியவர் லீ ஜியோலின். இவர் தியானன்மென் சதுக்க படுகொலைக்கு உத்தரவிட்ட கம்யூனிஸ்ட் தலைவர் லீ பெங்கின் மகள்.
சமீபத்தில் 100 கோடி டாலர் திரட்டிய நியூ ஹாரிஸன் கேப்பிடல் நிறுவனத்தின் தலைவரான வென் யூன்சோங், சீனப் பிரதமரின் மகன். இவருடைய நிறுவனம்தான் அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சீன அதிபரின் மகன் ஹூ ஹைபெங்க், நியூக்டெக் நிறுவனத்தின் அதிபர். சமீபத்தில் நமீபியாவில் 3.4 கோடி பவுண்ட் மதிப்புள்ள ஒப்பந்தத்தை பெற்றது. இதில் பல கோடி ஊழல் நடந்ததாக புகார் எழுந்து பெரிய பிரச்னை ஆனது. சீனாவின் மிகப்பெரிய 12 ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அரசியல் வாரிசுகளுக்குத்தான் சொந்தம். இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இது தொடர்பாக செய்தி வெளியிடவும் சீன அரசு தடை விதித்துள்ளது.
சீனாவில் அதிக கூலி கேட்டு போராட்டம், வேலை இழப்பால் தற்கொலை ஆகியவை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து கோடீஸ்வர வாரிசுகளின் மீதான மக்கள் வெறுப்பும் அதிகரித்து எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.