இலங்கையில் கடந்த ஆண்டு நடந்த போரின் போது சுமார் 3 லட்சம் ஈழத்தமிழர்கள் அகதிகளாக தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டனர். அவர்களை, அவர்களது சொந்த ஊர்களில் மீண்டும் குடியேற்ற வேண்டும் என்று மேற்கத்திய நாடுகள் வற்புறுத்தியதால் இலங்கை பணிந்தது.என்றாலும் தமிழர் பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றிய பிறகுதான் மக்களை மீண்டும் குடியமர்த்த முடியும் என்று சிங்கள அரசு திட்டவட்டமாக கூறியது. அதன்படி தமிழர்களின் கிராமங்களில் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டன. அதன் பிறகு தமிழர்கள் குடி அமர்த்தப்பட்டனர்.
மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளில் மக்கள் மீண்டும் குடியமர்த்தப்பட்ட நிலையில் நாச்சிக்குடா பகுதியில் மட்டும் மக்கள் மீண்டும் குடியேற தடை விதிக்கப்பட்டது. அங்கு கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளையும் சிங்கள ராணுவம் மேற்கொள்ளவில்லை.நாச்சிக்குடா பகுதிக்குள் மக்களை ராணுவத்தினர் வர விடவில்லை. இது ஈழத்தமிழர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அங்கு மனித புதை குழிகள் இருக்கலாம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் சம்பந்தன் கூறி இருந்தார்.
அதை உறுதிப்படுத்தும் வகையில் மன்னார் நாச்சிக்குடாவில் பெரிய, பெரிய மனித புதை குழிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டு நிபுணர்கள் அந்த புதை குழிகளை கண்டுபிடித்தனர். நாச்சிக்குடா முழுவதும் புதை குழிகளாக இருப்பதாக அவர்கள் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளனர்.
புதை குழிகளை தோண்ட, தோண்ட ஈழத்தமிழர்களின் பிணங்கள் வருகிறது. புதைக்கப்பட்ட அவர்கள் அனைவரும் சிங்கள ராணுவத்தால் சித்ரவதை செய்யப்பட்டு கொடூரமாக சுட்டுக்கொல்லப்பட்டவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
போரின்போது பல்லாயிரக்கணக்கான விடுதலைப்புலிகள் பிடிபட்டனர். மேலும் தடுப்பு முகாம்களில் இருந்தவர்களில் பெரும்பாலான இளைஞர்கள், இளம்பெண்களை ராணுவத்தினர் சந்தேகத்தின் பேரில் பிடித்து சென்றனர். அவர்கள் அனைவரும் காணாமல் போய் விட்டனர்.அவர்கள் கதி என்ன ஆனது என்பது தெரியாமல் இருந்தது. அவர்களை ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்ற ராணுவம், நாச்சிக்குடாவில்தான் புதைத்தது தெரிய வந்துள்ளது.
பெரும்பாலான பிணங்கள், எலும்புக்கூடுகளாக இருந்தன. எண்ண முடியாத அளவுக்கு இந்த பிணக்குவியல் இருப்பதாக வெளிநாட்டு நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே சிங்கள ராணுவம் நடத்திய இனப்படுகொலை குறித்து அமெரிக்க அதிகாரிகள் கடந்த ஆண்டு விசாரணை நடத்தினர். இதன் அறிக்கை அடுத்த மாதம் (ஜூன்) 16-ந்தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.
ஆனால் இது தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபக்சேக்கு எந்தவித நெருக்கடியும் ஏற்படவில்லை. இந்திய அரசு மவுனமாக இருந்து ஓசையின்றி பின்னணியில் இருப்பதால் ராஜபக்சே தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்.