வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம், சென்னை & ஆந்திரா இடையே 2 நாளில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் கடலோர பகுதிகளில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அக்னி வெயில் வறுத்தெடுக்கிறது. வளிமண்டலத்தில் ஏற்பட்ட காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அவ்வப்போது சூறைக்காற்றுடன் மழையும் பெய்தது. கரூர் மாவட்டத்தில் நேற்று மாலை பலத்த மழை கொட்டியது. ஆனாலும், சென்னை, வேலூர் உள்பட பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. வேலூரில் கடந்த வாரம் 110 டிகிரி வெயில் சுட்டெரித்தது. தற்போது தமிழகத்தில் பரவலாக 102 டிகிரி வரை வெயில் காணப்படுகிறது.
இந்நிலையில், வங்கக்கடலில் அந்தமான் அருகே புயல் சின்னம் உருவாகி உள்ளது. இதற்கு ‘லைலா’ என பெயரிடப் பட்டுள்ளது. லைலா புயல் சென்னையில் இருந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 700 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது மெல்ல மெல்ல வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அடுத்த 48 மணி நேரத்தில் சென்னைக்கும், ஆந்திராவுக்கும் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புயல்காரணமாகசென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம்உள்ளிட்ட
கடலோரமாவட்டங்களில் இன்று இரவு முதல் பலத்த மழை பெய்தவற்கான வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகி இருப்பதையடுத்து பாம்பன் துறைமுக அலுவலகத்தில் நேற்றிரவு 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. நாட்டுப்படகில் மீன்பிடிக்கும் மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேதாரண்யம் கடல் பகுதியில் பலத்த காற்று வீசுவதால் 5 ஆயிரம் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லாமல் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். நாகை துறைமுகத்தில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வேதாரண்யம் பகுதியில் உள்ள மீனவ கிராமங்களில் நேற்றிரவு பஞ்சாயத்தார் மைக் மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து வேதாரண்யம், கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், வானவன் மகாதேவி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. படகுகள் அனைத்தும் கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.