கத்தரி வெயில் கடந்த 4ம் தேதி தொடங்கியது. இதனால் கடும் வெயிலில் மக்கள் அவதிப்பட்டனர். இந்தநிலையில், வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த லைலா புயல் ஆந்திர மாநிலம் ஓங்கோலை நோக்கி நகர்ந்ததால் சென்னை நகரில் நேற்று அதிகாலையில் இருந்தே பலத்த காற்றுடன் மழை பெய்தது.
இதனால் சென்னையில் பாரிமுனை, பூங்கா நகர், பெரம்பூர் ஜமாலியா, கன்னிகாபுரம், ஜெனரல்பேட்டர்ஸ் சாலை, ஜாம்பஜார், நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் ரோடு, ஆழ்வார்பேட்டை, தி.நகர், கோடம்பாக்கம் உட்பட பல இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளித்தது. ரயில்வே சுரங்கப்பாதைகள், அண்ணாசாலை, ஈ.வெ.ரா.சாலை ஆகியவற்றிலுள்ள சுரங்கப்பாதைகளிலும் மழைநீர் தேங்கியது. ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர், அசோக்நகர், கே.கே.நகர், பெசன்ட் நகர், தி.நகர், கீழ்பாக்கம் உள்பட பல்வேறு இடங்களில் 30க்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில இடங்களில் விழுந்த மரங்களை அந்த பகுதியில் இருந்தவர்களே அப்புறப்படுத்தினர்.
பெரும்பாலான பஸ் நிறுத்தங்களில் மழைநீர் தேங்கியதால் பயணிகள் சிரமப்பட்டனர். பல இடங்களில் ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள் மழைநீரில் சிக்கி நின்றுவிட்டன.
மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரி எதிரிலுள்ள சாலையில் மழைநீர் தேங்கி ஏரிபோல் காட்சியளித்தது. இந்த பகுதியில் வந்த ஆட்டோ, மோட்டார் சைக்கிள்கள், கார்கள் பழுதாகி நின்றன. வடபழனி, அய்யப்பன்தாங்கல், தி.நகர், திருவான்மியூர் உள்ளிட்ட பஸ் நிலையங்களில் மழைநீர் தேங்கி குளமாக மாறின.
மழைநீர் வடிகால்வாய்களில் துவாரங்களில் பிளாஸ்டிக் பை போன்றவை அடைத்துக் கொண்டதால் மழைநீர் வெளியேற வழியின்றி சாலையில் தேங்கியது. மழைநீரை அகற்றவும், சாலைகளில் விழும் மரங்களை வெட்டி அகற்றவும் தேவையான கருவிகளை வார்டு அலுவலகங்களுக்கு மாநகராட்சி வழங்கியுள்ளது. ஆனால் இவற்றை பயன்படுத்தி மழைநீரை அகற்றும் பணியை வார்டு ஊழியர்கள் மூலம் மேற்கொள்ள உதவி பொறியாளர்கள் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. சில இடங்களில் மட்டுமே மாநகராட்சி ஊழியர்கள் மழைநீர் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
நடைபாதை வியாபாரிகள் தவிப்பு: அதிகாலை முதலே மழை பெய்ததால் திருவல்லிக்கேணி, ஜாம்பஜார், மயிலாப்பூர், லஸ், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, அமைந்தகரை ஷெனாய் நகர், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, தி.நகர், பாண்டிபஜாரில் உள்ள நடைபாதை வியாபாரிகள் பலரும் கடைகளை திறக்கமுடியாமல் அவதிப்பட்டனர். வழக்கமாக பகல் 12 மணிக்கே மக்கள் கூட்டம் சேரும் மெரினா கடற்கரை, நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.
வடசென்னையில் கடலோரப்பகுதிகளான எண்ணூர், திருவொற்றியூர் போன்ற பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பலத்த சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு, ராட்சத அலைகள் உருவாகி, கடலோரத்தில் வசிக்கும் மீனவர்களின் குடிசைகளில் கடல் நீர் புகுந்துள்ளது.
எண்ணூர் காட்டுக்குப்பம், சிவன்படைவீதி, திலகர்நகர், சத்தியவாணிமுத்துநகர், நேருநகர் போன்ற இடங்களில் சிமென்ட் ஓடு, தகடு ஆகியவற்றால் அமைக்கப் பட்ட கூரைகள் காற்றில் பறந்து 200 மீட்டர் தூரத்திற்கு அப்பால் வீசப்பட்டன. இதனால் பீதியடைந்த பொதுமக்கள் நள்ளிரவில் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களுக்கு ஓடி வந்தனர். ஓலை குடிசைகள் கீழே சாய்ந்ததோடு, வீட்டின் சுவர்களும் இடிந்து விழுந்தன. எண்ணூரில் சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகள் சேத மடைந்து, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான டிவி, பீரோ, கட்டில் உள்ளிட்ட பொருட் கள் நாசமாயின.
நேரு நகரில் வீட்டின் கூரை இடிந்து கிருஷ்ணவேணி என்ற பெண் படுகாயம் அடைந்தார். மின் கம்பங்களும் சரிந்தன. மின் கம்பிகளும் அறுந்து விழுந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப் பட்டது. இப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. மேலும், எண்ணூர் முகத்துவார குப்பம் பகுதியில் இருந்த 50க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் சேதமடைந்தன. மீன் பிடி வலைகள், கட்டுமரங் கள் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டன.