ஐஸ்லாந்தில் எரிமலை வெடித்ததால் ஏற்பட்ட சாம்பல் மூட்டம் காரணமாக, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவையை, ஏர் இந்தியா நாளை முதல் மீண்டும் தொடங்க உள்ளது. பிரிட்டன், ஃபிராங்பர்ட் மற்றும் டொரண்டோ ஆகிய நகரங்களுக்கான தனது வழக்கமான சேவைகளை நாளை முதல் ஏர் இந்தியா தொடங்க உள்ளது. சாம்பல் மூட்டம் காரணமாக ஐரோப்பிய வான் பாதைகள் மூடப்பட்டதால், கடந்த 6 தினங்களாக உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் இந்த பாதை வழியாக இயக்கப்படும் பல ஆயிரக்கணக்கான விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் ஐரோப்பிய வான் பாதையில் நேற்று சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, லண்டன் விமான நிலையம் இன்று திறக்கப்பட்டு செயல்படத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்தே ஐரோப்பிய நாடுகளுக்கான தனது விமான சேவையை தொடங்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது. இதனை இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்த ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர், நாடு திரும்ப முடியாமல் ஏற்கனவே காத்துக்கொண்டிருக்கும் பயணிகளின் வசதிக்காக கூடுதல் விமானங்களை இயக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், அதற்காக கூடுதல் விமானிகளும், சிப்பந்திகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். இதனிடையே இன்று மாலையே முதல்கட்டமாக டெல்லி - பாரீஸ் விமான சேவையை ஏர் இந்தியா இயக்க உள்ளதாக மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது