ஆஸ்லோ: ஐஸ்லாந்து எரிமலையால் ஐரோப்பாவில் பயணிகள் பாடு பெரும்பாடாகியுள்ளது.பிஸினஸ் பெரும்புள்ளிகள், திரையுலக நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் என ஏராளமானோர் விமான நிலையங்களில் சிக்கித் தவிக்கின்றனர். அப்படி சிக்கிக் கொண்டவர்களில் ஒருவர் பிரபல ஹாலிவுட் காமெடி நடிகர் ஜான் க்ளீஸ். மோண்டி பைதான், ஃபால்டி டவர்ஸ் போன்ற படங்களில் நடித்துள்ளார்.ஆஸ்லோவில் நடக்கும் ஸ்கான்டிநேவியன் டாக் ஷோவுக்கு வந்திருந்தார் க்ளீஸ். ஐஸ்லாந்து எரிமலை பிரச்சினையில், ஆஸ்லோ விமான நிலையம் மூடப்பட்டதால், ஷோ முடிந்து நார்வேயிலிருந்து வெளியே செல்ல வேறு வழியே இல்லாத நிலை. எனவே டாக்ஸியில் பயணம் செய்துள்ளார் க்ளீஸ். "ஆஸ்லோவிலிருந்து ஸ்டாக்ஹோமுக்கு நிறைய டாக்ஸிகள் செல்கின்றன. பாரிஸ் வரை கூட போகிறார்கள். இதுதான் நீண்ட தூர டாக்ஸி பிரயாணம்.நான் ஆஸ்லோவிலிருந்து பிரஸ்ஸல்ஸ் வரை ரயிலில் போக முயன்றேன். டிக்கெட் கிடைக்காததால் டாக்ஸியில் பயணித்தேன். 3300 பவுண்ட்டுகள் (ரூ. 226,095) செலவானது" என்கிறார் க்ளீஸ். பிரஸ்ஸல்ஸிலிருந்து ஈரோ ஸ்டார் ரயில் மூலம் லண்டன் போய்ச் சேர்ந்தாராம் க்ளீஸ். படகில் பயணித்த பாடகி...இதற்கிடையே ஹாலிவுட்டின் பிரபல பாடகி விட்னி ஹூஸ்டன், டப்ளினில் தான் ஒப்புக் கொண்ட நிகழ்ச்சிக்கு படகில் பயணம் செய்துள்ளார். அனைத்து விமானங்களில் ரத்து செய்யப்பட்ட நிலையில், பர்மிங்காமிலிருந்து அயர்லாந்தின் டப்ளினுக்கு மூன்றேகால் மணி நேரம் படகில் பயணித்து சென்றுள்ளார். அவரசு இசை நிகழ்ச்சியும் சிறப்பாக அமைந்ததாம்.