அரசு அதிகாரிகள் நடத்தை விதிகளுக்கு சட்ட வடிவம் கொடுக்க மத்திய அரசு முடிவு எடுத்திருக்கிறது. இத்தனை காலமாக இந்த யோசனை ஏன் உதிக்கவில்லை என்பது அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்குமே வெளிச்சம்.
அதிகாரிகள் என்ன செய்யக்கூடாது என்பது ஏற்கனவே விதிகளில் சொல்லப்பட்டிருக்கிறது. எது சாதாரண தவறு, எது பெரிய குற்றம் என்பது விவரிக்கப்பட்டு தண்டனை என்ன என்பதும் விதிகளில் குறிக்கப்பட்டுள்ளது. அதை செயல்படுத்துவதில்தான் பிரச்னை. ஒரே குற்றத்துக்கு ஆளுக்கு ஆள் அல்லது மாநிலத்துக்கு மாநிலம் மாறுபட்ட தண்டனை வழங்கப்படுகிறது. பெரும்பாலும் எந்த தண்டனையுமே வழங்கப்படுவது இல்லை.
காரணம், அரசியல்வாதிகளுடன் உள்ள நெருக்கம். அரசியல் அதிகாரத்தில் இருப்பவர் சொல்வது சட்டத்துக்கும் நியாயத்துக்கும் மாறாக இருக்குமானால் செய்ய முடியாது என்று மறுக்கக்கூடிய துணிவு எத்தனை அதிகாரிகளுக்கு இருக்கிறது என்பதை விரல் விட்டு எண்ணிவிடலாம். நேர்மையான அதிகாரிகளுக்கு உதாரணம் காட்ட இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஓய்வு பெற்றவர்களையே தேட வேண்டியிருக்கிறது.
இன்று அதிகார வர்க்கம் பெரிதும் மாறிவிட்டது. அறிவு, ஆற்றல், நேர்மைக்கு பதிலாக குவித்த சொத்துகளின் அடிப்படையில் திறமையை மதிப்பிடும் விபரீத அணுகுமுறை ஏனைய துறைகளை போலவே அதிகார வர்க்கத்தையும் விட்டுவைக்கவில்லை. அரசியல் எஜமானர் சொல்வதை சாக்கிட்டு சொந்த லாபத்துக்காக கூடுதலாக சில தவறுகளை அச்சமின்றி செய்யும் அதிகாரிகள் அதிகரித்து விட்டார்கள். நடத்தை விதிகளுக்கு சட்ட அங்கீகாரம் இல்லாததால் தவறுக்கு தண்டனை வழங்குவது மட்டுமல்ல, தவறு யார் செய்தது என்பதை கண்டறிய முயற்சி எடுப்பதே அபூர்வமாகி விட்டது. யூனியன் கார்பைடு ஆலை விவகாரத்தில் எந்த அரசு அதிகாரி மீதும் எந்த குற்றச்சாட்டும் எழவில்லை என்பதில் உள்ள ரகசியம் ஊரறியும்.
ஜனநாயக அமைப்புகள் மேலும் நிர்வாக அமைப்பின் மீதும் மக்களின் நம்பிக்கை கலகலத்து போயிருக்கும் நேரத்தில் மத்திய அரசின் மசோதா பாராட்டத் தக்கது. அதே சமயம், குற்றம் புரிந்த வீரர்களுக்கு தண்டனை கொடுப்பதில் ராணுவமே தயங்குவதை பார்க்கும்போது வெறும் சட்டங்கள் என்ன செய்துவிட முடியும் என்ற எண்ணமும் எழுகிறது.

0 comments:

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Sample Widget