வாரன் ஆண்டர்சனை கைது செய்து இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்துள்ளது. ஆங்கில செய்தி சேனல்களை பார்க்கும்போது அப்படி தோன்றுகிறது.
போபாலில் வாயு கசிந்தபோது, யூனியன் கார்பைடு கார்ப்பரேஷனின் தலைவராக இருந்தவர். அது அமெரிக்க நிறுவனம். போபால் அதன் கிளை. தலைவர், கேசுப் மகேந்திரா என்ற இந்தியர். இதில் அமெரிக்க கம்பெனிக்கு 51 சதவீத பங்கு. மீதி இந்தியர்களிடம். வெளிநாட்டினர் மெஜாரிடி பங்குகள் வைத்திருக்க சட்டம் அனுமதிக்காத காலம் அது. விதிவிலக்கை கவனியுங்கள்.
தொழிற்சாலைகள் சட்டம் (1948), பூச்சிமருந்து சட்டம் (1968), தண்ணீர் சட்டம் (1974), காற்று சட்டம் (1982) ஆகியவற்றின் கீழ் இந்த ஆலை கண்காணிக்கப்பட்டது. இதற்கான துறைகளில் ஊழியர்கள் எத்தனை, வசதிகள் என்ன என்பதை சொல்ல தேவையில்லை. ஆலையால் சூழல் மாசுபடவில்லை என்று மாசு கட்டுப்பாடு வாரியம் சான்றிதழ் கொடுத்தது, சம்பவம் நடப்பதற்கு 2 நாள் முன்புதான். பல முறை காஸ் கசிந்து, ஒரு முறை ஊழியர் இறந்த போதும் பாதுகாப்பு ஏற்பாடுகளில் மாற்றம் வரவில்லை. ஆலை நஷ்டத்தில் இயங்கியதை சாக்கிட்டு, பராமரிப்பு கண்துடைப்பாகி அனைத்தும் துரு பிடிக்க விட்டார்கள். காஸ் டேங்க் வால்வு உட்பட.
ஒரு பத்திரிகையாளரும் சில தன்னார்வ அமைப்புகளும் ‘எந்த நேரமும் ஆபத்து வெடிக்கலாம்’ என சங்கு ஊதிக் கொண்டிருந்தார்கள். இத்தனைக்கும் மத்தியில் ஆலையை சுற்றிய வெற்றிடத்தில் ஆயிரக்கணக்கான குடிசைகள் முளைத்தன. சுருக்கமாக சொல்வதானால், அரசு மேல்மட்டம் தொடங்கி வெட்டவெளியில் பாய் போட்டவர்கள் வரை அத்தனை பேரும் தப்பு செய்திருக்கிறார்கள். அலட்சியமாக நடந்திருக்கிறார்கள். மக்களை விஷம் செலுத்தி கொல்ல எவரும் சதி செய்யவில்லை. அதை சொல்லித்தான் குற்றச்சாட்டின் வீரியத்தை சுப்ரீம் கோர்ட் குறைத்தது.
மிகச் சிறந்த சட்டங்கள் இருந்தும் அவற்றை அமல்படுத்த தேவையான கட்டமைப்பும் மன உறுதியும் நம்மிடம் இல்லை. இந்த அடிப்படை விரிசலை சரி செய்தால் நாடு உருப்படும். அதை விடுத்து தனிநபர் வேட்டையில் நேரத்தை வீணடிப்பது பழி வாங்கும் உணர்ச்சியின் வெளிப்பாடு தவிர வேறில்லை. துரதிர்ஷ்டவசமாக, இந்திய கலாசாரத்தில் அது முக்கிய இடம் வகிக்கிறது.