மேஷம் :  
எதிலும் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.

ரிஷபம்:
கணவன்,மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். பணவரவு திருப்தி தரும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.

மிதுனம்:
மாலை 6 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். மாலையில் மகிழ்ச்சி தொடங்கும் நாள்.

கடகம்:
எதிர்பார்த்த வேலைகள் தாமதமாக முடியும். பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மாலை 6 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் எதிலும் பொறுமை தேவைப்படும் நாள்.

சிம்மம்:
நீண்ட நாட்களாக பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்தவரை சந்திப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டு. பழைய கடனை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். உற்சாகமான நாள்.

கன்னி:
பெரியோரின் ஆசி கிட்டும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். அக்கம்&பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லைகள் நீங்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். இனிமையான நாள்.

துலாம்:
சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.

விருச்சிகம்:
மாலை 6 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். முன்கோபத்தை குறையுங்கள். சகோதர வகையில் அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை ஓரளவு குறையும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.

தனுசு:
மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். மாலை 6 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.

மகரம்:
உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.

கும்பம்:
குடும்பத்தில் உங்கள் கை ஒங்கும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். நீண்டநாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

மீனம்:
உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்



தமிழ் வருடம் விக்ருதி
வைகாசி மாதம் 4ம் நாள், செவ்வாய் கிழமை,
வளர்பிறை. பஞ்சமி திதி நள்ளிரவு மணி 12.01 வரை; பிறகு, சஷ்டி திதி. சமநோக்குள்ள புனர்பூசம் நட்சத்திரம் இரவு மணி 11.25 வரை; பிறகு, மேல்நோக்குள்ள பூசம் நட்சத்திரம். நேத்திரம், ஜீவனுள்ள சித்தயோக நாள்.
நல்ல நேரம்:
காலை மணி 8 லிருந்து 9, மதியம் 12 லிருந்து 1, இரவு 7 லிருந்து 8 மணி வரை.
பொதுப் பலன்:
சொத்துப் பிரச்னை பேசி முடிக்க நன்று.
ராகு  காலம் 3 லிருந்து 4 .30 வரை
எமகண்டம் 9 லிருந்து 10 .30 வரை
மேற்கண்ட நேரங்களில் சுப காரியங்களை தவிர்க்கவும்.
சந்திராஷ்டமம்: மூலம்,பூராடம் நட்சத்திரங்கள் ( தனுசு ராசி )
மேற்கண்ட நட்சத்திர மற்றும் ராசிக்காரர்கள் புது முயற்சிகளையும்,வீண் வாக்குவாதங்களையும் தவிர்க்கவும்.


ஒரிசாவில் இருந்து 2,000 கி.மீ. தூரம் சென்று இலக்கைத் தாக்கும் அக்னி 2 ஏவுகணை நேற்று காலை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

உள்நாட்டு தொழில் நுட்பத்தில் அக்னி ரக ஏவுகணைகளை இந்திய விஞ்ஞானிகள் தயாரித்து வருகின்றனர். ஏற்கனவே, 700 கி.மீ. தூரம் சென்று இலக்கைத் தாக்கும் அக்னி 1 ரக ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டு ராணுவத்தில் சேர்க்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, 2,000 கி.மீ. தூரம் சென்று இலக்கை துல்லியமாகத் தாக்கும் அக்னி 2 ஏவுகணையை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (டி.ஆர்.டி.ஓ.), ஐதராபாத்தில் உள்ள பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன.
முற்றிலும் இந்தியாவின் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட அக்னி 2 ஏவுகணை ஒரிசாவின் வீலர் தீவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து நேற்று காலை வெற்றிகரமாக ஏவப்பட்டது.
நவீன ரேடார்கள் மற்றும் எலக்ட்ரோ ஆப்டிக் சாதனங்கள் மூலம் இதன் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டன.
20 மீட்டர் நீளமுள்ள அக்னி 2 ஏவுகணை சரியான பாதையில் சென்று வங்காள விரிகுடா கடல் பகுதியில் உள்ள இலக்கைத் தாக்கியது.
அக்னி 2 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்ததாகவும் கடந்த ஆண்டு மே 19 மற்றும் நவம்பர் 23ம் தேதிகளில் இரண்டு முறை ஏவப்பட்டபோது இருந்த சில குறைபாடுகள் இப்போது சரி செய்யப்பட்டு இருப்பதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
17 டன் எடையுள்ள அக்னி 2 ஏவுகணை, 1000 கிலோ எடையுள்ள அணுகுண்டை 2 ஆயிரம் கி.மீ. தூரம் எடுத்துச் சென்று தாக்கும் திறன் படைத்தது. இது இந்தியாவின் ஏவுகணை சாதனையில் மற்றொரு மைல்கல்லாக கருதப்படுகிறது.
அக்னி 2 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்ததாக 3,500 கி.மீ தூரம் சென்று தாக்கக்கூடிய அக்னி 3 ஏவுகணை சில மாதங்களில் சோதனை செய்யப்படுகிறது. இதற்கான பணிகளில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.


சட்டீஸ்கரில் மீண்டும் தாக்குதல் நடந்திருக்கிறது. நக்சலைட்கள் கண்ணிவெடியால் பஸ்ஸை தகர்த்துள்ளனர். 50 பேர் உடல் சிதறி இறந்திருக்கிறார்கள். ஒரு மாதம் முன்பு மத்திய ரிசர்வ் போலீஸ் வாகனங்களை சுற்றி வளைத்து கோர தாண்டவம் ஆடினர். 72 பேர் சிதைந்தனர். நேற்று தகர்க்கப்பட்டது பயணிகள் பஸ்.
ஆயுதம் இல்லாத நிராயுதபாணிகளை இவர்கள் கொல்வதில்லை என்று சில அறிவுஜீவிகள் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அது பொய் பிரசாரம் என்பதை நேற்றைய சம்பவம் காட்டிவிட்டது. நக்சலைட் வேட்டைக்காக தேர்ந்து எடுக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகள் சிலரும் அந்த பஸ்ஸில் பயணம் செய்தார்கள் என்பது கண்ணிவெடியை நியாயப்படுத்த முடியாது.
கண்ணிவெடிகளாலும் துப்பாக்கி குண்டுகளாலும் ஒரு அரசாங்கத்தை பணியவைக்க முடியாது என்பது இந்த அறிவாளிகள் மூளைக்கு மட்டும் எட்டுவதில்லை. உலகம் முழுவதும் திரும்பத் திரும்ப நிரூபிக்கப்படுகிறது. அண்டை நாடுகளிலும் பார்த்தோம். ஆனாலும் இவர்களுக்கு ரத்த வெறி கண்ணை மறைக்கிறது. குறைகள் மலிவாகவும் கோரிக்கைகள் நியாயமாகவும் இருந்தால்கூட வன்முறை வழியில் ஒருபோதும் தீர்வு கிடைக்காது. அமைதியை விரும்பும் மக்களே என்றும் எங்கும் பெரும்பான்மையாக இருப்பார்கள். ஆயுத வழியை நம்புவோர் மிகவும் குறைவு. அந்த சிறு கூட்டம் பெரும்பான்மையை உதறித்தள்ளி விட்டு தனது லட்சியத்தை அடைவது சாத்தியமே இல்லை.
உயிரைக் கொடுத்தேனும் இலக்கை அடைவோம் என்பது கைதட்டலுக்காக கவிஞர்கள் தீட்டும் சொல்லோவியம். அதை இரவல் வாங்கி ஒருவன் உச்சரிக்க, உடனே நரம்பு புடைத்து ஒரு கூட்டம் காட்டில் பயிற்சி பெற பின்தொடர்கிறது. இவர்களின் அடாவடிக்கு அரசுகள் முழு பதிலடி தருவதில்லை. காரணம், அதிரடியான நடவடிக்கையில் அப்பாவிகளும் பலியாவார்கள். ஆனால், தீவிரவாத தலைவர்கள் அரசை அந்த நிலைக்கு தள்ளுவதில் குறியாக இருப்பார்கள். நேற்றைய சம்பவத்தில் அந்த முத்திரை தெரிகிறது.
இனி அரசு முழு பலத்தையும் பிரயோகிக்க அனைத்து தரப்பிலும் நிர்ப்பந்தம் உருவாகும். அதை உதாசீனம் செய்ய முடியாது. அப்போது, தீவிரவாதிகளோடு அவர்கள் கேடயமாக பயன்படுத்தும் அப்பாவிகளும் பலியாக நேரிடுவது தவிர்க்க முடியாத சோகம்.


மூன்றாவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வந்தது. 12 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இந்த தொடரில் லீக், மற்றும் சூப்பர் 8 உள்பட அனைத்து போட்டிகளிலும் ஆஸ்திரேலியா தோல்வியே காணாமல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருந்தது.
ஆனால் இங்கிலாந்தை பொறுத்தவரையில் ஒரு தோல்வி, ஒரு டிராவை சந்தித்து அது இறுதிப்போட்டிக்குள் நுழைந்திருந்தது. நேற்று இரவு பார்படாஸ் மைதானத்தில் இறுதிப்போட்டி நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.
ஆஸ்திரேலிய வீரர்கள் வாட்சன், வார்னர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். சைடு பாட்டம் முதல் ஓவரை வீசினார். 3வது பந்தில் வாட்சன் அவுட் ஆனார். 2 ரன் எடுத்திருந்த அவர் ஸ்வானிடம் கேட்ச் கொடுத்தார். முதல் ஓவரிலேயே ஆஸ்திரேலியாவுக்கு சைடு பாட்டம் அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.
அடுத்த ஓவரில் வார்னர் ரன் அவுட்(2ரன்) ஆனார். 3வது ஓவரில் பிராட் ஹேடினை(1ரன்) பெவிலியனுக்கு அனுப்பினார் சைடு பாட்டம். மூன்று ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்தபோதும் ஆஸ்திரேலிய வீரர்கள் பரபரப்போ, பதற்றமோ இன்றி வெற்றி பெற்று விடலாம் என்ற தெம்புடனேயே காணப்பட்டனர்.
பவர்பிளையான 6 ஓவர் வரை ஆஸ்திரேலிய வீரர்கள் 24 ரன்களே எடுத்திருந்தனர். அந்த அளவுக்கு பவுலர்கள் நெருக்கடி கொடுத்தனர். கிளார்க் ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினார். அவர் 35 பந்துகளில் 27 ரன்கள் எடுத்திருந்தபோது சைடுபாட்டம் பந்தில் கீஸ்வெட்டரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன்பிறகு டேவிட் ஹஸ்சி வந்து ஆஸ்திரேலிய அணிக்கு தெம்பு ஊட்டும் வகையில் ரன்களை சேர்த்தார். ஆனாலும் 10 ஓவர்களில் 4 விக்கெட்டை இழந்து 47 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
ஹஸ்சியுடன் கேமரூன் ஒயிட் ஜோடி சேர்ந்ததும் ரன்களும் மளமளவென உயரத்தொடங்கியது. இரு வரும் பந் 1397776754 களை விர ட்டி அடித்தனர். ஒயிட் 30 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட் ஆனார். அவர் 19 பந்துகளில் ஒரு சிக்சர், 4 பவுண்டரிகள் விளாசி இருந்தார்.
இதைத்தொடர்ந்து டேவிட் ஹஸ்சியுடன் அவரது சகோதரர் மைக் கேல் ஹஸ்சி ஜோடி சேர்ந்தார். அணி நெருக்கடியான நிலையில் உள்ளதை அறிந்து இருவரும் அதிரடியாக ஆடினர். 20 வது ஓவரில் டேவிட் ஹஸ்சி 59 ரன் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆனார்.20 ஓவர் நிறைவில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்புக்கு 147 ரன்களே எடுத்தது.
சைடு பாட்டம் 2, ஸ்வான் 1, லூக் ரைட் 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அதைத்தொடர்ந்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இங்கிலாந்து பேட்டிங்கை தொடங்கியது. லம்ப், கீஸ்வெட்டர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். நேனஸ் ஆக்ரோஷ பந்து வீச்சை தொடங்கினார். 2வது ஓவரில் டேவிட் ஹஸ்சியிடம் கேட்ச் கொடுத்து லம்ப் (2) வெளியேறினார்.ஆனால் கீஸ்வெட்டர் நிலைத்து நின்று ரன்களை சேர்த்தார். அவர் 63 ரன்கள் எடுத்திருந்தபோது அவுட் ஆனா£ர். அப்போது அணியின் ஸ்கோர் 118.
பீட்டர்சன் 59 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அப்போது அணியின் ஸ்கோர் 121. வெற்றிக்கு இன்னும் 27 ரன்களே தேவை என்ற நிலையில் கூலிங்வுட், மார்கன் ஆகியோர் பொறுப்புடன் ஆடி ரன்களை எடுத்தனர். 17 ஓவரில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 148 ரன்களை எடுத்து வெற்றி வாகை சூடியது.
கிரிக்கெட்டின் தாயகம் என்று இங்கிலாந்து புகழப்பட்டாலும் அந்த நாடு இதுவரை ஒரு உலக கோப்பையை கூட வென்றது இல்லை. நேற்று மூன்றாவது டி20 உலக கோப்பையை வென்று அந்த குறையை போக்கிகொண்ட மகிழ்ச்சியில் கோப்பையுடன் இங்கிலாந்து வீரர்கள் மைதானத்தில் ஆனந்த கூத்தாடினார்கள்.
63 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றிதேடித்தந்த கீஸ்வெட்டர் ஆட்ட நாயகனாகவும், தொடரில் அதிக ரன்கள் குவித்த இங்கிலாந்து வீரர் பீட்டர்சன் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
முதல் டி20 உலக கோப்பையை இந்தியாவும், 2வதாக பாகிஸ்தானும், 3வதாக இங்கிலாந்தும் பெற்று உள்ளது.


மேஷ ராசி
ராசிநாதன் செவ்வாய் இதுநாள் வரை நீச்சமாக இருந்ததால் தடை, சங்கடம், இடையூறு என நிம்மதியற்ற நிலை இருந்தது. வைகாசி 10ம் தேதிக்கு மேல் செவ்வாய் பெயர்ச்சி ஆவதால் ஏற்றங்கள் உண்டு. செல்வாக்கு, சொல்வாக்கு உயரும். உடல்நலம் சீராகும். முகத்தில் தெளிவு உண்டாகும். யோகாதிபதி சூரியன் சாதகமாக இருப்பதால் வேலை சம்பந்தமாக ஆர்டர் கிடைக்கும். பள்ளி, கல்லூரியில் சேரும் முயற்சிகள் வெற்றி பெறும். பெண்கள் நிதானமாக இருந்தால் டென்ஷன், எரிச்சலை தவிர்க்கலாம். தந்தையுடன் ஏற்பட்ட மனக்கசப்பு நீங்கும். தடைபட்ட குலதெய்வ நேர்த்திக் கடன், பரிகார பூஜைகள் இனிதே நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். திசா புக்தி சாதகமாக இருப்பவர்கள் வீடு, நிலம், பிளாட், வாகனம் வாங்குவீர்கள். வங்கி, இன்சூரன்ஸ் சம்பந்தமாக சாதகமான பதில் வரும். உத்யோகத்தில் பதவி, சம்பளம் உயரும். தொழில், வியாபாரத்தில் புது உத்வேகத்துடன் செயல்படுவீர்கள்.
பரிகாரம்:
கந்த சஷ்டி கவசம் படிக்கலாம். முருகன் கோயிலில் விளக்கேற்ற எண்ணெய் வாங்கித் தரலாம். ஏழை மாணவர் படிப்புக்கு உதவலாம்.

ரிஷப ராசி
சாதக, பாதகங்கள், ஏற்ற இறக்கங்கள், லாப நஷ்டங்கள் கலந்து இருக்கும் மாதம். தன குடும்ப ஸ்தானத்தில் கேது, விரய ஸ்தானத்தில் புதன் இருப்பதால் எதிலும் முன்யோசனை, நிதானம் தேவை. அவசிய தேவைகளுக்காக வைகாசி 15ம் தேதிக்கு மேல் கடன் வாங்க நேரலாம். சகோதர உறவுகளிடையே இருந்த உரசல்கள், மனஸ்தாபங்கள் மாறும். சுபகாரிய விஷயமாக முக்கிய சந்திப்புகள் நடக்கும். இழுபறியில் இருந்த நில விவகாரங்கள் நல்லபடியாக முடியும். தாய் உடல்நலம் சீராகும். வேலை சம்பந்தமாக நல்ல தகவல் கிடைக்கும். இடமாற்றம் சம்பந்தமாக நல்ல முடிவு எடுப்பீர்கள். பள்ளி, கல்லூரிகளில் சேர்வதற்கான கடிதம் சாதகமாக வந்து சேரும். வெளிநாடுகளில் வேலையில் இருந்தவர்கள் சொந்த ஊர் திரும்புவர். உத்யோகத்தில் பொறுப்பு கூடும். இடமாற்றம் வரலாம். தொழில், வியாபாரம் லாபகரமாக போகும். எதிலும் அகலக்கால் வேண்டாம். எதிர்பார்த்திருக்கும் வங்கி உதவி கிடைக்கும்.

பரிகாரம்:
அம்பாள் கோயிலுக்கு மஞ்சள், குங்குமம் வாங்கித் தரலாம். ஞாயிற்றுக்கிழமை பைரவரை வழி படலாம். ஏழை நோயாளிகளுக்கு உதவிகள் செய்யலாம்.

மிதுன ராசி
வாக்கு ஸ்தானத்தில் இருந்து இடையூறு, அலைச்சல், குழப்பத்தை ஏற்படுத்திவந்த செவ்வாய் இந்த மாதம் சிம்ம ராசிக்கு செல்கிறார். எல்லாவற்றிலும் தெளிவு ஏற்படும். குடும்பத்தில் வீசிய அக்னிப்புயல் அடங்கும். மகன், மகளால் மகிழ்ச்சி, ஆதாயம் உண்டு. சகோதர உறவுகள் அனுசரணையாக இருப்பார்கள். புதுமண தம்பதிகள் குழந்தை பாக்யம் எதிர்பார்க்கலாம். கல்வி செலவு உண்டாகும். நிலம் விற்பது, வாங்குவதில் அவசரப்பட்டு முடிவு எடுப்பது நல்லதல்ல. பெண்களுக்கு பிறந்த வீட்டில் இருந்து ஆதரவு, ஆதாயம் உண்டு. குரு பார்வை பலம் காரணமாக மருத்துவ செலவுகள் குறையும். எதிர்ப்புகள் மறையும். பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு செல்வீர்கள். வேலை சம்பந்தமாக பெரிய நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரும். வெளியூரில் இருந்து சுப செய்தி எதிர்பார்க்கலாம். உத்யோகத்தில் சம்பள உயர்வு, லோன் விஷயங்கள் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் புதிய ஆர்டர்கள் குவியும்.
பரிகாரம்:
ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமை வெண்ணெய் சாற்றி வழிபடலாம். ஸ்ரீரமணாய என்று தினசரி 108 முறை சொல்லலாம். முதியோர் இல்லங்களுக்கு உதவலாம்.

கடக ராசி
பாக்ய ஸ்தானத்தில் குருபகவான் மாற்றம் அடைந்து சனீஸ்வரரை பார்ப்பதால் ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். புகழ்பெற்ற கோயில்களுக்கு செல்வீர்கள். வளைகாப்பு, மஞ்சள் நீராட்டு விழா போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் நடக்கும். மகன், மகள் வேலை விஷயமாக ஆர்டர் கை வந்து சேரும். செவ்வாயால் இருந்த டென்ஷன், முன்கோபம் படிப்படியாக குறையும். சகோதர உறவுகளுடன் இருந்த நெருக்கடிகள் தீரும். சகோதரர்களால் ஆதரவு, ஆதாயம் உண்டு. நிலம் வாங்குவது சம்பந்தமாக முக்கிய பேச்சுவார்த்தை தொடங்கும். பூர்வீக சொத்து விற்பதால் காசு, பணம் புரளும். பெண்களுக்கு வயிறு உபாதைகள் வந்து நீங்கும். சுக்கிரன் பலம் காரணமாக ஆடல், பாடல், சங்கீதம், விழா, விருந்து என்று வீடு களை கட்டும். உத்யோகத்தில் எதிர்பார்த்த அம்சங்கள் கூடி வரும். தொழில் லாபகரமாக நடக்கும். கடன்கள் வசூலாகும். புதிய கிளை தொடங்குவதற்கான முயற்சிகள் வெற்றியடையும்.
பரிகாரம்:
சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன், காஞ்சி காமாட்சியம்மனை தரிசிக்க எல்லாம் கூடி வரும். ஏழை கர்ப்பிணிகளின் பிரசவ செலவுக்கு உதவிகள் செய்யலாம்.

சிம்ம ராசி
லாப, நஷ்டங்கள், சாதக, பாதகங்கள் என்ற கிரக அமைப்புடன் மாதம் தொடங்குவதால் எதிலும் சிந்தித்து முடிவு எடுப்பது நல்லது. வாக்கு ஸ்தானத்தில் சனியின் தாக்கம் குரு பார்வையால் சற்று குறையும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். ராசிநாதன் கேந்திர பலம் பெறுவதால் தடைபட்ட அரசு காரியங்கள் சுமுகமாக நடக்கும். வீண் பிரச்னை ஏற்படலாம் என்பதால் தந்தையுடன் வாக்குவாதம் வேண்டாம். எதிலும் உணர்ச்சிபூர்வமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். தம்பதி இடையே அன்யோன்யம் அதிகமாகும். தொழில் தொடர்பான வெளியூர் பயணம் வெற்றிகரமாக முடியும். மகன், மகளால் மகிழ்ச்சி, ஆதாயம் உண்டு. கல்வி ஸ்தானத்தை குரு பார்ப்பதால் உயர்கல்வி சம்பந்தமாக நல்ல தகவல் வரும். அதிக சிரமமின்றி கல்லூரியில் சீட் கிடைக்கும். சொந்த ஊரில் நடக்கும் திருவிழா, விசேஷத்தில் கலந்துகொள்வீர்கள். அலுவலகத்தில் நல்ல மாற்றங்கள் வரும். வியாபாரத்தில் தொட்டது துலங்கும்.

பரிகாரம்:
நவக்கிரக வழிபாடு நலம் தரும். சனிக்கிழமை சரபேஸ்வரரை வணங்கலாம். வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு உதவலாம்.

கன்னி ராசி
கிரக சஞ்சார அம்சங்கள் காரணமாக சில தடுமாற்றம், நெருக்கடிகள் வரலாம். எதையும் சிந்தித்து முடிவு எடுக்கவும். குரு பார்வை காரணமாக சில மாற்றங்கள் சாதகமாக இருக்கும். நிலம் விற்பதில் முக்கிய முடிவு எடுப்பீர்கள். வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகள் சொந்த ஊர் திரும்பும் வாய்ப்பு உள்ளது. கல்லூரியில் பிள்ளைகளை சேர்ப்பது தொடர்பாக அலைச்சல், செலவு இருக்கும். பழைய வண்டியை மாற்றி புது வாகனம் வாங்குவீர்கள். செவ்வாய் அம்சம் காரணமாக அலைச்சல், சோர்வு உண்டாகும். உடல்நலத்தில் கவனம் தேவை. இன்டர்வியூ முடித்தவர்களுக்கு வேலை சம்பந்தமாக தகவல் வரும். தடைபட்ட நேர்த்திக் கடன்கள் பவுர்ணமிக்கு பிறகு முடியும். மகள் பிரசவ சம்பந்தமாக செலவு ஏற்படும். உயர் பதவியில் இருக்கும் நண்பர் பணப் பிரச்னையை தீர்த்து வைப்பார். உத்யோகத்தில் சில நெருக்கடிகள் வந்து நீங்கும். வியாபாரம் சுறுசுறுப்படையும். பழைய கடன், பாக்கிகள் வசூலாகும்.
பரிகாரம்:
சக்கரத்தாழ்வாரை வழிபடலாம். பவுர்ணமியில் விரதம் இருப்பது தடை, தடங்கல்களை நீக்கும். ஏழை பெண்களுக்கு உதவிகள் செய்யலாம்.

துலாம் ராசி
ராசிநாதன் சுக்கிரன் பலமாக இருப்பதால் விருந்து, விழா களைகட்டும். மனம் குதூகலமாகும். பெண்களால் ஆதாயம் உண்டு. லாப ஸ்தான சூரியன் தன ஸ்தானத்தை பார்ப்பதால் எதிர்பார்த்த இடத்தில் இருந்து காசு, பணம் வந்து சேரும். மனைவியால் பண சிக்கல்கள் தீரும். பெண்கள் அநாவசிய விஷயங்களை நினைத்து மனதை குழப்பிக்கொள்ள வேண்டாம். சகோதரர்கள் உங்களை புரிந்துகொண்டு ஒத்துழைப்பார்கள். நில விஷயங்களை சற்று தள்ளிப் போடலாம். வயிறு, உஷ்ண உபாதைகள் வந்து சரியாகும். பகீரத முயற்சிக்கு பிறகு, பிள்ளைகளுக்கு விரும்பிய பள்ளி, கல்லூரியில் இடம் கிடைக்கும். எதிர்ப்புக்கள் குறையும். புதன் பார்வையால் இழுபறியில் இருந்த விஷயங்களை சாதுர்யமாகி பேசி முடிவெடுப்பீர்கள். பாக்ய ஸ்தான கேதுவால் ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். தர்ம புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். உத்யோகத்தில் சலுகைகள் எதிர்பார்க்கலாம். வியாபாரம் லாபகரமாக இருக்கும்.
பரிகாரம்:
தினசரி அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் படிக்கலாம். வியாழன்தோறும் விஷ்ணு துர்க்கையை வழிபடலாம். பக்தர்களுக்கு ஆன்மீக, ஸ்லோக புத்தகங்கள் வாங்கித் தரலாம்.

விருச்சிக ராசி
ராசிநாதன் நீச்ச அம்சத்தில் இருந்து விலகுவதால், மனதில் இருந்த பாரம் குறையும். சிந்தனையில் தெளிவு ஏற்படும். ராகு, கேதுக்களால் சில தடைகள், இடையூறுகள் வரலாம். இருந்தாலும் குரு பார்வை பலத்தால் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். சகோதரர்களிடையே இருக்கும் பனிப்போர் முடியும். தாய் உதவியால் முக்கிய விஷயம் சாதகமாக முடியும். நிலம் வாங்கும் முயற்சி வெற்றி பெறும். புகழ்பெற்ற கல்லூரியில் இருந்து அட்மிஷனுக்கான கடிதம் வரும். சுபகாரியம் தொடர்பாக வெளியூர் உறவினரிடம் இருந்து முக்கிய செய்தி வரும், அது சம்பந்தமாக வெளியூர் பயணமும் இருக்கும். குரு, சனி பார்வையால் பணப் புழக்கம் அதிகரிக்கும். அவசிய, ஆடம்பரப் பொருள் சேரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படலாம். ஜீவன ஸ்தானம் பலமாக இருப்பதால் உத்யோகத்தில் பதவி, சம்பள உயர்வு எதிர்பார்க்கலாம். வெளியூர் மாற்றங்களுக்கும் வாய்ப்பு உண்டு. தொழில், வியாபாரம் ஜாம் ஜாம் என்று நடக்கும்.

பரிகாரம்: ‘ராம ராம’ என்று தினமும் 108 முறை சொல்லலாம். வியாழக்கிழமை அம்மன் கோயிலுக்கு சென்று வழிபடலாம். பார்வையற்றோருக்கு உதவலாம்.

தனுசு ராசி
ராசிநாதன் குரு சதுர்த்த கேந்திரத்தில் ஆட்சி பலம் பெற்று சனி பகவானை பார்ப்பதால் உடலிலும் மனதிலும் புது உத்வேகம் பிறக்கும். குடும்ப, தன ஸ்தானாதிபதி சனியை குரு பார்ப்பதால், தடைபட்ட சுபகாரியங்கள் ஜாம் ஜாம் என்று தொடங்கும். வரவேண்டிய பணம் தடையின்றி வரும். சகோதர உறவுகளால் செலவு, அலைச்சல் இருக்கும். பெண்களுக்கு தலைவலி, நரம்பு சம்பந்தமான உபாதைகள் வந்து நீங்கும். நில விஷயத்தில் இருந்த முட்டுக்கட்டை விலகும். கல்வி சம்பந்தமாக அலைச்சல், செலவு இருக்கும். மாமியார், நாத்தனார் உறவுகள் அனுசரணையாக இருப்பார்கள். சூரியன் மறைவு ஸ்தானத்தில் இருப்பதால் அரசு வேலைகள் சற்று தாமதமாகும். வழக்கு சம்பந்தமாக மாதக் கடைசியில் அனுகூலமான செய்தி வரும். உத்யோகத்தில் வேலை சுமை, பொறுப்பு அதிகமாகும். வியாபாரம் சம்பந்தமாக அலைச்சல், திரிச்சல் இருக்கும். இரும்பு, எண்ணெய் தொழில்கள் ஏற்றமாக நடக்கும்.
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை பசு மாட்டுக்கு கோதுமை சாதம் தரலாம். பிரதோஷ காலத்தில் நந்தியை 27 முறை வலம் வந்து அருகம்புல் சாற்றி வழிபடலாம். கஷ்டப்படும் முதியோருக்கு உதவலாம்.

மகர ராசி ராசிதான் சனியை குரு பார்ப்பதால் எல்லா செயல்களையும் வேகமாக, விவேகமாக செய்து முடிப்பீர்கள். இனம் புரியாத கவலைகள், பயம் நீங்கும். பணம், கொடுக்கல், வாங்கல் சாதகமாக இருக்கும். ராசியை பார்த்த செவ்வாய் தற்போது 2ம் இடத்தை பார்ப்பதால் வாக்குவாதம், வாக்குறுதி தவிர்க்கவும். திடீர்திடீரென டென்ஷன், கோபம் தலை தூக்கும். பேச்சு, செயலில் பொறுமை, நிதானம் அவசியம். தந்தையால் ஆதாயம் உண்டு. நில விஷயமாக சிறிது அலைச்சல் இருக்கும். வயிறு, உஷ்ண உபாதைகள் வந்து விலகும். பிள்ளைகள் வேலை விஷயமாக நல்ல தகவல் வரும். உறவுப் பெண்களால் சில தொந்தரவுகள் வந்து விலகும். குடும்பத்துடன் ஆன்மீக சுற்றுலா செல்வீர்கள். பரிகார பூஜைகள் நல்லபடியாக நிறைவேறும். சுக்கிரன், கேதுவுடன் இருப்பதால் உத்யோகத்தில் சில தடுமாற்றங்கள் வரலாம். தொழில், வியாபாரம் சீராக போகும். புதன் அம்சத்தால் திடீர் யோகம் உண்டு.
பரிகாரம்:
வறுமையில் வாடும் மாற்றுத் திறனாளிகளுக்கு சனிக்கிழமை தோறும் உணவு வழங்கலாம். மற்ற உதவிகள் செய்யலாம். விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்யலாம்.

கும்ப ராசி அஷ்டம சனியுடன் 7ம் இடத்தில் இருக்கும் செவ்வாயால் தடுமாற்றம், இடையூறு, டென்ஷன் இருக்கும். ஆனாலும் சனியை குரு பார்ப்பதால் தடைகள் படிப்படியாக விலகும். மகிழ்ச்சி அதிகமாகும். 2ம் இடத்தில் குரு ஆட்சி பலம் பெறுவதால் செல்வாக்கு, சொல்வாக்கு உயரும். பிரிந்து சென்ற சொந்தங்கள் உங்களை புரிந்து கொண்டு வருவார்கள். சகோதர உறவுகளுடன் இருந்த பனிப்போர் நீங்கும். சகோதரர்களால் கணிசமான ஆதாயங்கள் உண்டு. குழந்தை பாக்யம் எதிர்பார்த்தவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும். இழுபறியில் இருந்த அரசு விஷயங்கள் சாதகமாக நடக்கும். வழக்கு விவகாரத்தில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். பிள்ளைகளை கல்லூரியில் சேர்ப்பதற்கு அதிக முயற்சி தேவைப்படும். குடும்பத்தில் சுபகாரியத்துக்கான அறிகுறி தெரியும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு கைகூடும். உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். சலுகைகள் கிடைக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
பரிகாரம்:
துர்க்கை அம்மனை செவ்வாய்க்கிழமை வணங்கலாம். ‘ஸ்ரீமதே ராமானுஜாய’ என்று தினமும் 108 முறை சொல்லலாம். ஏழை மாணவர்களின் கல்விச் செலவுக்கு உதவலாம்.

மீன ராசி
ராசிநாதன் குரு விரய ஸ்தானத்தில் இருந்து ஜென்ம ராசியில் வந்து அமர்ந்து இருக்கிறார். ஜென்ம குரு தடைகள், இடையூறு செய்வார் என்பது சாஸ்திர அமைப்பு. இருந்தாலும் உங்கள் ராசிக்கு அதிபதியாக இருந்து பார்வை பலம் காரணமாக உங்களுக்கு பல யோகங்களை தர இருக்கிறார். சனியின் பார்வை காரணமாக இருந்த அசதி, சோம்பல், சிடுசிடுப்பு மறையும். மாமன் வகை உறவுகளால் நன்மைகள் குவியும். தடைபட்ட கட்டிட வேலை மளமளவென தொடங்கும். தாய் உடல்நலம் சீராகும். பிள்ளைகள் திருமண விஷயமாக நல்ல தகவல் வரும். பெரிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்வதற்கான முயற்சிகள் வெற்றியடையும். உறவுப் பெண்களால் சில சங்கடங்கள் வந்து விலகும். இல்லத்துணையுடன் வாக்குவாதம் வேண்டாம். உத்யோகத்தில் நேர்முக, மறைமுக எதிர்ப்புக்கள் மறையும். செல்வாக்கு கூடும். தொழில், வியாபாரத்தில் திடீர் அதிர்ஷ்டங்கள் வரும். பணப்புழக்கம் அமோகமாக இருக்கும்.
பரிகாரம்: வியாழன்தோறும் ஷீர்டி சாய்பாபாவை தரிசிக்கலாம். செவ்வாய்க்கிழமை முருகன் கோயிலில் வழிபாடு நடத்தி, கொண்டைக் கடலை சுண்டல் விநியோகம் செய்யலாம். மரக்கன்று நட்டு பராமரிக்கலாம்.


 எந்த கிரகம் கொடுத்தாலும் சுக்கிரன்தான் கொடுக்கிறார் என்று வழக்கு மொழி உண்டு. ‘அவனுக்கென்னப்பா.. சுக்கிரதிசை’ என்பார்கள். அந்த அளவுக்கு சுக, போகங்களை வாரி வழங்கக்கூடிய கிரகம் சுக்கிரன். பணம், புகழ், ஆள் பலம், சுகபோகங்கள், கலை, ஆடல், பாடல், சங்கீதம், சின்னத்திரை, பெரியதிரை என மேடையேறும் வாய்ப்பு, செல்வாக்கு, ஆடம்பர பங்களா, சொகுசு கார் என்று எண்ணிலடங்கா ஏற்றங்களை வாரி வழங்கக்கூடியவர் சுக்கிர பகவான். சுக்கிரனை காதல் கிரகம் என்றழைப்பார்கள். திருமண பந்தத்தில் சுக்கிரனின் பங்கு மிக முக்கியமானது. சாதாரணமாக இருந்தவர்கள்கூட திருமணத்துக்கு பிறகு சுக்கிரனின் அமைப்பால் மிகப் பெரிய செல்வச் சீமான்களாக மாறியிருக்கிறார்கள். அந்த அளவுக்கு யோகத்தை தரக்கூடிய கிரகம். கிரகங்களிலேயே அதிகபட்சமாக 20 ஆண்டுகளை தன் ஆளும் திசையாக பெற்றிருக்கும் கிரகமும் சுக்கிரனே.
சுக்கிரனின் அம்சங்கள் (ஆதிக்கம்)
கிழமை: வெள்ளி
தேதிகள்: 6, 15, 24
நட்சத்திரம்: பரணி, பூரம், பூராடம்
ராசி: ரிஷபம், துலாம்
நிறம்: தூய வெண்மை
ரத்தினம்: வைரம்
தானியம்: மொச்சை
ஆடை: பளபளக்கும் வெண்மை
சுக்கிரனுக்கு உண்டான கிழமை, தேதிகள், நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சுக்கிரன் பல யோகங்களை தரும். ஜாதக கட்டத்தில் யோகமான இடத்தில் அவர் இருப்பதும் சிறப்பாகும்.
எந்த லக்னம்/ராசியில் பிறந்தவர்களுக்கு எந்த வகையான யோகங்கள், பலன்களை சுக்கிரன் தருவார்?
மேஷ லக்னம்/ராசி  சொல்லாற்றல், கதை, கவிதை எழுத்துத்துறைகளால் யோகம்.
ரிஷப லக்னம்/ராசி  ஆடல், பாடல், சங்கீதம் போன்றவற்றால் புகழ்.
மிதுன லக்னம்/ராசி  திடீர் அதிர்ஷ்டங்கள். பிள்ளைகளால் யோகம், அரசியல், அதிகார பதவி யோகம்.
கடக லக்னம்/ராசி  வீடு, நிலபுலன்கள், வண்டி, வாகனம், கல்விச் செல்வத்தால் யோகம்.
கன்னி லக்னம்/ராசி  எல்லா வகையான செல்வங்களாலும் யோகம். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம்.
துலா லக்னம்/ராசி  இசை, பேச்சு, சின்னத்திரை, பெரிய திரை போன்றவை மூலம் ராஜயோக பலன்கள்.
மகர லக்னம்/ராசி பிள்ளைகளால் யோகம், தொழில் தொடங்கும் யோகம், பட்டம், பதவிகள் என சுகபோக வாழ்க்கை.
கும்ப லக்னம்/ராசி  கல்விச் செல்வத்தால், வண்டி நிலபுலன்களால் யோகம்.
எந்த லக்னம், ராசியில் பிறந்தாலும், சுக்கிரன் நீச்சம் பெறாமலும் 6, 8, 12 ஆகிய இடங்களில் மறையாமலும் 6, 8, 12 ஆகிய அதிபதிகளுடன் சேராமல் இருப்பது அவசியம்.
வழிபாடு, பரிகாரம்
கும்பகோணம் அருகே உள்ள கஞ்சனூர் சுக்கிரன் பரிகார ஸ்தலமாகும். ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதர் சுக்கிரனாகவே அருள்புரிகிறார். நவ திருப்பதிகளில் தென் திருப்பேரை சுக்கிர ஸ்தலாகும்.
ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே
தனுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர பிரசோதயாத்’
அல்லது
‘ஓம் ராஜாதபாய வித்மஹே
ப்ருகு சுதாய தீமஹி
தந்நோ சுக்ர பிரசோதயாத்’ என்ற சுக்கிர காயத்ரி மந்திரத்தை 108 முறை சொல்லலாம். ‘ஓம் சும் ரீஉம் சுக்ர தேவாய நம’ என்று 108 முறை சொல்லலாம்.
வெள்ளிக்கிழமை விரதம் இருக்கலாம். அம்பாள், ஆண்டாள் ஸ்தலங்களில் பக்தர்கள், ஏழைகளுக்கு மொச்சை சுண்டல் வழங்கலாம்.


வரலாற்றில் மிக அதிகமான மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்ட இடம் என இங்கிலாந்தின் லண்டன் டவர் கருதப்படுகிறது. இதன் வரலாறு ரோம பேரரசர் கிளாடியஸ் காலத்தில் தொடங்குகிறது. தனது ராஜ்ஜியத்துக்காக இந்த இடத்தை தேர்வு செய்த கிளாடியஸ், அங்கு புதிதாக பிரமாண்ட கோட்டையை கட்டினார். ஆயிரம் ஆண்டுகள் கழித்து வில்லியம் அரசர் அதே இடத்தில் புகழ் பெற்ற லண்டன் டவரை கட்டினார். ஐரோப்பாவில் உள்ள கட்டிடங்களில் மிகவும் பழமையானது என கருதப்படுகிறது இந்தக் கோட்டை.

இங்கு கோபுரம், அரண்மனை, கோட்டை மற்றும் சிறைச்சாலைகள் உள்ளன. இங்குள்ள சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள் பல சித்ரவதைகளை அனுபவித்துள்ளனர். மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் சிரச்சேதம் (தலை துண்டிக்கப்பட்டு கொல்லுதல்) செய்யப்பட்டனர். சுமார் 400 ஆண்டுகளில் பிரபுக்கள், அரச குடும்பத்தார் உள்பட ஏராளமானோருக்கு இங்குதான் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
கொலைக்களமான இந்தக் கோட்டையை பார்வையிட செல்பவர்கள், இப்போதும் மரண பீதியிலேயே செல்கின்றனர். நான் ரொம்ப தைரியமானவன் என்று மார்தட்டிக் கொள்பவர்கள்கூட, இருட்டத் தொடங்கிவிட்டால் இந்தப் பக்கம் எட்டிப் பார்க்க தயங்குகிறார்கள். காரணம், கொடூரமான முறையில் சிரச்சேதம் செய்யப்பட்ட பலர் இப்போதும் கோட்டையில் ஆவியாக சுற்றுவதாக கூறப்படுகிறது.
இங்கு முதன்முதலில் ஆவியாக தென்பட்டவர் தாமஸ் என்ற கைதி. கோட்டையை சீரமைக்கும் பணி நடந்தபோது தொழிலாளர்கள் ஒரு குறுக்குச் சுவர் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆவேசமாக அங்கு வந்த தாமஸின் ஆவி, தொழிலாளர்களை மிரட்டி கட்டுமான பணிகளை தடுத்ததாம். ஆவி புகுந்ததால் சுவரில் விரிசல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல, இந்தக் கோட்டையில் கொல்லப்பட்ட ராணி ஆனி போலன் என்பவரின் ஆவியையும் அடிக்கடி பார்க்க முடிவதாக சிலர் சொல்கின்றனர். கையில் ஆண் குழந்தையுடன் சோகமே உருவாக வலம் வரும் ராணி ஆனியின் ஆவியை பார்த்ததாக சுற்றுலா பயணிகள் பலர் கூறினர்.
ஆனியின் மகனான அந்தக் குழந்தை அரசு குடும்பத்து வாரிசு என கூறப்படுகிறது. குழந்தை இறந்ததை அடுத்து ஆனி மீது ராஜதுரோகம் மற்றும் நடத்தை கெட்டவள் என குற்றம் சுமத்தி மரண தண்டனை விதிக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. சிரச்சேதம் செய்யப்பட்ட அவளது உடல் அங்கேயே புதைக்கப்பட்டது. கொல்லப்பட்டபோது அணிந்திருந்த அதே ஆடையுடன் ஆனியின் ஆவி லண்டன் டவரின் உயரமான பகுதிகளில் இப்போதும் சுற்றித் திரிவதாக நம்பப்படுகிறது.
70 வயதான செல்ஸ்பெரி என்ற பெண்ணுக்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைதான் இங்கு நடந்த கொடூரமான செயல் என்கின்றனர் சிலர். அரசியல் காரணங்களுக்காக செல்ஸ்பெரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை நிறைவேற்ற முயலும்போது அவள் தனது தலையை பலி பீடத்தில் வைக்க மறுத்து தப்பி ஓடியதாகவும், விடாமல் துரத்திச் சென்று அவரை சரமாரியாக வெட்டித் தள்ளியதாகவும் கூறப்படுகிறது. சாகும் வரை அவரை செதில்செதிலாக வெட்டினார்களாம். துடிக்கத் துடிக்க கொல்லப்பட்ட செல்ஸ்பெரி, இப்போது இங்கு ஆவியாக அலைகிறார் என மக்கள் நம்புகின்றனர்.
இங்கு திரியும் ஆவிகள் மிகவும் அச்சமூட்டுவதாகவும் பயங்கரமானவை என்றும் லண்டன்வாசிகள் கூறுகின்றனர். விதவிதமான ஆடை அலங்காரத்துடனும், தேவதைகள் போலவும் ஆவிகள் உலவுகின்றனவாம். சில ஆவிகள் உடலில் வெட்டுக்காயங்களுடன் ரத்தம் சொட்டும் நிலையில் சோகமே உருவாய் அவை அலைவதாக கூறப்படுகிறது. இந்தப் பகுதிக்குள் நாய்கள் நுழைவதேயில்லை. கோட்டை காவலாளிகள்கூட இருட்டத் தொடங்கியதும் அங்கிருந்து எஸ்கேப் ஆகிவிடுகின்றனர்.
அசட்டு தைரியத்துடன் சென்ற சில இளைஞர்கள்கூட, சில நிமிடங்களில் பேயறைந்தவர்களைப் போல திரும்பிவிட்டனர். தங்களை ஏதோ ஒரு சக்தி இழுப்பதுபோல் உணர்ந்ததாகவும், அதனால் அலறி அடித்து திரும்பி வந்து விட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆவிகள் அலையும் கோட்டையை பற்றி பல திகில் கதைகள் கூறப்பட்டாலும் சுற்றுலாப் பயணிகள் விரும்பி வரும் இடமாகவே இது உள்ளது.


உலகின் அழகான பெண்கள் வரிசையில் ஆஸ்கார் விருது பெற்ற பெனிலோப் குரூஸ் முதலிடம் பிடித்துள்ளதாக பேஷன் நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

பேஷன் துறை நிபுணரான சாலி ஆலன், கடந்த ஓராண்டாக பத்திரிகைகளில் வந்த புகைப்படங்களைத் திரட்டி, அழகான பெண்கள் பட்டியலைத் தொகுத்துள்ளார். அதில் உலகிலேயே அழகான பெண்ணாக ஹாலிவுட் நடிகை பெனிலோப் குரூஸ் முதலிடம் பெற்றுள்ளார். இதுபற்றி சாலி ஆலன் கூறியதாக கான்டேக்ட் மியூசிக் இணைய தளம் வெளியிட்ட விவரம்:
ஊடகங்களால் அதிகம் கவனிக்கப்பட்ட அழகான பெண்களின் வரிசையை கடந்த ஒரு வருடமாக ஆராய்ந்து வந்தோம். அதில் உலகின் டாப் 10 இடத்தில் அண்மையில் ஆஸ்கார் விருது பெற்ற ஹாலிவுட் நடிகை பெனிலோப் குரூஸ்க்கு முதலிடம் கிடைந்தது. பத்திரிகைகளில் எதிர்பாராத, ஏதாவது ஒருவிதத்தில் சிறந்த, வித்தியாசமான கோணங்களில் படங்கள் வெளியானவர்கள் முதல் 10 இடங்களை பிடித்தனர்.
மேக்கப் இல்லாமலே மிகவும் அழகான தோற்றம், இயற்கை அழகு கொண்டவர் பெனிலோப். எப்போதும் ஒளி வீசும் முகம் கொண்டவர். ஆஸ்கார் விருது பெறுவதற்கு தகுதியானவர். 16வது வயதில் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய இவருக்கு, 20 ஆண்டுகளுக்கு பின்புதான் அழகான பெண் மற்றும் சிறந்த நடிகை என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது.
ஆங்கிலத்தில் அழகுக்கு ‘பிரெட்டி’, ‘ப்யூட்டிபுல்’ என்ற 2 வார்த்தைகள் உள்ளன. அதில் ‘பிரெட்டி’ என்பது தற்காலிக அழகு, ‘ப்யூட்டிபுல்’ என்பது நிரந்தர அழகு என்பது என்று ஒரு மேதை தெரிவித்துள்ளார். பெனிலோப் குரூஸ் 2வது வார்த்தைக்குச் சொந்தமானவர் என்று ஆலன் கூறியுள்ளார்.


வீட்டு வேலை பார்க்கும் பெண்கள் எந்தளவுக்கு பிரச்னைகள் சந்திக்கிறார்களோ, அந்தளவுக்கு இல்லாவிட்டாலும், வீட்டு உரிமையாளர்களுக்கும் பிரச்னைகள் உண்டு. “வீட்டையும், குடும்பத்தையும் நம்பி ஒப்படைக்கிறோம்; அந்த நம்பிக்கைக்கு உரியவர்களாக அவர்கள் நடக்காமல் போகும்போது தான் பிரச்னையே வருகிறது” என்கின்றனர் பிளாட் ஓனர்ஸ்.

“நகை, பணத்துக்காக நடக்கும் ஆதாயக் கொலைகளுக்கு அதிகம் காரணமாக இருப்பவர்கள் வேலைக்கார பெண்கள். இவர்கள் கொடுக்கும் துப்பும், தகவலும் தான் குற்றங்களுக்கு துணை போகிறது. நிறைய வழக்குகளில் இது நிரூபணமாகி இருக்கிறது” என்பது போலீசாரின் குற்றச்சாட்டு.
குழந்தையை கடத்தி பணம் கேட்டு மிரட்டல், வெளியூர் சென்ற தொழிலதிபர் வீட்டில் கொள்ளை, நகை வியாபாரியிடம் வழிப்பறி போன்ற செய்திகளுக்கு எல்லாம் மூலக்காரணமாக இருப்பவர்களில் முக்கியமானவர் கள் வீட்டு வேலை செய்பவர்கள். அதனால் தான் வேலைக்காரர்கள் பற்றிய தகவல்களை காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும் என்று போலீசார் தொடர்ந்து கூறி வருகின்றனர். எவரும் அதை காதில் வாங்கியதாக தெரியவில்லை. “ஆள் கிடைப்பதே அரிது. அப்படியிருக்கும்போது அவர்களை பற்றி விசாரிக்க எங்களுக்கு ஏது நேரம்? தெரிந்தவர்கள் மூலமாகதான் வேலைக்கு வருகிறார்கள் என்பதால் நம்பிக்கையோடு வீட்டில் சேர்க்கிறோம். பிரச்னை என்று வருகிறபோது போலீசுக்கு கூட சொல்லாமல் வெளியேற்றி விடுகிறோம். அவர்களால் பக்கத்து வீடுகளுக்கு வரும் பிரச்னைகளை கூட நாங்கள் சந்திக்க வேண்டியிருக்கிறது” என்கிறார் பிளாட் ஓனர்ஸ் அசோசியேஷன் நிர்வாகி வேல்ராஜ்.
இந்த பிரச்னையை எப்படி தீர்ப்பது? வீட்டுக்காரர்களால் வேலை பார்க்கும் பெண்களுக்கும் பிரச்னை. வேலைக்காரர்களால் வீட்டுக்காரர்களுக்கும் பிரச்னை. இரு தரப்புக்கும் பாதிப்பு வராமல் வீட்டு வேலைத் தொழிலை முறைப்படுத்துவது எப்படி?
சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் வீட்டு வேலை பார்க்கும் பெண்கள் பற்றிய முழு விவரங்களும் போலீசுக்கு தெரியும். போலீஸ் அனுமதியுடன் தான் வேலைக்கு அமர்த்தப்படுகிறார்கள். அந்த பெண்கள் யார்? எங்கிருந்து வருகிறார்கள்? பின்னணி என்ன? எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும் முறை அங்கிருக்கிறது. இங்கு இல்லை. இதுதான் பிரச்னை.
“வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு உரிமைகள் தரவும், உரிய பாதுகாப்பு கிடைக்கவும் நலவாரியம், குறைந்தபட்ச கூலி நிர்ணயம் என நிறைய விஷயங்கள் வந்து விட்டன. ஆனால், அவர்களுக்கு என மத்திய சட்டம் எதுவும் இல்லை. இந்த அம்சங்களை எல்லாம் உள்ளடக்கிய சட்டம் வந்தால் தான் வேலைக்கு ஆட்களை அமர்த்தும் வீடுகளில் பிரச்னைகள் தீரும்” என்கிறார் அமைப்புசாரா தொழிலாளர் கூட்டமைப்பு தலைவர் கீதா.
வீட்டில் வேலை செய்ய ஒருவரை சேர்த்துக் கொள்வதற்கு முன்பு அவர் முகவரி என்ன? அங்கு நிலையாக தங்கியிருப்பவரா? அவருக்கு தெரிந்தவர்கள் யார்? இதற்கு முன்பு யார் வீட்டில் வேலை செய்தார்? அங்கிருந்து விலக காரணம் என்ன? என்பது போன்ற விவரங்களை தெரிந்துக் கொள்வது நல்லது. இல்லாவிட்டால் வீட்டு வேலை செய்பவரின் போட்டோ, முகவரி ஆகியவற்றை அருகில் உள்ள காவல்நிலையத்தில் கொடுத்தால், பிரச்னை வரும்போது உதவும். ஏஜன்சி மூலமாக ஆட்களை தேர்வு செய்தாலும் போட்டோ, முகவரி உள்ளிட்ட விவரங்களை கேட்டுப் பெற வேண்டும். அவசரத்திற்கு ஆள் கிடைத்தால் போதும் என்று சேர்ப்பது நல்லதல்ல. அதேநேரத்தில் குற்றவாளிகள் தானாக பிறப்பதில்லை. சூழ்நிலைகள் அவர்களை குற்றவாளிகளாக மாற்றுகின்றன. எனவே எத்தனை நம்பிக்கையான, நல்ல வேலைக்காரர்களாக இருந்தாலும் விலையுயர்ந்த பொருட்களை அவர்கள் கண் பார்வையில் அலட்சியமாக போட்டு வைப்பது ஆபத்து.
வீட்டு வேலை செய்பவர்கள் மூலம் வீட்டு விவகாரங்கள் வெளியில் போகும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தவறானவர்களுக்கு அது தகவலாகி விடும். எனவே வீட்டு விஷயங்களை வீட்டு வேலை செய்பவர்கள் முன்பு பேசாமல் இருப்பது நல்லது. சின்னச்சின்ன சண்டை உள்ளிட்ட கருத்து மோதல்களை கூட அவர்கள் போகும் வரை காத்திருந்து தொடர்வதுதான் சரி.
வேலைக்காரர்கள் தானே என்று கண்டபடி ஏசுவது, மரியாதை இல்லாமல் அழைப்பது போன்றவை அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தும். நேரிடையாக மோத முடியாது என்பதால் ஏதாவது மறைமுக நடவடிக்கையில் ஈடுபடலாம். அது பெரிய இழப்பாக முடியலாம். சக மனிதர் என்று அன்பாக நடத்துவது முக்கியம். முதலில் நிறைய உரிமை கொடுத்துவிட்டு, பிறகு அதை தடுப்பதும் பிரச்னை ஏற்படுத்தலாம். அதிகம் இடம் கொடுக்கவும் கூடாது, அலட்சியப்படுத்தவும் கூடாது. அளவோடு இருந்தால் பிரச்னை இல்லை என்கிறது போலீஸ்.
வீட்டு வேலைகளுக்கு ஆட்களை அனுப்பும் வேலையை பல தனியார் நிறுவனங்கள் செய்கின்றன. சென்னையில் மட்டும் 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களை அணுகினால் நாம் சொல்லும் வேலைக்கு ஏற்ப ஆட்களை அனுப்புவார்கள். அதற்கான ஊதியத்தை நிறுவனத்திடம் தான் செலுத்த வேண்டும். வீட்டு வேலை செய்பவருக்கு நிறுவனமே சம்பளம் தரும். ஆனால், வீட்டுக்காரர்களிடம் வாங்கியதில் பாதிக்கூட இருக்காது. இடைத்தரகர்கள் போல் செயல்படும் இந்த ஏஜன்சிகள் பாதி சம்பளத்தை தங்கள் பாக்கெட்டில் போட்டுக் கொள்கின்றனர். இதனை யாரும் எதிர்த்துக் கேட்க முடியாது. தட்டி கேட்பவர்களை தட்டி வைக்க ரவுடிகளையும் கூடவே வைத்திருக்கின்றனர். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஒரு நிறுவனம் அப்படி ஏமாற்றிய பணம் ஒரு கோடியை தாண்டுமாம்.
இன்னும் சில ஏஜென்சிகள், வெளியூரில் இருந்து சிறுவர், சிறுமிகளை, பெண்களை கடத்தி வந்து வீட்டு வேலைக்கு அனுப்புகின்றனர். அவர்கள் மிரட்டும் மிட்டலில் வீட்டு வேலை செய்பவர்கள் வாயைத் திறக்க முடியாது. இப்படி கடத்தப்படுபவர்கள் பெரும்பாலும் வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ராமநாதபுரம் போன்ற வறட்சி மாவட்டங்களை சேர்ந்தவர்கள். இவை தவிர ஆந்திராவை சேர்ந்த சிறுவர், சிறுமிகளும் இந்தப் பட்டியலில் உள்ளனர். இதன் பின்னணியில் பெரிய கும்பலே செயல்படுகிறது. பிச்சை எடுக்க கடத்தப்படும் குழந்தைகள் அனுபவிக்கும் கொடுமைகளில் கொஞ்சம் கூட குறைவில்லாமல் இவர்களும் அனுபவிக்கிறார்கள். ‘பிளேஸ்மென்ட் ஏஜென்சி’ என்ற பெயரில் திருவான்மியூர், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை என சென்னையில் பல இடங்களிலும், முக்கிய நகரங்களிலும் ஏராளம் உள்ளன. ஆள், அரசியல் செல்வாக்கு உள்ள தனிநபர்கள் சிலரும் இந்த அநியாய வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
வீட்டுக்காரர்கள் விரும்பிக் கேட்கும் எல்லா வயதுள்ள வேலைக்காரர்களும் இவர்களிடம் உண்டு. அனுப்புபவர்களை வீட்டுக்காரர்களிடம் நெருங்கி பழகச் சொல்லி கட்டாயப்படுத்துவார்கள். சபல கேஸ்கள் சிக்கிக் கொண்டால் கதை கந்தல்தான்.
         வீட்டுவேலை செய்யும் பெண்களுக்கு என குறைந்தபட்ச கூலி நிர்ணயிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு பரிந்துரைகள் அரசின் பரிசீலனையில் உள்ளது. ஏற்கனவே கேரளா, கர்நாடகா, ஆந்திரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் குறைந்தபட்ச கூலி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மகராஷ்டிராவில் தனிச் சட்டமே உருவாக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஒரு மணி நேரத்திற்கு 27 ரூபாய். ஒரு நாளைக்கு ரூ.180. கர்நாடகாவில் ஒரு நாளைக்கு ரூ.120. ஆந்திராவில் ரூ.150 என கூலி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு 200 ரூபாய் 40 காசு என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தினசரி சம்பளம் ரூ.200 தருவதற்கு கூட ஆட்சேபம் இல்லை. ஆனால், ஒரு மணிக்கு ரூ.30 என்பதும், குறைந்தது 4 மணி நேரம் வேலை பார்த்தால் ரூ.120 தர வேண்டும் என்பதையும் ஆட்சேபிக்கிறது பிளாட் ஓனர்ஸ் சங்கம். ஒரு பெண்ணால் இரண்டு மூன்று வீடுகளில் வேலை பார்க்க முடியும். அதனால் இந்த சம்பளம் கொஞ்சம் அதிகம் என்பதும் அவர்கள் கூறும் வாதம்.
மற்ற மாநிலங்களில் நிர்ணயிக்கப்பட்ட கூலி குறைவானது. பல ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்டது. திருத்தியமைக்க வேண்டும் என்று அந்த மாநிலங்களில் போராட்டம் எழுந்துள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.30 என்பது நியாயமானது. குறைக்கக் கூடாது என்கிறார் தமிழ்நாடு வீட்டு வேலை தொழிலாளர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் கிளாரா.
மேலும் மக்கள் தொகை கணக்கெடுப்பில், வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்கள் பற்றியும் விவரங்களை சேகரிக்க வேண்டும் என்கிறார்.
வேலை செய்யும் பெண்கள் மற்றும் ஊழியர்கள் தவறு செய்யாத அளவுக்கு விழிப்புடன் இருப்பது வீட்டுக்காரர்களுடைய கடமை என்கிறது பிளாட் ஓனர்ஸ் அசோஷியேசன்.
வீட்டு வேலைக்கு ஆட்களை அமர்த்தும் போது கவனிக்க வேண்டிய டிப்ஸ்...
சில வீடுகளில் வீட்டு வேலை செய்பவர்களை முழு நேரமும் தங்க வைப்பார்கள். வேலைக்கு செல்லும் பெற்றோர், தங்கள் குழந்தைகளை கவனித்துக் கொள்ளவும், பிள்ளைகள் தங்கள் வயதான பெற்றோர்களை கண்காணித்துக் கொள்ளவும் இப்படி ஆட்களை வைத்துக் கொள்கிறார்கள். அந்த நேரத்தில் சம்பந்தப்பட்டர்களை எப்படி கையாளுவது என்ற பயற்சியும், விவரமும் வீட்டு வேலை செய்பவர்களுக்கு அவசியம். மேலும் டாக்டர்களிடம் ஆலோசனை பெறும்போது அவர்களையும் அழைத்துச் செல்வது நல்லது.
வீட்டு எஜமானர்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது. அவர்கள் குழந்தைகளையும், முதியவர்களையும் எப்படி நடத்துகிறார்கள் என்பதை அறிய வேண்டும்.
வீட்டு பொருட்களை பத்திரப்படுத்துவது அவசியம். அவசியமான பொருட்களை மட்டும் கையாள விட்டால் போதுமானது.
வீட்டு வேலை செய்பவர்களை வீட்டில் இருப்பவர்களிடம் இருந்து மட்டுமல்ல; பக்கத்து வீட்டு வில்லன்களிடம் இருந்து காப்பாற்றுவதும் அவசியம். அது அவர்களுக்கு மட்டுமல்ல; வீட்டுக்காரர்களுக்கும் நல்லது. வேலை பார்க்கும் பெண்களிடம் அக்கம்பக்கத்து வீட்டுக்காரர் பற்றிய விவரங்களை சொல்லி வைக்க வேண்டும். இந்த எச்சரிக்கை உணர்வு அடுக்குமாடி குடியிருப்பில் கட்டாயம். அவசர உதவி எண்களை வீட்டில் எழுதி வைத்திருப்பதும், அதை பயன்படுத்த சொல்லித் தருவதும் முக்கியமானது.


 தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அரசுக்கு எதிராக கடந்த 2 மாதங்களாக மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கூட்டம் கூட்டமாக ஆண்களும் பெண்களும் சிவப்பு ஆடையுடன் பாலத்திலும், வீதியிலும் தங்கியிருந்து அமைதியான முறையில் பிரதமர் பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
பிரதமர் அபிசித் பதவி விலக வேண்டும் என வலியுறுத்திதான் கடந்த 2 மாதமாக போராட்டம் நடக்கிறது. ராணுவம் சுட்டு இதுவரை 50 பேர் இறந்துள்ளனர். 1600க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதற்குப் பிறகும் போராட்டம் தொடர்கிறது. போராட்டக்காரர்களை கடந்த வியாழக்கிழமை ராணுவம் சுற்றிவளைத்தது. அதிலிருந்து இன்று வரை 25 பேர் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். போராட்டக்காரர்கள் தங்கியிருக்கும் பகுதியை சுற்றியுள்ள உயர்ந்த கட்டிடங்களில் ராணுவத்தின் குறிபார்த்து சுடும் வீரர்கள் துப்பாக்கிகளுடன் கண்காணித்து வருகின்றனர். கல்வீசித் தாக்குபவர்களை இவர்கள் ஸ்னிப்பர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று வருகின்றனர். இதனால் போராட்டம் தீவிரமாகியுள்ளது. போராட்டக்காரர்களின் தலைவராக கருதப்படும் முன்னாள் ராணுவ ஜெனரல் சே டேங், வெளிநாட்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருக்கும்போதே, ராணுவத்தின் தோட்டா அவரின் தலையை பதம் பார்த்தது. கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் அவர். பிழைப்பது கஷ்டம்தான் என்கிறார்கள் டாக்டர்கள். இதனால் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது. டயர்களைப் போட்டு கொளுத்தி வருகின்றனர் போராட்டக்காரர்கள். பிரச்னையை தீர்க்க தாய்லாந்து மன்னர் இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர். அவர் தலையிட்டால் அரசுடன் பேச்சு நடத்தத் தயார் என்றும் கூறியுள்ளனர்.
ஆனால், போராட்டத்தை ஒடுக்குவதில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. போராட்டக்காரர்கள் தங்கியுள்ள பகுதியில் குடிநீர், மின்சாரத்தை துண்டித்து விட்டது அரசு. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துவிட்டு, ஊரடங்கு பிறப்பிக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய தீவிரவாத போராட்டத்தை ஒடுக்க முடியும். தீவிரவாத அமைப்பையே வேரறுக்க முடியும். ஆனால் அமைதியாக நடக்கும் மக்கள் போராட்டத்தை எந்த அரசும் ஒடுக்கியதாக சரித்திரம் இல்லை. இதை தாய்லாந்து அரசும் உணரும்.


உலக கோப்பை டி20 இரண்டாவது அரைஇறுதிப் போட்டிநேற்று இரவு செயிட் லூசியாவில் நடந்தது. மழை காரணமாக போட்டி சற்று தாமதமாக தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பீல்டிங்கை தேர்வு செய்தது. கம்ரன் அக்மல், சல்மான்பட் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். இவர் கள் ஆஸ்திரேலிய வீரர்களின் பந்து வீச்சுகளை அடித்து நொறுக்கி ரன்களை சேர்த்தனர்.

இந்த ஜோடி 82 ரன்களை சேர்த்து வலு வான அடித்தளம் அமைத் தது. அணியின் ஸ்கோர் 82 ஆக இருந்தபோது ஜான்சன் பந்தில் வார்னரிடம் கேட்ச் கொடுத்து கம்ரன் அக்மல் (50) அவுட் ஆனார். அதைத்தொடர்ந்து உமர் அக்மல் களமிறங்கினார். இவரும் அண்ணன் கம்ரன் அக்மலைப்போல நிலைத்து நின்று விளாசினார். இவர் கடைசி வரை அவுட் ஆகாமல் 56 ரன் எடுத்தார்.
20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் 6 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்தது.இந்த உலககோப்பை போட்டியில் இதுவரை அதிகபட்ச ஸ்கோர் 195, அதை நெருங்கும் அளவுக்கு நேற்று பாகிஸ்தான் அடித்து விளையாடியது.
அதன்பிறகு ஆஸ்திரேலியா களமிறங்கியது.வெற்றிக்கு 192 ரன் தேவை என்ற அதிக பட்ச ஸ்கோரை எட்டவேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்து ஆஸ்திரேலிய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. 2 வது பந்தில் வார்னர் டக் அவுட் ஆனார். 16 ரன்னில் வாட்சன் அவுட் ஆனார். அணியின் ஸ்கோர் 26 ஆக இருந்தபோது தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் வெளியேறினர்.
இதனால் மதில்மேல் இருந்த வெற்றிப்பூனை பாகிஸ்தானை நோக்கி திரும்பியது. இந்த நிலையில் கேமருன் ஒயிட், மைக் ஹஸ்சிஇருவரும் ஆஸ்திரேலிய அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர். ஒயிட் 43 ரன்னில்ஆட்டமிழந்தார்.
7 விக்கெட்டுகளை இழந்திருந்தஆஸ்திரேலிய அணி வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. இருப்பதோ கடைசி ஓவர் மட்டும்தான். 6 பந்தில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி இல்லாவிட்டால் தோல்வி என்ற நிலையில் மைக்கேல் ஹஸ்சியும், ஜான்சனும் களத்தில் இருந்தனர். சுழல்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் கடைசி ஓவரை வீச வந்தார்.
முதல் பந்தை சந்தி த்த ஜான்சன் ஒரு ரன் எடுத் தார். இன்னும் 5 பந்தில் 17 ரன் தேவை என்ற நிலையில் 2வது பந்தை சந்தித்த ஹஸ்சி அட்டகாசமாக ஒரு சிக்சர் அடித் தார். 3வது பந்தையும் அவர் சிக்சருக்கு விரட்ட பாகிஸ்தான் வீரர்களுக்கு கிலி பிடித்துக்கொண்டது.
4வது பந்தை பவுண்டரிக்கு அடித்து ஸ்கோரை சமநிலைக்கு கொண்டு வந்தார். இப்போது இரு அணிகளின் ஸ்கோரும் 191 என்ற நிலையில் இருந்தது. 2 பந்தில் ஒரே ஒரு ரன் எடுக்க வேண்டும் என்ற நிலையில் அஜ்ம லின் 5&வது பந்தில் ஹஸ்சி மீண்டும் இந்த ஓவரின் மூன்றாவது சிக்சரை அடிக்க ஆஸ்திரேலியாத்ரில் வெற்றி பெற்றது.19.5 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு ஆஸ்திரேலியா 197 ரன்களை எடுத்தது.
இந்த போட்டித்தொடரில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஹஸ்சி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தான் தரப்பில் முகமது ஆமிர் 3 விக்கெட்டுகளையும், அப்துர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளையும்,சயீத் அஜ்மல், அப்ரிடி தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
கடந்த உலக கோப்பை சாம்பியனான பாகிஸ் தான் அரை இறுதியில் அபாரமாக ஆடியும் தோல்வியை சந்தித்து இறுதிப்போட்டிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. முன்னதாக முதல் அரை இறுதியில் இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது
இறுதிபோட்டி: அரைஇறுதி போட்டிகள் நிறைவு பெற்று உள்ள நிலையில் இன்று போட்டிகள் கிடையாது. நாளை இரவு பார்படாசில் நடைபெறும் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் மோதுகிறது.


 குழந்தைச் செல்வம், காசு பணம். இந்த இரண்டையும் விரும்பாதவர்களே இருக்க முடியாது. தனம், புத்திரம் இந்த இரண்டுக்கும் அதிபதி குரு பகவான். நம் ஜாகத்தில் குரு பலமாக இருந்தால் இந்த இரு யோகமும் தங்குதடையின்றி அமையும். கிரகங்களிலேயே சுப கிரகம் குரு. இவர் இருக்கும் இடம்தான் சங்கடங்களுக்கு ஆளாகுமே தவிர, இவரது பார்வை மிகவும் சக்தி வாய்ந்தது. இவரது பார்வை பல தோஷங்களை அகற்றிவிடும் வல்லமை கொண்டது. குரு 5, 7, 9 பார்வையில் பார்க்கும் இடங்கள் சுபிட்சம் பெறும். ‘அந்தணன் தனித்து நின்றால் அவதிகள் மெத்த உண்டு’ என்ற ஜோதிட வாக்கு இவரை குறிப்பதுதான். சமூக அந்தஸ்து, ஆன்மீக ஈடுபாடு, தர்ம காரியங்கள், நற்பணி நிலையங்கள், ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள் அமைத்தல், பள்ளி, கல்லூரிகள் கட்டுதல், வங்கி, அரசு கஜானா போன்ற இடங்களில் வேலை கிடைத்தல் நிதி, நீதித்துறையில் பணிபுரிவது, நீதிபதி, அரசு உயர்பதவிகள் போன்றவற்றை அளிக்கும் வல்லமை உடையவர் குரு பகவான்.
குருவின் அம்சங்கள் (ஆதிக்கம்)
கிழமை: வியாழன்
தேதிகள்: 3, 12, 21, 30
நட்சத்திரம்: புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
ராசி: தனுசு, மீனம். கடகத்தில் உச்சம்
நிறம்: மஞ்சள்
ரத்தினம்: புஷ்பராகம்
தானியம்: கொண்டைக்கடலை
ஆடை: தூய மஞ்சள்
குருவுக்கு உரிய தேதிகள், கிழமைகள், நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு பல யோகங்கள் உண்டாகும். மேலும் ஜாதகத்தில் கேந்திர, கோணங்களில் இருப்பதும் சிறப்பானதாகும்.
எந்த லக்னம்/ராசியில் பிறந்தவர்களுக்கு குரு பகவான் எந்த வகையான யோகங்களை தருவார்?
மேஷ லக்னம்/ராசி & பாக்ய ஸ்தான பலன்கள், கல்வியில் உயர் நிலை, நிதி, நீதித்துறையில் பணிபுரியும் யோகம்.
மிதுன லக்னம்/ராசி & வெளிநாடு செல்லும் வாய்ப்பு, மனைவி வகையில் யோகம், தொழில் மூலம் உயர்வு.
கடக லக்னம்/ராசி & வெளிநாட்டு தொழில் யோகம். பள்ளி, கல்லூரிகள் அமைக்கும் யோகம்.
சிம்ம லக்னம்/ராசி & திடீர் அதிர்ஷ்டங்கள். பிள்ளைகளால் யோகம்.
கன்னி லக்னம்/ராசி & கல்வி, கலை ஆகியவற்றில் யோகம். வெளிநாட்டு தொடர்புகள் உண்டாகும்.
விருச்சிக லக்னம்/ராசி & வங்கி, நீதித்துறையில் உயர் பதவிகள். சொந்த நிறுவனம், பைனான்ஸ் கம்பெனி தொடங்கும் யோகம்.
தனுசு லக்னம்/ராசி & கல்வியில் மேன்மை, நிலபுலன்களால் யோகம்.
கும்ப லக்னம்/ராசி & சொல்லாற்றல், நிதி, நீதி போன்ற துறைகளில் யோகம்.
மீன லக்னம்/ராசி & கவுரவ பதவிகள். தொழில், வியாபாரத்தால் செல்வச் செழிப்பு, அந்தஸ்து, புகழ் உண்டாகும் யோகம்.
எந்த லக்னம், ராசியில் பிறந்தாலும் குரு நீச்சம் பெறாமலும் 6, 8, 12&ம் இடத்திலும் 6, 8, 12 ஆகிய அதிபதிகளுடன் சேராமல் இருக்க வேண்டும்.
வழிபாடு, பரிகாரம்
கும்பகோணம் அருகே உள்ள ஆலங்குடி குரு ஸ்தலமாகும். அங்கு பரிகார பூஜைகள் செய்து வழிபடலாம். நவ திருப்பதிகளில் ஒன்றான ஆழ்வார் திருநகரி குரு ஸ்தலமாகும். அங்கும் வழிபாடு செய்யலாம். திருச்செந்தூரில் முருகப் பெருமான் குரு வடிவாகவே அருள்புரிகிறார். எல்லா சிவன் கோயில்களிலும் தட்சிணாமூர்த்திக்கு வியாழக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடத்தி வழிபடலாம்.
‘ஓம் விருஷப த்வஜாய வித்மஹே
க்ரூணி ஹஸ்தாய தீமஹி
தந்தோ குரு பிரசோதயாத்’
அல்லது
‘ஓம் குரு தேவாய வித்மஹே
பிரம்மானந்தாய தீமஹி
தந்நோ குரு பிரசோதயாத்’ என்ற குரு காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம்.
‘ஓம்பிம் சிவய வசி குரு தேவாய நம’ என்ற மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லலாம்.
வியாழக்கிழமை விரதம் இருந்து மாலையில் சிவன் கோயிலுக்கு செல்லலாம். அங்கு தட்சிணாமூர்த்திக்கு நடக்கும் சிறப்பு பிராத்தனையில் கலந்துகொண்டு பக்தர்களுக்கும் ஏழைகளுக்கும் கொண்டைக்கடலை சுண்டல் வழங்கலாம்.


இந்திய திருநாட்டின் கலாச்சாரத்தை மற்ற நாடுகள் கண்டு ஆச்சரியப்படும் அளவிற்கும், மற்ற நாட்டு மக்கள் நம் நாட்டில் வாழ விருப்பபடுவதற்கும் நமது வாழ்க்கை நிலையே காரணம்.
   நம் நாட்டில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டை காலம் காலமாக கடைபிடித்து வருகிறார்கள். பலதரப்பட்டமக்கள் வாழும் இந்நாட்டில்
ஸ்ரீ ராமனைபோல வாழும்ஆண்மகனுக்கு மற்றவர்கள் மத்தியில் மதிப்பும்,
மரியாதையும் உண்டு.ராமனைபோல வாழ்க்கை நடத்த நமதுவிதி ஒத்து
வந்தால் தான் நாம் வாழமுடியும்.நவகோள்களின் அருளால் மண்ணுலகம்
ஜீவிக்கும்.நமக்கு கிரகங்கள் சாதகமற்று இருந்தால் பல தீயபழக்கங்களிலும்,ஒன்றுக்கு மேற்பட்ட பெண்ணை திருமணம் செய்ய
நேரிடுகிறது .
   ஜோதிடரீதியாக,ஒருவனுக்கு ஒருத்தி என வாழும் அமைப்பு யாருக்கு உண்டாகிறது என பார்ப்போம்.
          ஜென்ம லக்னத்திற்கு 2 ஆம் வீட்டை வைத்து குடும்ப வாழ்க்கை பற்றியும் 7 ஆம் வீட்டை வைத்து மனைவி அல்லது கணவனை  பற்றி மிக தெளிவாக கூற முடியும்.
     ஜென்ம லக்னத்திற்கு 2 ,7 ஆம் வீடுகள் பலம் பெற்று அசுபர் சேர்க்கை இல்லாமல் இருந்தால் அமைதியான திருமணவாழ்க்கை உண்டாகிறது.
ஜென்ம லக்னத்திற்கு 2 ,7 க்கு அதிபதிகள் ஆட்சி,உச்சம்,திக் பலம் பெற்ற கிரகத்துடன் சேர்க்கை பெற்று இருந்துஅசுபர்  சேர்க்கை இல்லாமல் இருந்தால் ஒரு தாரம் உண்டாகிறது.அதுபோல் 2 ,7 க்கு அதிபதிகள் கேந்திர,திரிகோண ஸ்தானத்தில் இருந்தாலும் ஒரு தாரம் உண்டாகிறது.
    7 ஆம் அதிபதி சுபகிரகமாக இருந்து குரு சேர்க்கை அல்லது பார்வை பெற்று இருந்தால் ஒரு மனைவி ஏற்படுகிறது.குரு புதன் இணைந்து நவாம்சத்தில் சூரியன் வீடான சிம்மதிலோ,செவ்வாய் வீடான மேஷம்,விருச்சிகத்திலோ இருந்தால் ஒரு மனைவி மட்டுமே உண்டாகிறது.7ஆம்வீடு குருவீடாக இருந்து குரு ஏழாம்வீட்டை
பார்வை செய்தால்  ஒரு தாரம் உண்டாகிறது.புதன் ஜென்ம லக்னத்திற்கு
 7 ஆம் வீட்டில் இருந்து நவாம்சத்தில் குரு வீட்டில் அமைந்தாலும் ஒரு தாரம் உண்டாகிறது
         நவகிரகங்களில் முக்கிய கிரகமான சூரியன்,சந்திரன் இணைந்து ஜென்ம லக்னத்தில் இருந்தாலும் 6 ,12 ல் அமைந்து இருந்தாலும்  ஒரு தாரம் உண்டாகிறது.
அதுபோல சூரியன் 6 ,12 ம் வீட்டில் இருந்தால் ஒரு தாரம் உண்டாகிறது.
       களத்திரஸ்தானமான7ஆம்அதிபதிஅசுபகிரகசேர்க்கைஇன்றி நவாம்சத்தில்
சூரியன்வீடானசிம்மதிலோ,அல்லதுசெவ்வாய் வீடான  மேஷம்,
விருச்சிகத்திலோஅமைந்தால்  ஒருதாரம்உண்டாகிறது.அதுபோல
7ஆம்வீடுசிம்மம்,விருச்சிகம்,மீனமாக அமையும் ஜாதகருக்கு ஒரு தாரம் மட்டும் உண்டாகிறது.
        மேலும்  7 ஆம் வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட பாவகிரகங்கள் இணைந்து அமைந்து இருப்பதும்,7 ஆம் அதிபதி ஒன்றுக்கு மேற்பட்ட பாவிகள் சேர்க்கை பெற்று இருப்பதும்,களத்திரகாரகன் சுக்கிரன் ஒன்றுக்கு மேற்பட்ட பாவிகள் சேர்க்கை பெற்று இருப்பதும் நல்லது அல்ல.கிரக சேர்க்கை எவ்வகையாக இருந்தாலும் பொன்னவன் என்று போற்றப்படும் குருபகவானின் பார்வை 7 ஆம் வீட்டிற்கோ,7 ஆம் அதிபதிக்கோ கிடைக்க பெற்றால் நல்லது உண்டாகிறது.
      வாசகர்கள் அனைவரும் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்தும்!
                                           அன்புடன் ஜோதிடர் மதி


அரசு நிர்ணயித்த கல்வி கட்டணத்தை எதிர்த்து தனியார் பள்ளி நிர்வாகங்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன. பள்ளிகளில் அநியாய கட்டணம் வசூலிப்பது நாடறிந்த விஷயம். தமிழகத்தில் 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட தனியார் பள்ளிகள் இருக்கின்றன. இவற்றில் நியாயமான கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளும் இருக்கக்கூடும். நிர்வாகத்துக்கு நியாயமாக தோன்றுவதெல்லாம் பெற்றோருக்கும் அப்படி தெரிவதில்லையே?
            கல்வி வியாபாரமாக மாறி ஆண்டுகள் ஓடிவிட்டன. எந்த வியாபாரத்திலும் குறிக்கோள் ஒன்றுதான். லாபம் ஈட்டுவது. மக்களும் அதை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், அநேக நிர்வாகங்கள் அதிகபட்ச லாபத்தை குறிக்கோளாக்கிக் கொண்டன. நன்கொடை வசூலிக்க விதித்த தடையை தாண்ட புதுப்புது வழிகளை கண்டுபிடித்தனர். சென்னையில் ரயிலேறி கன்னியாகுமரி சென்று, அங்கிருந்து பஸ் பிடித்து திருவனந்தபுரம் போய் ஜூ, கோயில், பீச் பார்த்துவிட்டு மறுநாள் திரும்பும் சுற்றுலாவுக்கு தலா ஆறாயிரம் கட்டணம் வசூலித்தால் பெற்றோர் மனம் குமுறாதா? அடிப்படை வசதிகள் செய்துதர தனித்தனியாக கட்டணம் வசூல் செய்த பள்ளிகள் பல உண்டு. அரசுக்கு வந்து குவியும் புகார்களை பட்டியலிட்டால் பள்ளி நிர்வாகிகளை மக்கள் வேறு மாதிரி பார்ப்பார்கள்.
இந்த நிலைக்கு வந்த பிறகே அரசு நடவடிக்கையில் இறங்கியது. தடாலடி உத்தரவு பிறப்பிக்கவில்லை. நீதிபதி தலைமையில் குழு அமைத்து ஆய்வு செய்து அதன் அடிப்படையில் கட்டண நிர்ணயம் செய்துள்ளது. இந்த கட்டணம் வசூலித்தால் ஆசிரியர்களுக்கு 30 முதல் 40 ஆயிரம் சம்பளம் நாங்கள் எப்படி கொடுக்க முடியும் என்று சில நிர்வாகிகள் கவலைப்படுவதை பார்த்து ஆசிரிய சமுதாயம் வாயடைத்து நிற்கிறது. பெரும்பாலான தனியார் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் 15, 20 ஆயிரம் வாங்கிக் கொண்டு காலத்தை ஓட்டும் நிலையில், அதைவிட இரு மடங்கு தரும் பள்ளிகளை அடையாளம் காட்டினால் பாராட்டு விழா நடத்தலாம்.
      மேல்முறையீடு செய்ய வாய்ப்பிருக்கும் சூழலில், பள்ளிகளை திறக்க மாட்டோம் என நிர்வாகிகள் மிரட்டுவதில் நியாயம் இல்லை. குறைகளை சரி செய்துகொள்ள இது வாய்ப்பு. அதை விடுத்து, கட்டாய இலவச கல்வி சட்டம் அமுலுக்கு வந்துள்ள நேரத்தில் அரசுடன் மோதலுக்கு ஆயத்தமாவது நிர்வாகங்களுக்கு இழப்பாக முடியும். மாணவர்களின் படிப்பு பாழாவதை எந்த அரசும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

Powered by Blogger.
free counters


முக்கிய செய்திகள்

|

FM RADIO


Followers

Sample Widget